“நாம் இலங்கையர்”என்ற ரீதியில் முஸ்லிம்களின் எதிர்காலசெயற்பாடுகள் சகவாழ்வுக்கு முன்னுரிமை வழங்குவதாக அமைய வேண்டும்.


மருதமுனை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுக்கும் அறிக்கை.
கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் சென்ற ஏப்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ சகோதரர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடாத்திய சம்பவத்தை மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:- “இஸ்லாம்” சாந்தி சமாதானம் சக வாழ்வு என்ற அர்த்தத்தைக் கருதுகின்ற ஒரு அறபுச் சொல் என்ற வகையில் அதிலிருந்து பெயரெச்சமாக வரும் முஸ்லிம் என்ற சொல் “சாந்தியளிப்பவன்” சமாதானத்தை உருவாக்குபவன் என்ற அர்த்தங்களில் கையாளப்பட்டு வருகின்றது. எனவே இஸ்லாம் ஒரு போதும் வன்முறைச் சம்பவங்களையோ பயங்கரவாத தாக்குதல்களையோ தற்கொலை தாக்குதல்களையோ ஆதரிக்கவில்லை என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.
இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இலங்கை வாழ் முஸ்லிம் தலைவர்கள் ஏனைய சமயத் தலைவர்களோடு கைகோர்த்து நல்லிணக்கத்தை சகவாழ்வை அரசியலிலும், சமூகவியலிலும் வெளிப்படுத்தித் தேசபிமானிகளாக வாழ்ந்து வந்திருப்பதோடு முஸ்லிம் மக்களை அவ்வாறே வழிநடாத்தியும் வந்திருக்கிறார்கள் என்பது ஏற்றுகொள்ளப்பட்ட மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

முழு நாடும் சர்வதேசமும் ஆழ்ந்த கவலையில் முழ்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் அடிப்படைவாதிகளிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவே இந்த அசம்பாவிதங்களில் உயிர்நீத்த சகோதர நெஞ்சங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு ஆழ்ந்த ஆனுதாபங்களை மருதமுனை வாழ் மக்கள் தெரிவிப்பதோடு இந்நாடு எதிர்கொண்டுள்ள துயரத்தில் மருதமுனை மக்களாகிய நாமும் பங்கெடுத்து துக்கம் அனுஷ்டிப்பதோடு முடியுமான நிவாரண உதவிகளை மேற்கொள்ள முன்வரவேண்டுமென எமது சம்மேளனம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.
இவ்வேளை 02 குர்ஆனிய சிந்தனைகளை சம்மேளனம் நினைவூட்ட விரும்புகிறது.
1. ஆதமுடைய சந்ததிகளை கடலிலும், தரையிலும் நாம் கண்ணியப்படுத்தினோம்.
2. யார் உரிமையின்றி ஒரு ஆத்மாவை கொலைசெய்தாரோ அவர் முழு மனித சமூகத்தையும் கொலைசெய்தவராவார்.
இந்த நெருக்கடியான சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்துவோம். தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஏலவே கண்டு கொள்ளவும், உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தவறியமை நாம் அனைவரும் விட்ட மாபெரும் வரலாற்றுத்தவறாகும்.

எமது அசமந்தப்போக்கின் விளைவாக விலைமதிக்க முடியாத பல அப்பாவி மனித உயிர்களை இழந்து தவிக்கின்றோம். இனி உடன் செய்ய வேண்டிய விடயங்களில் கவனத்தைக் குவிப்போம். இலங்கையர் என்ற வகையில் பேதங்களை மறந்து இதய சுத்தியுடன் ஒன்றிணைவோம் தீவிரவாத விஷக்கிருமிகளை அடையாளம் கண்டு துடைத்தெறிவோம். நம்தாய் மண்ணைக் காப்பாற்ற நாளைய தலைமுறையின் இம்மண்ணில் அமைதியாக வாழ்வதை உத்தரவாதப்படுத்துவோம்.
எனவே தற்போதய சூழ்நிலையை கருதி மருதமுனை ஜம்இயதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனம் பின்வரும் மேலான ஆலோசனைகளை முன்வைக்கின்றது.

1. தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பள்ளிவாசல்கள், பாடசாலைகள், மத்ரஸாக்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் போன்றவற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்ததந்த நிறுவனங்களின் வசதிக்கேற்ப ஒரு பாதுகாப்புப் பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்ளல்.

2. பிரத்தியேக வகுப்புக்களின் நிறுவனங்கள் தமது பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக எதிர்வரும் 29ம் திகதிவரை இடைநிறுத்துவதுடன் வெளியிடங்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்வதை நிறுத்திக் கொள்ளல்.
3. மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இஸ்கூட்டிகளை; பள்ளிவாசலுக்கு கொண்டு செல்வதை இயன்றளவு குறைத்துக் கொள்வதுடன் மேலும் வாகன தரிப்பிடத்தில் இடைநிறுத்துபவர்கள் தங்களின் பெயர்களையும், தொடர்பு இலக்கங்களை அதில் குறிப்பிடல் வேண்டும்.

4. தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பொதுஇடங்களின் ஒன்று கூடுதல், விளையாட்டு சுற்றுப்போட்டிகளை நடாத்துதல், மார்க்க விளக்க வகுப்புகளுக்கு செல்லுதல் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இரண்டிற்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்பவர்கள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுதல் அத்துடன் அவ்வாகன சொந்தக் காரர் தத்தமது வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் மற்றும் உரிய வாகன ஆவணங்களை வைத்துக்கொள்ளல் வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -