பொத்துவில் பெரியபள்ளிவாசல் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.பி.ஏ. அஸீஸ் அவர்களின் செயலாளராகவும் சேவையாற்றிய சகோதரர் சுபைர் ஹாஜியார் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் சுபைர் ஹாஜியார் அவர்களின் மறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொத்துவில் பிரதேச மக்களுக்கு மிக நீண்ட காலம் பொதுப் பணியாற்றிய அன்னாரின் திடீர் மரணம் எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடிய அன்னார் என்னுடன் மிக நீண்ட நாள் உறவாக இருந்த ஒருவராவார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அஸீஸ் அவர்களுடன் இணைந்திருந்து பொத்துவில் பிரதேச அபிவிருத்தக்கு பல்வேறு வகையிலும் பெரும் பங்காற்றினார். அதேபோன்று ஜூம்மா பள்ளிவாசல் தலைவராக செயற்பட்ட காலத்தில் மர்ஹூம் சதகத் ஹாஜியார் அவர்களுடன் இணைந்து பொத்துவில் பெரிய பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கான முயற்சியில் ஈடுபாடு காட்டியிருந்தார். அதன் பேறாய் அப்பள்ளிவாசல் தற்போது அழகிய கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
அன்னார் திடீர் சுகயீனமுற்று மரணமடைந்தது எம்மை பெரும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. அன்னாருடைய மறைவினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள மனைவி மற்றும் மக்கள் நண்பர்கள் பொத்துவில் மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்னும் உயர்வான சுவர்க்கத்தை அருளுவதற்கு வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.