இராஜாங்க அமைச்ர் ஹரீஸின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கலந்துரையாடல் எதிர்வரும் 26ல்..டாக்டர் ஆரிப்


http://www.importmirror.com/2019/02/blog-post_907.html
மேற்படி செய்தி உண்மையாக இருந்தால் மேலோட்டமாகப் பார்க்கின்ற போது திருப்தியானதொரு செய்தியாகவே தெரிகிறது.

சாய்ந்தமருது மக்களாகிய நாங்கள் பல வருடங்களாக எமக்கான உரிமையான தனியான உள்ளூராட்சி சபையைப் பெற்றுக்கொள்வதற்காக பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்ததே.

வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டும் வருவது இப்பிராந்தியத்தில் இயல்பு நிலையைப் பாதிக்கின்ற அளவிற்கு மோசமாகியுள்ளது. இழுத்தடிப்பிற்கு கடந்த காலங்களில் பலவிதமான நொண்டிச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தாலும், தற்போது எச். எம். எம். ஹரீஸ் அவர்கள் இராஜாங்க அமைச்சைப் பொறுப்பெடுத்ததன் பின்னர் இழுத்தடிப்பிற்கு எந்தவிதமான காரணங்களையும் சொல்ல முடியாத இக்கட்டான நிலைமையை அவருக்கும், அந்தக் கட்சிக்கும் ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற நிலை போல, சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை இம்முறை தீர்க்கப்படாமல் போனால், அதற்கான முழுச்சுமையையும் இராஜாங்க அமைச்சரே சுமக்க வேண்டிவரும் என்பது தான் இன்றைய யதார்த்தம். இதனை அவர் இப்போது நன்கு உணர்ந்திருப்பார்.

அவர் என்ன செய்யப் போகின்றார் என்ற பலருடைய எதிர்பார்ப்புகளின் மத்தியில் தான் எதிர்வரும் 26 ஆம் திகதி அது தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடலை அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஒழுங்கு செய்திருக்கிறார் என்ற செய்தி பரவுகிறது.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தீர்வொன்றை எட்டவேண்டும் என்ற அடிப்படையிலும் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அது வரவேற்கப்படக்கூடியதாகும். இதன் மூலமாக சாய்ந்தமருது மக்களுக்கு விமோசனம் கிடைக்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இருந்த போதிலும், சில சந்தேகங்களுக்கு காலமே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

01) இராஜாங்க அமைச்சர் பந்தை தனது கையிலிருந்து எறிகிறாரா?

இராஜாங்க அமைச்சைப் பாரமெடுத்ததன் மூலமாக பொறிக்குள் அகப்பட்டுப்போன இராஜாங்க அமைச்சர் தீர்வை எட்டுவதற்கான திறப்பை அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் கையில் கொடுத்துவிட்டு பார்வையாளனாக மாறப்போகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. தீர்வு வராத பட்சத்தில், அமைச்சராலேயே தீர்வைக் காணமுடியாத போது இராஜாங்க அமைச்சராகிய நான் என்ன செய்ய முடியும் என்று தப்பிக்க முயற்சிக்கும் ஒரு காய் நகர்த்தலாக இருக்கலாமா என்ற கேள்விக்கு காலமே பதில் சொல்ல வேண்டும்.

02) தமிழ் தரப்பை அழைக்காமைக்கான காரணம் என்ன?
சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக அழைக்காமைக்கு என்ன காரணம் என்ற கேள்வி காலத்தை இழுத்தடிப்பதற்கான ஒரு கலந்துரையாடலா என்ற சந்தேகத்தை தருகிறது. ஏனெனில், கல்முனையை நான்காகத்தான் பிரிக்க வேண்டும் என்றால் நிச்சயமாக தமிழ் தரப்போடும் பேச வெண்டும். அது தான் மிகவும் இடியப்பச் சிக்கலான விடயமாகும். அப்படியில்லாது, சாய்ந்தமருதுக்கு தனியாக சபையை வழங்குவதென்றால் இந்தக் கலந்துரையாடலே அவசியமில்லை. காரணம் இரண்டு கட்சித் தலைவர்களோடு இராஜாங்க அமைச்சரும் வாக்குறுதி வழங்கியவர்கள். ஆதலால், இவ்விடயத்தில் மேற்கொண்டும் என்ன பேசவேண்டியுள்ளது என்ற கேள்வி எழுகிறது.

03) நான்காகப் பிரித்துத்தான் தீர்வு என்று முடிவாக்கப்பட்டால் அடுத்த கட்டம் என்ன?

ஒருவேளை அமைச்சரைப் பயன்படுத்தி திட்டமிட்ட அடிப்படையில் அதாவது உயர்மட்டக் கலந்துரையாடல் என்ற போர்வையில், நான்காகப் பிரித்துத்தான் தீர்வு எட்டப்படல் வேண்டும் என்று முடிவாக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சிலர் இந்த சிக்கலில் இருந்து தாம் விடுபடுவதற்கும், இழுத்தடிப்பதற்காக திட்டமிட்டு நொண்டிச்சாட்டொன்றை கண்டுபிடித்ததாகவும் அமையலாம். இது நடப்பதற்கான சாத்தியக்கூறு தான் அதிகமாக இருக்கிறது. ஏனெனில், இக்கலந்துரையாடலில் அழைக்கப்பட்டுள்ள ஏனைய மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் சாய்ந்தமருது மக்களின் வேதனையும் வலியும் தெரிந்திருக்காது. இந்த விடயத்தில் அவர்கள் எவ்வளவு தூரம் தெளிவுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். அவர்கள் சாய்ந்தமருது மக்களின் நியாயங்களை எடுத்துச் சொல்வார்களா அல்லது கட்சியின் நிலைப்பாட்டை விலியுறுத்துவார்களா என்ற கேள்வி தொக்கிநிற்கின்றது. அவர்களுடைய கருத்துகள் ஒரு முன்கூட்டிய முடிவை நோக்கியதாகவே இருக்கலாம் என்ற சந்தேகமே மேலோங்குகிறது.

04) நான்கு தான் தீர்வெனில் அதற்குரிய பொறிமுறை என்னவாக இருக்கும்?
நான்காகப் பிரித்தே தீர்வு காணப்பட வேண்டும் என்ற முடிவு வரும் பட்சத்தில் அதற்கான பொறிமுறையையும் ஒரு கால அட்டவணையையும் குறித்த கலந்துரையாலிலேயே வரையறை செய்யத்தயாராக இவர்கள் இருக்க வேண்டும். ஏனெனில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இரண்டா அல்லது நான்கா என்பது தான். இரண்டு என்றால் இந்தக் கலந்துரையாடலே அவசிமில்லை. ஆதலால், நான்கை நோக்கிய கலந்துரையாடலாகவே இது இருக்கப் போகிறது. எனவே, வெறுமனே நான்கு என்ற தீர்மானத்தை எடுத்துவிட்டு காலத்தை வீணாக்காமல், நான்கு தான் என்றால் அதற்கான பொறிமுறை என்ன? அதனை எவ்வாறு சாத்தியமாக்குவது? அதனை எப்போது சாத்தியமாக்குவது என்ற கேள்விகளுக்கு விடைகாண இந்தக் கலந்துரையாடல் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில், இதுவுமொரு சுத்துமாத்தாகவும், கண் துடைப்பாகவும், இழுத்தடிப்பாகவுமே இருக்கப் போகிறது.

05) கலந்துரையாடலா அல்லது முன்கூட்டிய முடிவை உத்தியோகபூர்வமாக்கும் சந்திப்பா?
அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்கள் சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை சம்பந்தமாக இதுவரை சாய்ந்தமருது தரப்போடு எந்த சந்திப்பையும் செய்திருக்கவில்லை. சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது என்பதனை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்கின்றவர்களில் யார் சாய்ந்தமருது மக்களின் சார்பில் அவர்களின் பிரச்சினையை அமைச்சருக்கு தெளிவுபடுத்தப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது. அதன் காரணமாக இது கலந்துரையாடலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள சாய்ந்தமருது மக்களின் சார்பாகப் பேசுவதற்கு எந்த அரசியல் பிரதிநிதியும் இல்லாதது வருத்தத்தைத் தருவதுடன், மனதில் கடும்போக்கை விதைக்கிறது.

எனவே, இந்தக் கலந்துரையாடல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதனை உறுதி செய்வதானால் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள அரசியல் அநாதைகளான சாய்ந்தமருது தரப்பிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

@ D N A
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -