நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அது தொடர்பானசட்டங்களும் தொடர்பாக சட்ட முதுமானி வை. எல். எஸ்.ஹமீட் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.


எஸ்.அஷ்ரப்கான்-
நேற்று (14/11/2018) புதன்கிழமை புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் அவரது அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற்கட்டளை பின்பற்றப்படவில்லை; சபாநாயகர் சட்டவிரோதமாக நடந்திருக்கின்றார்; எனவே இந்தத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது; என ஜனாதிபதியும் அவரது தரப்பும் அதனை நிராகரித்திருக்கின்றது.
பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை இல்லை; என்பதை பெரும்பான்மை உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்றில் வெளிப்படுத்திய நிகழ்வு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது.

இங்கு எழுப்பப்படுகின்ற கேள்வி ‘ நிலையியல் கட்டளையின் விதிகள் பின்பற்றப்பட்டனவா?’ என்பதாகும். அதாவது பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட அதேநாளில் வாக்கெடுப்புக்கு விடமுடியுமா? என்றும் அத்தோடு ஏனைய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்பதுமாகும்.
இங்கு அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பெரும்பான்மையோர் ஆதரவளிக்கவில்லை; என்ற குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. வாக்களிக்கப்பட்ட முறையும் விதிகளுமே கேட்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன.

நிலையியல் கட்டளைகள்
———————————

அரசியலமைப்புச் சட்டம் சரத்து 74, பாராளுமன்றம் நிலையியற்கட்டளை ( Standing Order) அல்லது தீர்மானம் ( Resolution) மூலம் தனது நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கலாம்; என்று கூறுகின்றது. இந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் நிலையியல் கட்டளை பாராளுமன்றத்தால் வரையப்பட்டிருக்கின்றது. மறுவார்த்தையில் கூறுவதாயின் நிலையியல் கட்டளைக்கான அதிகாரம் இந்த சரத்தில் இருந்தே பெறப்படுகிறது.

அதேநேரம் நிலையியற்கட்டளை சட்டமல்ல. அது பாராளுமன்ற உள்ளக நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் மாத்திரம்தான். அதேநேரம் பாராளுமன்றத்தின் உள்ளக நடவடிக்கைகளை நிலையியல் கட்டளைகளால் மாத்திரம்தான் நிர்வகிக்க முடியும் என்பதல்ல. மாறாக தீர்மானத்தின் ( Resolution) மூலமும் நிர்வகிக்க முடியும் என்று சரத்து 74 சொல்வதை மேலே பார்த்தோம்.

நேற்று நடந்ததென்ன?
——————————

பாராளுமன்ற ‘ நிலையியல் கட்டளை’யை தற்காலிகமாக இடைநிறுத்தி நம்பிக்கையில்லாப்பிரேரணையை நடவடிக்கைக்கு எடுப்பதற்கு திரு சுதந்திரன் தீர்மானம் கொண்டுவந்தார். அதனை சபாநாயகர் சபையிடம் விட்டார். சபை பெரும்பான்மையால் அதை அங்கீகரித்தது. இப்பொழுது நிலையியற்கட்டளை அமுலில் இல்லை. எனவே, சபை ஏற்றுக்கொண்ட தீர்மானத்தின்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையில் எடுக்கப்பட்டது.


இப்பொழுது சபை எதிரணியினரால் தொடர்ந்து குழப்பப்பட்டது. பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடாத்த சபாநாயகர் விடுத்த அழைப்பிற்கும் செவிசாய்க்காமல் தொடர்ந்தும் குழப்பநிலை நீடித்தது. இந்நிலையில் குரல்வாக்கெடுப்பின்மூலம் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். அதேநேரம் பெரும்பான்மையோர் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்ததை தொலைக்காட்சி வாயிலாக பொதுமக்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது.


எனவே, இங்கு பிரேரணை சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டதா? அல்லது சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டதா? என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.


பாராளுமன்றத்தின் முடிவை சவாலுக்குட்படுத்தலாமா?
—————————————-
பாராளுமன்றத்தின் தலைவர் சபாநாயகர். அவர் ஒரு பிரேரணையோ, சட்டமோ நிறைவேற்றப்பட்டதாக அத்தாட்சிப்படுத்தினால் அதனைக் கேள்விக்குட்படுத்தலாமா?


ஜனாதிபதி சபாநாயகரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பாராளுமன்றத்தின் முடிவை சட்டவிரோதமானது, நிலையியல் கட்டளை பின்பற்றப்படவில்லை; என நிராகரித்திருக்கின்றார். மறுவார்த்தையில் கூறுவதானால் பாராளுமன்றத்தின் முடிவு சட்டவிரோதமானது; என தீர்ப்புக் கூறியிருக்கின்றார். இதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கின்றதா?


இந்த நாட்டில் எந்தவொரு விடயமும் சட்டவிரோதமாக நடைபெற்றிருக்கின்றது; என்று தீர்ப்புக்கூறுகின்ற அதிகாரம் நீதித்துறைக்கு மாத்திரமே இருக்கின்றது.


நீதித்துறையின் அதிகாரம்
———————————
சட்டவாக்க அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு வழங்கியதுபோன்று நீதித்துறைக்கான அதிகாரத்தை நீதித்துறையினூடாக செயற்படுத்த பாராளுமன்றத்திற்கு சரத்து 4(c) யினூடாக வழங்கியிருக்கின்றது. எனவே, எந்தவொரு சட்டமீறல் தொடர்பாகவும் நீதித்துறை மாத்திரமே தீர்ப்புக்கூற முடியும். ஆனாலும் ஒரு விதிவிலக்கு.


விதிவிலக்கு என்ன?
—————————
பாராளுமன்றத்தினதும் அதன் அங்கத்தவர்களினதும் அதிகாரம், சிறப்புரிமை, immunity ஆகியவை தொடர்பாக நீதித்துறைக்கு எவ்வித அதிகாரமுமில்லை. இது தொடர்பான நீதித்துறை அதிகாரத்தையும் பாராளுமன்றமே செயற்படுத்த வேண்டும்; என்று சரத்து 4(c) கூறுகின்றது.


அதாவது சபாநாயகரோ அல்லது அதன் அங்கத்தவர்களோ, அல்லது வெளியார்கள் பாராளுமன்றம் தொடர்பாகவோ ஏதாவது பிழைசெய்தால் அதற்கெதிராக பாராளுமன்றமே சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம். நீதிமன்றம் தலையிட முடியாது.


மறுவார்த்தையில் கூறுவதானால் நேற்றைய நடவடிக்கைகளில் சபாநாயகர் தவறுவிட்டார்; என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அதற்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் சட்டரீதியாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இருந்தால் எடுக்கலாம். அது வேறுவிடயம். ஆனால் நீதிமன்றம் அதுதொடர்பாக தீர்ப்புச்சொல்ல முடியாது.


நீதிமன்றத்திற்கே நேற்றைய பாராளுமன்ற நிகழ்வு தொடர்பாக தீர்ப்புச்சொல்ல முடியாது; என்றால் ஜனாதிபதி எவ்வாறு அது சட்டவிரோதம் என்று தீர்ப்புக்கூற முடியும்.


சரத்து 48(2) இன் பிரகாரகம் அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் பிரதமரும் அமைச்சரவையும் பதவியிழக்கும். ஜனாதிபதி புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டும்.


சபாநாயகர் நேற்று அறிவித்துவிட்டார் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக. அந்தக்கணமே பிரதமரும் அமைச்சரவையும் கலைந்துவிட்டது. இப்பொழுது நாட்டில் அரசாங்கம் இல்லை. அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் இல்லை. இவர்கள் இன்னும் அப்பதவிகளில் செயற்படுவார்களானால் அவை சட்டத்தில் செல்லுபடியாகாது. நாடு இப்பொழுது அரசு இல்லாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது.


இன்று சட்டரீதியாக நடந்ததை சட்டவிரோதம் என்பவர்கள் மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் நிலையியக்கட்டளைக்கெதிராக கொண்டுவந்து சட்டமாக்கியபோது அதை ஏற்றுக்கொண்டதேன்? தேர்தலை ஒத்திவைக்க 2/3 பெரும்பான்மையால்கூட சர்வஜனவாக்கெடுப்பின்றி முடியாது; என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும்போது நீதிமன்றுக்கு பரிசீலிக்க இடம் கொடுக்காமல் சட்டம்கொண்டுவந்து தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றதே! அதற்கெதிராக ஜனாதிபதி ஏன் பேசவில்லை?


சபாநாயகர் சட்டவிரோதமாக நடந்ததாக கோசமெழுப்பப்படுகிறது.


107 இருந்த பிரதமரை பதவி நீக்கிவிட்டு ( பதவி நீக்க அதிகாரம் இருக்கின்றது என்பது வேறு) 95 உள்ளவரை நியமித்தது நியாயமா?


சரி அவ்வாறு நியமித்தபின் அவருக்கு பெரும்பான்மை இருக்கின்றதா? என்பதை நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக கேள்விக்குட்படுத்துகின்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருந்தும் அந்த அதிகாரத்தை செயற்படுத்தவிடாமல் பாராளுமன்றத்தை மூடியது அதிகாரதுஷ்பிரயோகமில்லையா?


பாராளுன்றத்தைக்கூட்டாமல் குறுக்குவழியில் உறுப்பினர்களை வாங்கமுற்பட்டது பிழையில்லையா?


பெரும்பான்மை இருப்பவரை பிரதமராக நியமிக்க வேண்டுமென யாப்பு சொல்லும்போது பெரும்பான்மை இருந்தாலும் ரணிலை நியமிக்க மாட்டேன்; எனக்கூறுவது அரசியலமைப்பை அத்துமீறுவதில்லையா?


இவ்வாறு தொடர்ந்து சட்டமீறல்களைச் செய்துகொண்டு இப்பொழுது பாராளுமன்றத்தின் முடிவையும் நிராகரிக்கும் நிலை இந்த நாட்டை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகின்றது?


அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட நிறைவேற்றதிகாரத்தின்மூலம் அரசியலமைப்பையே செல்லாக்காசாக்கின்ற முயற்சியை ஜனாதிபதி கைவிடவேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் . அரசியலமைப்பை மதிக்க வேண்டும் . பெரும்பான்மை உள்ளவரை உடனடியாக பிரதமராக நியமிக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -