அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
முஸ்லிம் விவாக , விவகாரத்துச்சட்டத்தில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட அனைவருக்கும் நன்மை பயக்கும் திருத்தங்களுக்கே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்குவார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் விரைவில் ஒன்றுகூடி நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள சட்டத்திருத்த சிபாரிசு அறிக்கையினை ஆராயவுள்ளோம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக , விவாகரத்துச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே , அவர் இவ்வாறு கூறினார். இச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸூபின் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த குழு தனது அறிக்கையை நீதியமைச்சரிடம் கையளித்துள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இது பற்றி தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் , சட்டத்திருத்த சிபாரிசு குழுவின் அறிக்கையில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. அகில இலங்கை ஜம்யத்துல் உலமா உள்ளடங்கிய குழுவினராலும் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சட்டத்தரணிகளும் இருக்கின்றார்கள். அந்த வகையில் இந்த இரு அறிக்கைகளையும் ஆராய்ந்து இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட சிபாரிசுகளை நாம் அங்கீகரிப்போம்.
இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட திருத்தங்களையே எமது சட்டத்தில் நாம் உட்படுத்த வேண்டியுள்ளது. அத்திருத்தங்கள் சமூகத்துக்கு நன்மை பயப்பனவாகவும் அமைய வேண்டும். இந்த திருத்தங்களுக்காக நாம் 10 வருடகாலமாக காத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே இக்கலதாமதம் தொடர்ந்தும் நீடிக்க கூடாது.
இந்த பணியில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் நாம் நன்றி சொல்லுவதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம்.இதே வேளை ஒரு சிலரால் சட்டத்தை மையமாக வைத்து பெண்களுக்கும் தீமை விளைவிக்கப்படுகிறது. பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதிலும் நியாயம் இருக்கின்றது . காதி நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட வேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அவர்களது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான நீதிமன்ற கட்டடங்கள் , காரியாலய வசதி, போக்குவரத்து வசதி மற்றும் உதவியாளர்கள் நியமனம் என்பன செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இந்த கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யாது சட்டத்தில் திருத்தங்களை செய்வதால் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. தமது கடமைகளை நேர்மையாகச் செய்யும் காதி நீதிபதி ஒருவர் 300 க்கும் மேற்பட்ட வழக்கு கோவைகளை தம்வசம் வைத்துக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் ஒன்றுகூடவுள்ளோம். சட்டதிருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளளும் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.