அஷ்ரபை கனவில் கண்டேன் தலைவரே சுகமா என்றேன்..

ஷ்ரபை கனவில் கண்டேன்
தலைவரே சுகமா என்றேன்..

கொஞ்சமும் சிரிக்கவில்லை
கோபம் என நினைத்துக் கொண்டேன்...


தொண்ணூறின் மழலை நீ
தலைவன் என எப்படிச் சொல்வாய்
நான் தலைவன் என எவ்வழி அறிந்தாய்...?

ஆடிப்போனேன் நான்
அவர்தானா இவர் என்று....

ஐயா பெரியவரே ..!

அஷ்ரப் என்பது உம் பெயரோ ..?
சம்மாந்துறை உன் ஊரோ..?
மதீனாக்கிளி உம் தாயோ...?
ஹுசைன் விதானையார் உம் தகப்பனாரோ.. ?

இத்தனைக்கும் ஆம் என்றார் ..

இன்னும் சில கேள்வியுண்டு என்றேன் .....

இயம்பும் என இடம் தந்தார்

தொண்ணூறுகளின்
பேய்களும் வராத
வல்லூறு பறந்த இரவுகள்
விடியவே மாட்டாது என்று சொல்ல
விடியும் விடியும் என
வீதிகள் தோறும் சொன்னது உண்மைதானே...?

ஆம் என்றார்....

நடு நிஷிகளில் காத்திருக்கும்
புலி தின்னும் மனிதர்களுக்கு
விடுதலைச் சூடு கொடுத்த
உதயசூரியன் நீதானே ...?

ஆம் என்றார்...

இலங்கைத் தீவில்
இன்னுமொரு இனம் உண்டு என
கொன்னாமல் சொன்னது நீதானே...?

ஆம் என்றார்....

நாமும் தேசியமே
நமக்கென்றும் வேர் உண்டு
நாம் வாழ நிலமுண்டு

நல்லதொரு கலாச்சாரம்
பேர் பெற்ற பண்பாடு
தொன்மை மிகு வரலாறு
தனித்துவம் எமக்குண்டு என
பாரதிர முழங்கியதும் நீயோ ..?

ஆம் நானேதான்.....

அப்படியானால்....உம்மைத் தலைவர் என
நினைத்ததில் என்ன தவறு...

கொஞ்சம் சிரித்தார்...

ஒரு தவசியின் பக்குவமும்
சாணக்கியனின் சொரூபமும்
கணத்தில் மின்னி நிதானத்தில் உறைந்தது

உம்மைத் தலைவர் என பல கூட்டம்
பகலிரவாய் மேடை போட்டு
பல இலட்சம் போஸ்டர் ஒட்டி
தலைவர் தலைவர் என தர்பாரே நடக்கிறது...

ஆனால் உமது கொள்கைகள் என
நூலகங்களிலும் பழைய காகிதக் கடைகளிலும்
நான் படித்தறிந்து பார்க்கையிலே
பாவம் நீர் ஐயா....பரிதாபம் உம் வாழ்க்கை என்றேன்....

நீ வளர்த்த விடுதலை விருட்சங்கள் எல்லாம்
பணத்தை வாங்கிக் கொண்டு பெயர்களை மாற்றி
பிளாஸ்டிக் மரங்கள் என மாறிக்
கருத்தடை செய்து மலட்டு மரங்களாகி
இரு தசாப்தம் தாண்டியதை
இன்னுமா அறியவில்லை என்றேன்....

நிறுத்து மகனே
நிதானமாய்க் கேள்....

என்னைப் படைத்தவன்
இங்கே அழைத்திட்டான்..

நானும் நான் எனும் அவனும்
இனி உனக்கும் உன் போன்ற எவர்க்கும்
ஏதும் சொல்ல இல்லை....

இருந்தாலும்.....

நான் நட்ட மரம் ஒன்றின்
கிளைகளில் பூக்கும் பூக்களும்
அதன் பூக்களில் பிறக்கும் காய்களும்
அவை கனிந்த பின் வரும் பழங்களும்
பழுத்த பின் விழும் விதைகளும்
அவை வீழ்ந்த பின் முளைக்கும்
சிறு விருட்சங்களும் என
என் கொள்கைப் பாரம்பரியம்
கோட்டை கட்டி ஆளும்
இலங்கை தேசத்தின் இஸ்லாமியரிடம்
விடை தேடி வா என்றார்...

இதுவரை தேடிய விடைகள் என
இருக்கும் விடைகள் சொல்லவா என்றேன்....

இயம்பும் சீக்கிரம் என்றார்....

நான் விடைகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.....

அஷ்ரப் விம்மிக் கொண்டிருந்தார்....

ஒரு கட்டத்தில்....

போதும் மகனே...!

நிறுத்தும் என்றார்....

அவர் அழுத சத்தத்தில்.....

அலி உதுமான் , எம் வை எம் மன்சூர்
சஹீட் காக்கா... இப்படி தியாகிகளும்...
சில ஜநாயகப் போராளிகளும்
ஆயுதங்களுடன் ஓடி வந்தனர்

அஷ்ரப் மாத்திரம் ஒரு பேனாவின்
தேய்ந்து போன முனையினை சீர்படுத்தியவாறு
மைக்குப்பியினை நிரப்பிக் கொண்டிருந்தார்....

கூடவே ஒரு குறிப்பெழுதி....

அவைகளை எங்கே எப்போது எப்படி வாசிப்பது
என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

ரனூஸ் முகம்மட் இஸ்மாயில்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -