திருகோணமலை மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ கிராமங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. ஹிஸ்புல்லாவிடம் மொரவெவ பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ. எஸ். எம். பைசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை (20) நடைபெற்ற போதே இக்கோரிக்கையினை விடுத்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு மொரவெவ பிரதேச சபைக்கு மூன்று தடவைகள் அதிக வாக்குகள் பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டும் தமக்கு வாக்களித்த மக்களுக்கு சிறிய உதவிகளை கூட செய்ய முடியாது போயுள்ளதாகவும்,ரொட்டவெவ கிராமத்தில் தகுதியான இளைஞர், யுவதிகள் இருந்த போதிலும் எதுவித தொழில் வாய்ப்புகளும் பெற்றுக் கொடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தான் 15 வருடங்களுக்கு அதிகமாக அரசியல் பிரதிநிதியாக செயற்பட்டும், கிராமத்தில் வாழும் மக்களின் காணிகளுக்கு இன்னும் உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படவில்லையெனவும் மிக விரைவில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் ஏ. எஸ். எம். பைசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பாடசாலையின் கட்டிட வசதி, நூலக வசதி, விஞ்ஞான ஆய்வு கூடம் இல்லாமல் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. ஹிஸ்புல்லா அதிகளவிலான குறைகளை மிக விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ReplyReply allForward