சம்மாந்துறை, வளத்தாப்பிட்டியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியான கரங்கவட்டையில் 90 ஏக்கர் இன்று சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
1943 ஆம் ஆண்டியிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை இந்தக் காணியில் முஸ்லிம்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு மகுடம்‘ கண்காட்சியின் பின்னர் அந்தக் காணிகள் முஸ்லிம்களிடமிருந்து கைநழுவச் செய்யப்பட்டன.
இந்த நிலையில், தற்போது அந்தக் காணிக்குள் அத்துமீறிய சிங்கள மக்கள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம், நேற்று, இன்று என தொடர்ச்சியாக குறித்த காணியில் சிங்கள மக்களால் விதைப்புக்கான உழவு நடவடிக்கைகள் முன்னெடுக்ககப்பட்டு வருகின்றன.
ஒரு பௌத்த மதகுரு தலைமையிலேயே நிலத்தை உழவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் சிலர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்தும் அவர் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் மாறாக தொடர்ந்தும் குறித்த காணியை வேளாணண்மைச் செய்கைக்காக சிங்கள மக்கள் தயார்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பாரதூரமான விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் உரிய முறையில் அதி உச்ச கவனத்தைச் செலுத்தாமையே தங்களது காணிகள் பறிபோவதற்கான பிரதான காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் அவர்களைத் தொடர்பு கொண்ட நான், இந்த விவகாரத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். அதற்கு அவர் தந்த விளக்கத்தை அவரது குரல் வழியில் இங்கு பதிவிட்டுள்ளேன்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ இஸ்மாயில் அவர்களை இன்று (13) காலையிலிருந்து 13 தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் (ஆதாரம் உள்ளது) அவர் எனது அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. பின்னர் இது தொடர்பில் குறுஞ் செய்தி ஒன்றை அவருக்கு அனுப்பினேன். ஆனால், அதற்கும் அவர் பதில் தரவில்லை.
இது ஒரு தனிப்பட்ட நபரின் விடயம் அல்ல. முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, வாழ்வாதாரங்களைக் கேள்விக்குறியாக்கும் இந்த விவகாரத்தால் பாதிக்கப்படப் போவது நமது முஸ்லிம்கள். அவர்கள் யாராகவும் எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை என்பதனைச் சிலர் இந்த விடயத்தில் புரிந்து கொள்ளாமல் இருப்பது கவலை தருகிறது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கோபதாபங்கள் இங்கே உள்ளீடாகக் கூடாது.
அம்பாறை மாவட்ட அரசியல்வாதி ஒருவரிடம் இது தொடர்பில் சிலர் முறையிட்ட போது, ‘ நீங்கள் பொலிஸில் போய் முறையிடுங்கள்’ என்று அவர் கூறியுள்ளார். சமூகம் சார்ந்த இந்த விடயத்தில் மக்கள் பிரதிநிதி ஒருவரின் பொறுப்பற்ற இந்தப் பதில் கவலையையும் வேதனையை யும் தருகிறது.
இது தொடர்பில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தருமான ஏ.ஸி.எம். சஹீல் அவர்களைத் தொடர்பு கொண்டு நான் கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘ ….நான் தற்போதும் சம்மாந்துறை கரங்கவட்டை பிரதேசத்திலேயே நிற்கிறேன். சிங்கள மக்கள் உழவு வேலைகளைத் தொடர்கின்றனர். இந்த விவகாரம் குறித்து நான் பலரையும் தொடர்பு கொண்டு விளக்கினேன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களைத் தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறினேன். இதனையடுத்து அவர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசியுள்ளார். ஆனால், தொடர்ந்து உழவுகள் வேலைகள் தற்போதும் நடைபெறுகின்றன...’ என்றார்.
இது ஒரு புறமிருக்க, அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து முஸ்லிம் எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமாக இணைந்தாவது இந்த விடயத்தில் தலையிட்டு உழவுப் பணிகளை நிறுத்தி, குறித்த காணியை முஸ்லிம்களுக்கு வழங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தவறினால் இவர்கள் அனைவரும் சமூகத்தின் முன்பாக குற்றவாளிகளாகவே நிற்கும் நிலை ஏற்படும்.
இவ்வாறான ஒரு நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டால், இன்று அனைத்து தமிழ்க் கட்சிகளும் தங்களுக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளையும் களைந்து, ஒன்றிணைந்து களத்தில் இறங்கியிருக்கும் அரசாங்கமே ஆடிப்போய், நடுங்கியிருக்கும் ஆனால், முஸ்லிம்களாகிய நாம் பாவப்பட்ட ஜென்மங்களாக உள்ளோம்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தயாகமகே உட்பட சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றம் அனுப்பியிருந்தால் கூட இந்த நிலைமைகள் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு எழுந்திருக்காது என்று கூட நான் மன ஆதங்கப்படுகிறேன்.
நாங்கள் வழங்கிய ஆதரவுக்காக அவர்கள் எங்கள் விடயத்தில் கரிசனை, விசுவாசம், நன்றியுடன் நடந்து கொண்டு எங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது இருந்திருக்கலாம் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.
குறித்த 90 ஏக்கர் காணியிலும் இன்று வேளாண்மை பயிரிட முயற்சிக்கும் சிங்கள மக்கள், நாளை அங்கு முழுமையான குடியேற்றத் திட்டங்களை முன்னெடுத்தால் நிலைமை என்னவாகும்? சம்மாந்துறையில் வாழும் முஸ்லிம்களை தங்களுடன் வாழும் ஓர் இனக் குழுவாக அம்பாறைச் சிங்களவர்கள் அடையாளப்படுத்தினால் எமது நிலைமை எப்படியிருக்கும்? அவர்களது தனித்துவம் எங்கு போய் முடியும்? இந்த நிலையில் பாரதூரமான இந்த விடயத்தில் முஸ்லிம்களைப் பலிக்கடாக்களாக்கிய பொறுப்பை முஸ்லிம் அரசியல் தலைமைகளே ஏற்க வேண்டும்.
இது தவிர, அம்பாறை முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த இருப்புக்கும் வேட்டுவைக்கும் ஒரு விடயமாக இது எதிர்காலத்தில் அமைந்து விடும். அந்த மாவட்டத்தின் பெரும்பான்மையை முஸ்லிமகள் இழந்தால் எமது தலைவிதி என்னவாகும்?