கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல்களின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
மாநகர சபை ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உட்பட சுகாதார மேற்பார்வையாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல்களில் அன்றாடம் சேர்கின்ற திண்மக் கழிவுகளை சேகரித்து அகற்றும் சேவையை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றின் உரிமையாளர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஏலவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஹோட்டல்களில் சேகரிக்கப்படும் ஒரு கிலோ குப்பைக்கு ஐந்து ரூபா வீதம் சேவைக்கட்டணம் செலுத்துவதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் குப்பை அகற்றும் சேவையை மேம்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் உறுதியளித்தனர்.