முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது -
வடகிழக்கு மாகாணங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டதுக்கும், அதாஉல்லாஹ்வுக்கும் என்ன தொடர்பு ? உண்மையில் நடந்தது என்ன ?
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 1987 இல் வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமாக தற்காலிகமாக இணைக்கப்பட்டது. பின்பு 2௦௦6 டிசம்பர் மாதம் வடக்கும், கிழக்கும் இரு வேறுபட்ட தனித்தனி மாகாணங்களாக செயல்படும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.
இவ்வாறு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாங்களாக பிரிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும், இந்த பிரிப்புக்கு தானே காரணம் என்றும், தமிழர்களிடம் இருந்து கிழக்கு முஸ்லிம்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளேன் என்றும் அன்றைய அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பகிரங்கமாக கூறினார். இன்றும் அதனையே கூறுகின்றார்.
உண்மையில் இந்த இருமாகானங்களும் பிரிக்கப்படுவதற்கு காரணம் யார் ? இதில் அதாஉல்லாவின் பங்களிப்பு என்ன ? அல்லது மகிந்த அரசாங்கத்தின் பங்களிப்பு என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் தேடவேண்டி உள்ளது.
வடக்கும், கிழக்கும் தனித்தனியே இரு மாகாணங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரி ஏ.எஸ்.எம்.புஹாரி என்ற சம்மாந்துறையை சேர்ந்த பொதுமகனும், மற்றும் ஜே.விஜேசேகர, வீ.பியதிஸ்ஸ ஆகிய இரண்டு ஜே.வீ. பீ பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் ஒரே தினத்தில் மூன்று தனித்தனி வழக்குகளை 2006 ஜூலை 17 இல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.
இந்த வழக்கில் ஜனாதிபதி, சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளர், வடகிழக்கு மாகான ஆளுநர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப் பட்டிருந்தார்கள்.
வழக்கு தாக்கல் செய்த இந்த மூன்று பேரும் ஜே.வீ.பீ கட்சியை சேர்ந்தவர்கள். இந்த வழக்குக்கான அனைத்து செலவுகளையும் இவர்களது கட்சியே செலவு செய்தது.
இங்கே ஏ.எஸ்.எம்.புஹாரி என்கின்ற பொதுமகனின் வழக்கினையே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மூன்று தவணைகள் வழக்கு விசாரணை நடைபெற்றதன் பின்பு, 2006.10.16 இல் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான ஐந்து பேர்கள் கொண்ட நீதியரசர்கள் குழுவினர் இந்த தீர்ப்பினை வழங்கினார்கள்.
தமிழர்கள் அவர்களது தாயகம் என்று கூறுகின்ற வடக்கையும், கிழக்கையும் இரு வேறாக பிரிப்பதற்கு அதே தாயகத்தில் வாழ்கின்ற இன்னுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் ஒருவர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்மூலம் இவ்வாறான தமிழர்களுக்கு எதிரான வரலாற்று துரோகத்தினை சிங்களவர்கள் செய்யவில்லை என்ற செய்தியுடன், பிரச்சினைகள் வருகின்றபோது அதனை முஸ்லிம்கள் மீது பழியை போட்டுவிடலாம் என்ற நோக்கில் புஹாரி அவர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இணைந்திருந்த இந்த இரு மாகாணங்களையும் தனித்தனியாக பிரித்ததற்கு ஜே.வீ.பீ கட்சியை தவிர வேறு யாராலும் உரிமைகோர முடியாது. ஆனால் பகிரங்கமாக அதாஉல்லாஹ் அவர்கள் உரிமை கோரியதுதான் ஆச்சரியமான விடயமாகும்.
அதாஉல்லாஹ் அவர்கள் அன்று பலம் பொருத்திய முழு அமைச்சராக இருந்ததனால் அவரது அறிக்கையினையே ஊடகங்களும் பெரிதுபடுத்தி வெளியிட்டது. ஆனால் உண்மையில் இந்த பிரிப்புக்கு காரணமாக இருந்தவர் சாதாரண நபர் என்பதனாலும், அவர் ஜே.வீ.பீ கட்சியை சேர்ந்தவர் என்பதனாலும் அவரை ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அத்துடன் அன்றைய மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இந்த தீர்ப்பு வெளியானபோது, கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து விடுவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதனால் மகிந்தவின் அரசாங்கம்தான் இந்த பிரிப்பினை செய்ததாக மக்கள் மத்தியில் ஓர் அபிப்பிராயம் காணப்பட்டது.
எனவே வடக்கையும், கிழக்கையும் தானே பிரித்து கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தேன் என்று அதாஉல்லாஹ் அவர்கள் கூறுவது முற்றிலும் தவறான பிரச்சாரமாகும். அவ்வாறு பிரித்தமைக்காக உரிமைகோருவதாக இருந்தால் அது ஜே.வீ.பீயினருக்கு மாத்திரம் உள்ளதே தவிர, வேருயாருக்குமில்லை.