இந்நாட்டில் முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லா சமூகங்களுடனும் இணைந்து வாழ்கிறார்கள்.சட்டமுதுமானி வை.எல்.எஸ்.ஹமீட்


எஸ்.அஷ்ரப்கான்-
ந்நாட்டில் முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லா சமூகங்களுடனும் இணைந்து வாழ்கிறார்கள். எப்போதும் அமைதியை விரும்புகின்ற ஒரு சமூகமாகவே முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறு சட்டமுதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் இன்று (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
அன்று காத்தான்குடிப் பள்ளிவாசல், சதாம் ஹசைன் கிராமம், அழிஞ்சப்பொத்தானை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, அக்கரைப்பற்று, மூதூர், வட புல வெளியேற்றம்; என்று முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு பூராகவும் துவம்சம் செய்யப்பட்டபோது அவர்கள் ஆயுதம் தூக்கவில்லை.
வட கிழக்கிற்கு வெளியே மாவனல்லையில், அளுத்கமையில், கின்தோட்டையில், திகனயில் என்றெல்லாம் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் ஆயுதம் தூக்கவில்லை. இவ்வாறு அமைதியான சமூகம் என்று ஆயிரம் வருடங்களுக்குமேலாக பெயரெடுத்த ஒரு சமூகம் ஒரே நாளில் ஒரு பயங்கரவாவாத சமூகமாக பார்க்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்த தீவிரவாத குழு தொடர்பாக இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் பிரமுகர்கள் ஏற்கனவே அரசுக்கு தகவல் வழங்கியும், தாக்குதலுக்கு முன்பதாக இந்தியா இது தொடர்பாக எச்சரித்திருந்தும் அதிகாரிகள் அசமந்தமாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. சிலவேளை முஸ்லிம்கள் மீது வைத்த அபரிமித நம்பிக்கை அந்த அசமந்தத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
இந்தப் பயங்கரவாதம் துடைத்தெறிப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை தாக்குதல் நடந்த கணத்திலிருந்து இப்பயங்கரவாதிகளுக்கெதிராக குமுறிக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது ஒருமைப்பாட்டை முழுமையாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கிருந்து வந்தது தீவிரவாதம்?
——————————————

இவ்வாறு அமைதியை விரும்புகின்ற ஒரு சமூகத்திற்குள் எங்கிருந்து இத்தீவிரவாதம் வந்திருக்கலாம்? ஒரு சிறு எண்ணிக்கையானவர்களாக அவர்கள் இருந்தபோதும்! அதைத் துடைத் தெறிவது எப்படி? என்பதை ஒரு சமூகம் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டியது, நமது கடமையாகும். தவறின், இதனால் பாதிக்கப்படப்போவது நாம்தான்.
இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பாக பல பல ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. அரசியலுக்காக உள்நாட்டு சக்திகள் என்றும் தமது பிராந்திய கேந்திர நலனுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்காக வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டன என்றும் ISIS என்றும் பல அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இங்கு நாம் சிந்திக்க வேண்டியது பின்னாலிருந்து இயக்கிய சக்திகள் எதுவாக இருந்தபோதும் செயற்பட்டவர்கள் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்களே, என்பதாகும். அதனால்தான் இது குறித்து நாம் ஆவேசப்படுகின்றோம், வேதனை அடைகின்றோம்.

நோக்கமென்ன?
———————-

இயக்கியவர்களின் நோக்கம் எதுவாக இருந்தபோதும் இயங்கியவர்களின் நோக்கமென்ன? இது ஒரு சாதாரண தாக்குதல் அல்ல. இது ஒரு தற்கொலைத் தாக்குதல். இதில் ஈடுபட்டவர்கள் பணத்தாசையில் செய்திருக்க முடியாது. ஏனெனில் அவ்வாறாயின் அந்தப் பணத்தை அவர்கள் அனுபவிக்க உயிர்வாழ வேண்டுமென்றே விரும்புவார்கள். மட்டுமல்ல, இதில் ஈடுபட்டவர்கள் நன்கு படித்தவர்களும் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் என்று கூறப்படுகின்றது.
பணம் காரணமில்லையெனில் ஏதாவது ஒரு பாரிய இலட்சியம் இருந்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தற்கொலைதாரியாகி உயிர்நீத்ததற்குப் பின்னால் தமது சந்ததியினருக்கென்று ஒரு நாடு என்கின்ற இலட்சியம் அவர்களுக்கிருந்தது. அந்த இலட்சியத்திற்கு முன்னால் அந்த உயிர் அவர்களுக்கு ஒரு தூசாகப்பட்டது. முஸ்லிம்களுக்கு அவ்வாறு ஒரு இலக்கு, இலட்சியம் இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை. இருப்பது சாத்தியமுமில்லை. அவ்வாறாயின் அவர்களை இந்த நிலைமைக்கு கொண்டுசென்றது எது?
யுத்தம் நிறைவுபெற்றதும் பேரினவாதம் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களை நோக்கித் திரும்பியது உண்மை. அது சில வாலிபர்களை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியிருக்கலாம். அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது இத்தற்கொலைத் தாக்குதலை நடாத்தி அடையமுற்பட்டதென்ன? குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்றுமே இலங்கையில் இனமுரண்பாடு இருந்ததில்லை அந்நிலையில் இத்தாக்குதல் ஏன்? இதைப் பற்றி சிந்திப்பது நமது கடமையில்லையா?
இங்கு ஒன்று புரிகிறது. அவர்கள் உள்ளத்தில் விரக்தி இருந்திருக்கலாம். அது முஸ்லிம்களுக்கெதிரான இலங்கை நிகழ்வுகள் மாத்திரமல்ல; சர்வதேச நிகழ்வுகளாகவும் இருக்கலாம். ஆனாலும் அவர்களின் உயிர்களை இழந்து அடையமுற்பட்டது பணமுமல்ல; தனி நாடுமல்ல; என்றால் அவர்களது இலக்கு “ மறுமை விமோசனமாகத்தான் இருக்கமுடியும். எனவே, அவர்கள் மறுமையின் ஆசையினை ஊட்டி “ மூளைச் சலவை” செய்யப்பட்டிருக்கிறார்கள்; என்பது தெளிவாகின்றது. இதற்காக மார்க்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சாய்ந்தமருதில் உயிரிழந்த தற்கொலைதாரிகளும் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் மறுமையைப் பற்றியும் சுவர்க்கத்தைப்பற்றியுமே பேசுகிறார்கள். தனது மனைவி, பிள்ளைகளையும் கூடவே அழைத்துவந்து உயிர்ப்பலி கொடுத்தால் அவர்களுக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்புகின்ற அளவு மூளைச்சலவை நடைபெற்றிருக்கிறது.

வெறுமனே ஒருவனைக் கூட்டிவந்து, முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கிறது; நீ தற்கொலைதாரியாக மாறி இவர்களைக் கொல்லு, உனக்கு சுவர்க்கம் இலகுவாக கிடைக்கும்; என்றால் அவ்வளவு இலகுவாக அவன் தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்துவிடுவானா? நிச்சயமாக இல்லை.

முதலாவது, அவனிடத்திலும் ஏதோ ஒருவகை தீவிர சிந்தனை இருக்கவேண்டும். அந்த சிந்தனை வெறும் உலகத்தோடு தொடர்புடையதாக இருந்தால் அவன் உலக இலட்சியத்தின் மூலம்தான் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைதாரியாக மாற்றப்படலாம். இங்கு அடைவதற்கு விடுதலைப்புலிகளைப்போல் உலக இலட்சியம் இல்லாதபோது அது மறுமை இலட்சியமாகத்தான் இருக்கவேண்டும்; அதற்கு மார்க்கம் அடிப்படையாக இருக்கவேண்டும்; என்றால் அவனிடம் மார்க்க விடயத்தில் தீவிர சிந்தனை இருக்கவேண்டும்.
மார்க்க விடயத்தில் தீவிர சிந்தனை உள்ளவனை மறுமையின் ஆசையைக்காட்டி மூளைச்சலவை செய்வது இலகுவாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே அவனது மார்க்கரீதியான தீவிர சிந்தனை என்பது பாதி மூளைச் சலவையாகும். அந்த பாதி மூளைச்சலவையில் இருப்பவனை தீயசக்திகள் சில சுயநல முஸ்லிம்கள் மூலமாக ஆயுத கலாச்சாரத்தை நோக்கித் திருப்புவதற்கு மிகுதிப் பாதி மூளைச் சலவையை செய்வதற்கு மறுமையின் ஆசையை ஊட்டலாம்.
இங்கு இருக்கின்ற அடிப்படை விடயம் என்னவென்றால் அவன் தெளிவாக சிந்திக்க முடியாதவன் என்ற அவனது பலயீனம்தான் அவனை ஏற்கனவே மார்க்கரீதியான தீவிர சிந்தனையை நோக்கி அவனை பாதி மூளைச்சலவைக்குட்பட உதவியது.
அவ்வாறு ஏற்கனவே பாதி மூளைச்சலவையில் இருப்பவர்களுள் சிந்தனைப் பலவீனத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சிலரை அதே மார்கத்தையும் மறுமையுயும் சொல்லி பயங்கரவாதியாக மாற்றப்படுகிறது. அடுத்தவர்களைக் கொலைசெய்து தானும் தற்கொலை செய்தால் தனக்கு எவ்வாறு சுவர்க்கம் கிடைக்கும்; என்றெல்லாம் அவன் அமைதியாக உட்கார்ந்து சிந்திக்குமளவுக்கோ அல்லது மார்க்க அறிஞர்களிடம் வினவுவதற்கோ முடியாத அளவு ஒரு வகைச் சிந்தனை போதை அவனுக்கு ஏற்றப்படுகின்றது.
எனவே, சுருக்கம் என்னவென்றால் பயங்கரவாத நோக்கமோ, ஆயுதம் தூக்கும் நோக்கமோ இல்லாமல் வேறு வேறு காரணங்களுக்காக மார்க்கத்தில் கடும்போக்குவாத சிந்தனையை நோக்கி பாதி மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைப் பலம் குறைந்தவர்களுக்குள்ளிருந்துதான் இவ்வாறான பயங்கரவாதிகள் உருவாக்கப்பட முடியும். அதன் விளைவை மொத்த சமூகமும் அனுபவிக்க வேண்டி வருகின்றது.
இந்தப்பின்னணியில்தான் ஆயுத நோக்கமற்ற முன்பாதி மூளைச்சலவை எவ்வாறு நம் சமூகத்தில் இடம்பெறுகிறது; என்பதை மிகவும் நுணுக்கமாக நாம் ஆராயவேண்டும். இந்த முன்பாதி மூளைச்சலவை தடுக்கப்படமுடியுமானால் பின்பாதிக்கான மூளைச் சலவைக்கான சாத்தியம் மிகவும் அபூர்வமாகவிடும்.
இந்த விடயத்தில் நாம் உணர்ச்சிகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்கக் கண்ணாடிபோடாமல் நடுநிலையாக சமூக கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டும்தான் உண்மை புரியும். இந்த முதல்பாதி மூளைச் சலவைதான் இயக்கவாதத்துடன் தொடர்புபட்டது. எனவே, இயக்கவாதம் தொடர்பாக சற்று ஆழமாக ஆராயவேண்டும்.

இயக்கவாதம்
——————

இஸ்லாம் 1400 வருடங்களுக்குமுன் தோன்றி இந்த உலகமெலாம் வியாபித்திருக்கின்றது. இஸ்லாம் இவ்வாறு வளர்ந்தது இயக்கங்கள் மூலமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இயக்கங்கள் தோன்றியது பிந்திய காலத்திலாகும். இயக்கங்கள் என்று தோன்ற ஆரம்பித்ததோ அன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளும் ஆரம்பித்தது; என்பது வரலாற்று உண்மையா? இஸ்லாம் வளர்ந்தென்பது வரலாற்று உண்மையா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
காலம் செல்லச்செல்ல இயக்கங்கள் அதிகரித்து இன்று எத்தனை இயக்கங்கள் நமது இந்த சிறிய நாட்டிலேயே இருக்கின்றன; என்று நமக்கே தெரியாத அளவு அதிகரித்திருக்கிறது.

சிந்தனைக்கு வேலை
——————————

இஸ்லாம் அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) என்ற ஒருவர் ஊடாக வந்து உலகெலாம் வியாபிக்க ஆரம்பித்தது. ஆனாலும் ஒரே இஸ்லாமாகத்தான் இருந்தது. காலங்களில் சிறந்த காலமாக மூன்று காலங்களைப் குறிப்பிட்டார்கள் (ஸல் ) அவர்கள். அந்தக்காலத்தில்தான் மத்ஹபுடைய இமாம்கள் தோன்றினார்கள்.
ஹதீஸ்களின்படி காலஞ்செல்லச் செல்ல இஸ்லாத்தில் குழப்பங்கள் கூடவே வாய்ப்பிருக்கின்றது. சுருங்கக்கூறின் இன்றைவிட நேற்று சிறந்ததாகும். நாளையைவிட இன்று சிறந்ததாகும். இதுதான் யதார்த்தம்.

புதிதாக தோன்றிய இயக்கங்கள்
——————————————

புதிதாக தோன்றிய இயக்கங்கள் என்ன கூறின? அதுவரை ஒரே இஸ்லாமாக நடைமுறைப்படுத்தப்பட்டவற்றில் பல பிழைகளைக் கண்டு, தாமே சரி என்றார்கள். அதாவது தங்களது காலத்தைவிட சிறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் பிழையான பாதையில் இருந்ததாகவும் தாமே சரியான பாதையில் இருப்பதாகவும் கூறினார்கள்.
அதன்பின்னால் வந்த இயக்கம் என்ன கூறினார்கள்? முன்னால் வந்தவர்கள், முந்திய இயக்கம் உட்பட அனைத்தும் பிழை, நாமே சரியான பாதை என்றார்கள். முந்திய இயக்கம் நாமே சரி என்றது. பிந்திய இயக்கம் இல்லை, நாமே சரியென்றது. அதேநேரம் (ஸல்) அவர்களில் இருந்து புறப்பட்டு இமாம்களால் வியாக்கியானப்படுத்தி தரப்பட்ட ஒரிஜினல் இஸ்லாம் எந்த இயக்கமுமில்லாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டே வந்தது.
தற்போது நமது நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு நாளுக்கு நாள் இயக்கங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த இயக்கங்களுக்கும் ஒரிஜினல் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
——————————————————

இஸ்லாம் என்பது குர்ஆனும் ஹதீஸும்தான் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. குர்ஆனை பலரும் புரியக்கூடியதாக இலகுவாக இறக்கியிருக்கின்றோம்; என்கின்ற இறைவன்தான் முழுக்கடலும் மையாக மாறினாலும் பொருளை எழுதி முடியாது, என்றும் கூறியிருக்கின்றான்.

குர்ஆன், ஹதீஸை ஒவ்வொரு தனிமனிதனும் சுயமாகப் புரிந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க முடியாது; என்பதனால்தான் உலமாக்களை நபிமாரின் வாரிசுகள்; என்றார்கள் ( ஸல் ) அவர்கள்.

இதன்பொருள் பாமரராகிய நமக்கு குர்ஆன், ஹதீஸுக்கு வியாக்கானம் தேவை. இந்த வியாக்கானத்தை உலமாக்கள்தான் தரவேண்டும். ஆனால் ஒவ்வொரு உலமாவும் சொந்தமாகத் தரமுடியுமா? குர்ஆன், ஹதீஸுக்கு காலத்திற்கு காலம், அல்லது இயக்கத்திற்கு இயக்கம், அல்லது மௌலவிக்கு மௌலவி வியாக்கியானம் வேறுபட முடியாது. கால ஓட்டத்திற்கு ஏற்ப சில புதிய சூழ்நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் சில வியாக்கியானங்கள் தேவைப்படுவது வேறு. ஆனால் அடிப்படை வியாக்கினங்கள் வேறுபட முடியாது. அன்றிருந்து இன்றுவரை ஒரே வியாக்கியான அடிப்படைதான் இருக்கமுடியும்.
இந்த வியாக்கானங்களின் அடிப்படையில்தான் அந்த சிறப்பான காலத்தில் மத்ஹபுடைய இமாம்கள் உருவானார்கள். பெரும் குத்புமார்கள், புகஹாக்கள் எல்லாம் தோன்றினார்கள்.அவர்கள் தொகுத்த சட்டங்கள், வியாக்கியானங்களை அதன்பின்னால் பல நூறு ஆண்டுகளாக வந்த உலமாக்கள் பிழைகாணவில்லை. புகாரீ இமாம்கூட ஒரு மத்ஹபைத்தான் பின்பற்றினார்கள். தன்னை அந்தளவு அறிவாளியக அவர்கள் கருதவில்லை. பின் தோன்றிய இயக்கங்கள்தான் பிழைகண்டன.
இன்று இருக்கின்ற இயக்கங்கள் நேற்றுவரை இருந்த இயக்கங்கள் எல்லாம் பிழை என்க, நாளை தோன்றுகின்ற இயக்கங்கள் இன்றைய இயக்கங்களும் பிழை என்பார்கள். ஒரு பிழைக்கு இன்னொரு பிழை, பிழையாகத் தெரிவதில் வியப்பில்லை. அதேநேரம் ஒரிஜினல் இஸ்லாம் 1400 ஆண்டுகளாக மாற்றமின்றி தொடர்கின்றது.

இயக்கங்களின் பிரச்சினை வியாக்கியானமே
———————————————————-

இந்த இயக்கங்களில் அதிகமானவை முன்வைக்கும் வாதம், மத்ஹபுக்களை அல்லது இமாம்களைப் பின்பற்றவேண்டும்; என்று எங்கே கூறப்பட்டுள்ளது? குர்ஆன், ஹதீஸைத்தான் பின்பற்றச் சொல்லப்பட்டிருக்கின்றது. குர்ஆன் இப்படித்தான் சொல்கிறது. ஹதீஸ் இப்படித்தான் சொல்கிறது; என்கிறார்கள்.

சிந்தனைப் பலம் குறைந்த, தெளிவு குறைந்தவர்கள் இவர்களது இந்தத் தந்திரக் கூற்றை சரிகாண்கிறார்கள். அங்குதான் வழிகேடு ஆரம்பிக்கின்றது. மார்க்கத் தீவிரவாதத்திற்கான வித்து நடப்படுகின்றது.
குர்ஆன், ஹதீஸைத்தீன் பின்பற்றவேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குர்ஆனும் ஹதீஸும் இன்று தமிழில், ஆங்கிலத்தில் என்று புரியக்கூடிய மொழிகளிலெல்லாம் இருக்கின்றது. இடையில் இவர்கள் ஏன் வியாக்கியானம் செய்யவேண்டும்? ஏனெனில் வியாக்கியானம் இல்லாமல் பாமரனால் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் உலமாக்கள் நபிமாரின் வாரிசுகளானார்கள்.
இங்கு எழுகின்ற பிரச்சினை என்னவென்றால் இமாம்கள், முன் சென்ற பெரும் உலமாக்கள் சொன்ன அல்லது ஏற்றுக்கொண்ட வியாக்கியானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம்; எனக்கூறிவிட்டு தமது சொந்த வியாக்கியானத்தை சந்தைப் படுத்த முனைவதுதான்.
நமக்குத் தெரியும். பி ஜே செயினுலாப்தீன் மத்ஹப்புக்கள், இமாம்களை நிராகரிக்கின்ற ஒருவர். குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றச் சொல்பவர். அவர் இஸ்லாம் தொடர்பாக நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் பெருமையாக கூறுவார்கள். சம காலத்தில் அவரைவிட இஸ்லாமிய ஆய்வாளர் இல்லை; என்றும் கூறுவார்கள்.
பல நூறு ஆண்டுகளாக பின்னால் வந்த உலமாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம்களின் ஆய்வுகளை, வியாக்கியானங்களை, சட்டத்தொகுப்புகளை ஏற்கக்கூடாது; என்பவர் நூற்றுக்கணக்கான புத்தகங்களை ஏன் எழுதவேண்டும்? மக்கள் ஏன் இவரது ஆய்வுகளை, வியாக்கியானங்களை வாசிக்க வேண்டும்; ஏற்கவேண்டும்; என இவரது ஆதரவாளர்கள் எப்போதாவது கேள்வி எழுப்பியிருக்கிறார்களா? இல்லை. ஏன்? இவருடைய புத்தங்கள் குர்ஆன், ஹதீஸா?
அது அவர்களின் சிந்தனைப் பலயீனம் இல்லையா? அதைப்பயன்படுத்தி அவர் இவர்களை மூளைச்சலவை செய்ததனால் அவர் என்ன வியாக்கானம் செய்தாலும், எந்த ஹதீஸ் மறுப்பைச் சொன்னாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது கிளையிலுள்ளவர்களது பேச்சில் ஒரு மூர்க்கத்தனம் இல்லையா?

ஒரு உதாரணம், தொழுகையில் சுஜூதுபோன்ற இடங்களில் துஆ கேட்க்க அனுமதியுண்டு. ஆனால் தொழுகையில் அரபியல்லாத மொழி பாவிக்கப்பட்டால் தொழுகை முறிந்துவிடும்; என்பது காலங்காலமாக வந்த உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயம். இவரதும் இன்னும் சிலரதும் வியாக்கியானம் வேறு மொழியில் துஆக் கேட்கலாம்; என்பது.

நாம் பாமரர்கள். நாம் சிந்தனைத் தெளிவுள்ளவர்களானால் பல நூறாண்டுகளாக உலமாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டை ஏற்போமா? இவர்களது நிலைப்பாட்டை ஏற்போமா? இவர்களது நிலைப்பாட்டை ஏற்று நமது தொழுகை முறிந்துவிட்டால்?

இவர்களுக்கு முன்னால் வந்த உலமாக்கள் அறிவு குறைந்தவர்கள், இவர்கள்தான் அறிவுகூடியவர்களா? அன்றைய உலமாக்களின் தனிப்பட்ட நடத்தை, ஒழுக்கம், பேணுதல் எவ்வாறு இருந்தது. இவர்களுடைய நடத்தைகள் எவ்வாறு இருக்கின்றது. தன்னுடைய இயக்கத்தைவிட்டு ஒருவர் விலகிவிட்டால் அவரை முகநூலில் நாறடித்து அவருக்கு அந்தப்பெண்ணுடன் தொடர்பு, இந்தப் பெண்ணுடன் தொடர்பு என்று எப்படி நாறடிக்கிறார்கள்.

இவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு ஒரு கூட்டம் இமாம்களை மறுத்து, முன்னோர் வியாக்கினங்களை மறுத்து இவர்களை நம்புகிறார்களே! இது வழிகேடு இல்லையா? இந்த வழிகேட்டை நியாயப்படுத்துவதில் இவர்களிடம் ஒரு மூர்க்கத்தனம் இல்லையா?
இவ்வாறு வழிகேடுகளை சரியானது; என நம்பும்போது இவ்வாறானவர்களை சுவர்க்கத்திற்கு ஆசைகாட்டி பயங்கரவாதியாக மாற்றுவது கடினமா?

நன்கு சிந்தியுங்கள், ஒரே குர்ஆன், ஒரே திருத்தூதர் ( ஸல்) அவர்களூடாக வந்த ஹதீஸ்கள். அவற்றிற்கெப்படி காலத்திற்கு காலம் வியாக்கியானம் மாறமுடியும்? அவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட சட்டங்கள் எவ்வாறு மாறமுடியும்?
இங்கு எழுகின்ற ஒரேயொரு கேள்வி, இந்த இரண்டு வியாக்கியானங்களில் எது சரி? அல்லது இவ்வியாக்கியானங்களின் அடிப்படையிலான யாருடைய சட்டம் சரி என்பதாகும். காலங்களில் சிறந்த காலத்தில் செய்யப்பட்ட, பல நூறு ஆண்டுகள் வந்த உலமாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல தலைமுறைகளால் பின்பற்றப்பட்ட வியாக்கியானங்கள், சட்டங்கள், சரியாக இருக்குமா? அல்லது புதிதாக முளைத்த இவர்களது புதிய வியாக்கியானங்கள், சட்டங்கள் சரியாக இருக்குமா? என்று சிந்திக்கின்றார்களா?
ஒரு மௌலவி ஒரு நாள் கூறுகிறார், அவர் ஜனாசா தொழுவிக்க ஒரு நாள் சென்றபோது ஏதோ ஒரு சந்தேகம் வந்துவிட்டதாம். உடனே Laptopஇல் உரிய தலைப்பை அடித்ததும் ஹதீஸ்கள் வந்ததாம். அவர் சந்தேகத்திற்கு விடை கண்டுவிட்டாராம்.
இவர் மறைமுகமாக சொல்ல வருவது எந்த கிதாபும் தேவையில்லை. யாருடைய வியாக்கியானமும் தேவையில்லை. எல்லாம் அவரே! அப்படியானால் குர்ஆன், ஹதீசைத் தவிர அனைத்துக் கிதாபுகளையும் எரித்துவிடலாமே! உலமாக்களே தேவையில்லையே! நீங்கள் குர்ஆன், ஹதீஸ் அல்லவே. நீங்கள் மனிதர்கள். ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸை சொந்தமாக விளங்கிக்கொண்டு வாழட்டும்; என்று ஒதுங்கி இருங்களேன்.

உங்களுக்கு, எதற்கு Laptop உம் பயானும். முன்னைய காலத்தில் உலமாக்களில் உள்ளத்தில் இருந்தது; மார்க்கம். இப்பொழுது Laptop இல் தான் இருக்கிறது. இதுதான் இன்றைய நிலை.

ஒரு மௌலவியின் பக்தர் எழுதுகிறார், ‘ அந்த மௌலவி ஆரம்பத்தில் அந்த ஊரில் பயான்கள் செய்தபோது யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லையாம்; இப்பொழுது நிறையப்பேர் ஏற்றுக்கொள்கிறார்களாம். அப்படியானால் அந்த ஊரில் அவர் ஏதோ புதிதாக சொல்ல வந்ததனால்தானே அவரை ஆரம்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவரை அவ்வூரில் இருந்த உலமாக்கள் மக்களை பிழையாகவா வழிநடாத்தினார்கள்? அல்லது இவர் வழிக்கெடுக்கின்றாரா? இதனைப் புரிந்துகொள்ள முடியாதா?

இவர்தான் கடந்த வருடம் நோன்புப் பெருநாள் தொழுகையில் பெரும் குழப்பம் செய்த ஒருவர். ஒற்றுமையெனும் கயிற்றைப் பற்றிப்பிடிப்கச் சொன்ன மார்க்கத்தைக் கற்ற மௌலவி என்பவர் நாடுபூராகவும் ஏற்றுக்கொண்ட பிறையை மறுத்து குழப்பம் செய்து சமூகத்தைக் கூறுபோடுகிறார். இதற்குப் பின்னாலும் ஒரு சிலர் செல்கிறார்கள்; என்றால் இது அவர்களின் சிந்தனைப் பலவீனம் இல்லையா? இவர்களைப் போன்றவர்களைத் தீவிரவாதிகளாக மாற்றுவது கடினமா?

முகவர் மௌலவிகள்
—————————

அண்மையில் மியன்மார் முஸ்லிம்கள் துவம்சம் செய்யப்பட்டு பங்காளதேசில் அடைக்கலம் புகுந்த சந்தர்ப்பத்தில் துருக்கிய ஜனாதிபதி எர்துக்கான் ஆவேசமாக குரல்கொடுத்ததும் அவரது மனைவி பங்காளதேசிற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதையும் நாம் அறிவோம்.

அச்சந்தர்ப்பத்தில் சமூக வலைத்தளங்களில் எல்லோரும் எர்துகானைப் பாராட்டி பதிவுகளை இட்டுக்கொண்டிருந்தார்கள். அதேநேரம் சவூதி அரேபியா மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் மௌனம் சாதித்ததையும் அறிவோம்.

Laptop உடன் திரிகின்ற ஒரு மௌலவிக்கு இதனை ஜீரணிக்க முடியவில்லை. உடனே, சவூதி எத்தனையோ லட்சம் ரோகியங்கியர்களுக்கு அடைக்கலம் வழங்கியிருக்கின்றதாம்; துருக்கியைவிட சவூதிதானாம் உலக முஸ்லிம்கள்மீது அக்கறைகொண்ட நாடாம்; என்று ஒரு நீண்ட பதிவை அம்மௌலவி போடுகிறார்.
இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, எர்துகானை மக்கள் பாராட்டினால் உங்களால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவ்வாறாயின் நீங்கள் யார்? சவூதியும் ஒரு முஸ்லிம் நாடு. துருக்கியும் ஒரு முஸ்லிம்நாடு. துருக்கி ஜனாதிபதி குரல் கொடுக்கின்றார். பாராட்டப்படுகின்றார். சரி, அவரும் ஒரு முஸ்லிம்தானே! அவர் பாராட்டுப்படட்டுமே! உங்களால் ஏன் தாங்கிக்கொள்ள முடியவில்லை? அவ்வாறாயின் இவர் ஒரு சவூதியின் முகவராகத்தானே இருக்கவேண்டும்? இதற்காக இவர் பெறுவது என்ன?
எனவே, இவ்வாறு சில மௌலவி என்பவர்கள் சில நாடுகளின் அல்லது சில அமைப்புகளின் முகவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் கொள்கைகள் என்னவோ அவற்றை இங்கு பரப்புகிறார்கள். இவற்றிற்குப் பின்னாலும் மக்கள் செல்கிறார்கள். இதற்குப் பாவிக்கின்ற பதம் “ குர்ஆன், ஹதீஸ்” என்பதாகும்.

இவ்வாறான அடுத்தவர்களின் தரகர்களாக இருந்துகொண்டு சமூகத்தை வழிகெடுக்கும் இவர்களில் ஒரு சிலர் இவ்வாறான பயங்கரவாத சக்திகளின் கைக்கூலிகளாக மாறும்போது மிகுதி மூளைச்சலவையை பயங்கரவாதத்தை நோக்கிச் செய்கிறார்கள். இதை நம்பி வழிதவறுகின்றவர்கள்தான் இவ்வாறு தற்கொலைப்படையாக மாறுகின்றார்கள். இறுதியில் சமூகம் விலை கொடுக்கின்றது.

தீர்வு என்ன?
——————

ஒரு புறம் ஏற்கனவே மூளைச்சலவை செய்யப்பப்பட்டு பயங்கரவாதிகளாக மாறியவர்களை அரசாங்கம் களையெடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. அதேநேரம் தற்போது ஒரு சிலர்தான் பயங்கரவாதத்தைநோக்கித் திசைதிருப்பப்பட்டிருக்கிறார்கள். ஏனையவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

ஏற்கனவே, குறிப்பிட்டதுபோல் இஸ்லாம் வளர்க்க இயக்கங்கள் தேவையில்லை. இயக்கங்களால் இஸ்லாம் வளர்க்கப்படவுமில்லை. இயக்கங்களால் குழப்பங்கள் உருவாகி சமூகம்தான் பிரிந்திருக்கின்றது.

யாராவது மௌலவி என்று கூறிக்கொண்டுவந்து குர்ஆன், ஹதீசை வாசித்து அதற்கு ஏதாவது வியாக்கியானம் சொல்லமுற்பட்டால், அல்லது அதிலிருந்து சட்டங்கள் சொல்ல முற்பட்டால் இதற்கு முன்வந்த எந்த இமாம், எந்த உலமா இதே கருத்தைக் கூறியிருக்கின்றார்கள்; என்று கேளுங்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் அல்லது அவர்களின் கருத்துக்கள் பிழையென்று சொன்னால் அவர்களுடைய கருத்தை பல நூறு ஆண்டுகளாக வந்த உலமாக்களும் முஸ்லீம்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அதையே ஏற்றுக்கொள்கின்றோம்; என்று திருப்பி அனுப்பிவிடுங்கள்.

நாம் எமது மூதாதையர் வணங்கியதையே வணங்குவோம். உமது புதிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்; என்று அன்றைய குறைஷிகள் சொன்னதற்கெதிராக வந்த ஆயத்தைக் கூறினால் கூறுங்கள். அன்று அவர்கள் சொன்ன மூதாதையர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத நாளுக்கொரு தெய்வத்தை வணங்கியவர்கள். இஸ்லாத்தில்வந்த இமாம்களை அவர்களுடன் நீங்கள் ஒப்பிடுவதே நீங்கள் கெட்டவர்கள் என்பதற்கு அடையாளம்; என்று கூறுங்கள்.
அவர்களை ஏன் பின்பற்றவேண்டும்? குர்ஆன், ஹதீசைத்தானே பின்பற்ற வேண்டும்; என்று அவர்கள் சொன்னால் அன்றைய இமாம்கள் வியாக்கியானம் சொன்னது குர்ஆன், ஹதீசிற்கா அல்லது கதைப்புத்தகங்களுக்கா? என்று கேளுங்கள். அத்தோடு குர்ஆன், ஹதீசைத்தான் பின்பற்றவேண்டும்; எனவே இடையில் நீங்களும் உங்கள் வியாக்கியானமும் எதற்கு என்று கேளுங்கள். நீங்கள் கேள்விகேட்ட ஆரம்பித்தால் அவர்கள் சாயம் வெளுத்துவிடும்; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஒரு ஊரில் ஐம்பது வருடம், நூறு வருடம் பழமைவாய்ந்த பள்ளிவாசல் இருக்கும். அதைப் புனரமைக்க நிதியுதவிதேடி கொழும்பு பள்ளிவாசல்களில் ஜும்ஆவின்பின் தட்டுக்கள் ஏந்துவார்கள். ஆனால் இயக்கங்கள் என்ற பெயரில் ஒரு ஊரில் இருக்கும் பள்ளிக்கு அருகில் ஒரு குட்டிப் பள்ளிவாசல் கட்டுவார்கள் ஊரைப்பிரிப்பதற்கு.
அதன்பின் அங்கு கைகலப்புகள் இடம்பெறும். சில நாட்கள் முகநூல் கலகலக்கும். அந்தப்பணத்தை அந்தப் புராதன பள்ளியை புனரமைக்கப் பாவிக்கமுடியாதா? செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தொழுவதற்குப் பள்ளிகட்டுவதில்லையே! கொள்கை வளர்க்கவே கட்டுகிறார்கள்.

அதேநேரம் தங்களது பக்கம் மக்களைக்கவர நல்ல சமூக சேவையில் ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டில் பாரிய வெள்ளம் வந்தபோது மிகவும் சிறப்பாக செயற்பட்டது தமிழ்நாடு தௌஹீத் இயக்கம். இது அவர்களது மிகப்பெரிய தந்திரம். சமூகசேவை செய்யவேண்டுமானால் சமூகசேவை இயக்கமென்று பெயரை வைத்து இயங்கலாமே! மார்க்கத்தை பிழையாகச் சொல்லி மக்களை ஏன் வழிகெடுக்கவேண்டும்?
இலங்கையில் ஒரு தௌஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் தாங்கள் தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்பில்லை. இலங்கையில் பல தௌஹீத் ஜமாஅத்கள் இருக்கின்றன. அவர்களின் Ideologies வேறு, எங்களின் Ideology வேறு, என்று தெரிவித்திருக்கின்றார்கள்.
ஒரே இஸ்லாத்தில் பல ideologies இருக்கமுடியுமா? அதிலும் அவர்களுடையதுவேறு, எங்களுடையது வேறு என்றால் எல்லோரும் எங்களுடைய ideology தான் சரியென்றால் யாரை ஏற்றுக்கொள்வது? இதுவே போதாதா இவர்கள் வழிகெட்டவர்கள் என்பதற்கு.
எனவே, இந்த இயக்கங்கள் அரசு தடைசெய்யமுதல் தாமாகவே கலைந்து மொத்த முஸ்லிம்களும் ஒரே உம்மத்தாக இயங்க முன்வரவேண்டும். ஊருக்கு ஊர் கட்டப்பட்ட குட்டிப்பள்ளிவாசல்கள் அவ்வூர் பெரிய பள்ளிவாசலிடம் அல்லது முஸ்லிம் கலாச்சார அமைச்சிடம் கையளிக்கப்பட வேண்டும்.

அரபிக்கல்லூரிகள்
————————

இன்று முஸ்லிம் சமூகத்தை வழிகெடுக்கும் வழிகெட்ட மௌலவிக்களைத் தயாரிப்பது புதிய புதிய கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு புற்றீசல்போல் முளைத்திருக்கும் அரபிக்கல்லூரிகளாகும். ஒன்றில் இவ்வாறு கொள்கைப்பிறள்வுள்ள அரபிக்கல்லூரிகள் மூடப்படவேண்டும்; அல்லது இலங்கை, இந்தியாவில் உள்ள சிறந்த உலமாக்களைக்கொண்டு பல நூறுஆண்டுகளாக இருந்துவருகின்ற அஃலுஸ்ஸுன்னது வல் ஜமாஆ கொள்கையை அடிப்படையாகக்கொண்ட ஒரு பொதுவான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அது அனைத்து அரபிக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படவேண்டும்.

இதற்கு உடன்படாத கல்லூரிகள் மூடப்படவேண்டும்.

இவ்வாறு வேற்றுமைகள் களையப்பட்டு இந்நாட்டு முஸ்லிம்களை ஒரே கொடியின்கீழ் கொண்டுவரத்தவறின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறலாம். தமிழருக்கு தமிழ்நாடு இருந்தது. ரோகியங்கியருக்கு பங்களாதேஷ் இருந்தது. நமக்கு எதுவுமில்லை. அல்லாஹ்வின் பாதுகாப்புமட்டும்தான். நாம் ஒற்றுமைப்படாமல், நமது தலைவிதியை நாமே மாற்றாமல் இறைவன் மாற்றுவானென எதிர்பார்க்க முடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -