ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெள்ளிக்கிழமை (26) இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபன இறக்காம தொழிற்சாலைக்கு நேரடி விஜயம் செய்தபோது கல்ஓயா ஆற்றின் குறித்த பிரதேசத்திற்கும் சென்று பார்வையிட்டார்.
இதன்போது இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசாத் ஹெட்டியாராச்சி, புவிச்சரிதவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பண்டார, நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், இறக்காம தொழிற்சாலையின் வினியோக மற்றும் திட்ட முகாமையாளர் தினேஸ் சஞ்ஜீவ, உற்பத்தி மற்றும் களஞ்சியசாலை முகாமையாளர் ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க, இறக்காம பிரதேச சபை உறுப்பினர் ஜெமீல் காரியப்பர், இறக்காம பிரதேச சபை முன்னாள் தவிசாளர் யூ.கே. ஜபீர் மௌலவி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
குறித்த இறக்காம தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியினை அண்மித்துள்ள கல்ஓயா ஆற்றில் மண் எடுப்பதற்காக 8 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவ்வனுமதிப் பத்திரத்தை பெற்ற நபர்களில் ஒருவர் மண் அகழ்வு நடவடிக்கையினை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்பதற்காக சகல அனுமதிப்பத்திரங்களையும் புவிச்சரிதவியல் மற்றும் நீர்ப்பாசன திணைக்களங்கள் இரத்துச் செய்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸிடம் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றிருந்த உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தின்போது குறித்த ஆற்றுப் பிரதேசத்தில் மண் நிரம்பி நீர் ஓட்டத்திற்கு தடையாக காணப்படுவது அவதானிக்கப்பட்டதோடு மண் அகழ்வதற்கான அனுமதிபத்திரங்களை இறுக்கமான வரையறைகளுடன் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
குறுகிய மாத காலத்துக்கொருமுறை புதுப்பிக்கத்தக்கதாக அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் உரிய முறையில் மண் அகழ்வை மேற்கொள்ளாதவர்களின் அனுமதிப்பத்திரங்களை ரத்துச் செய்ய முடியும் எனவும் இதனால் உரியமுறையில் மண் அகழாமையினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அனுமதிப் பத்திரங்களை பெறுபவர்கள் மண் அகழ்வு மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் மரங்களை நட்டு பராமரிக்கவும் பணிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் இங்கு தீர்மானிக்கப்பட்ட விடயங்களை மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு முயல்வதாக புவிச்சரிதவியல் மற்றும் நீர்ப்பாசன திணைக்களங்களின் அதிகாரிகளினால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு பிரதி அமைச்சர் ஹரீஸ் குறித்த மேலதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.