வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டத்தின் ஒரு அங்கமாக சம்மாந்துறை 7 ஆம் வட்டாரத்தில், பிரதேசசபை உறுப்பினரும் பொதுச்சுகாதார மாதுவுமான ஆயுர்வேத வைத்தியர் முகம்மட் சுல்தான் சரீபாவின் தலைமையில் மரநடுகை நிகழ்வு 2018-08-01 ஆம் திகதி இடம்பெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய வழிகாட்டலில் இடம்பெற்ற இன்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும், சம்மாந்துறை இறக்காமம் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும், சமூகவலுவூட்டல் அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான பாராளமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்..மன்சூர் கலந்துகொண்டதுடன் பெரும் திரளான கட்சி தொண்டர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் “பசுமைப்புரட்சிக்கான அழைப்பு” திட்டத்தின்கீழ் வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஆலவிருட்சத்தின் விளுதுகளாகவும், கிளைகளாகவும் ஆங்காங்கே பரந்து, விரிந்துவாழும் போராளிகளை கட்சியுடனும் தலைமையுடனும் இணைக்கும் உறவுப்பாலமான 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.
கட்சி சின்னத்தை மக்கள் மயப்படுத்துவதுடன், ஆதரவாளர்களின்; வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களது சுகநலன்களை விசாரிப்பதுடன், குடும்பத்தில் காணப்படும் குறைநிறை மற்றும் தேவைப்பாடுகளை தலைமைக்கு தெரிவிக்கும்; சந்தர்ப்பமாக இந்த 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கும் போராளிகள் மற்றும் இளைஞர்கள் இடையிலான இடைவெளியை குறைப்பதுடன், கட்சியின் வளர்ச்சிப் பணியில் அவர்களை பங்காளர்களாக இணைத்துக் கொள்வதற்கும் மரம் நடப்பட்ட குடும்பத்துக்கு முடியுமான உதவிகளை செய்துகொடுப்பதுடன், கட்சியை வளர்த்துச் செல்வதற்கவும் இந்த வேலைத்திட்டம் வழிவகுக்கும்.
வீடுகளில் நடப்படுகின்ற மரக்கன்றுகளை பராமரித்து, மரம் வளர்வதுடன் சேர்த்து அந்தக் குடும்பத்துக்கும் கட்சிக்குமான நெருக்கமும் வளரவேண்டும். மரங்கள் அருகிவரும் நிலையில், இத்திட்டத்தின் மூலம் பசுமைப்புரட்சியை எற்படுத்துவது கட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.














