புணானை மேற்கு முஸ்லிம்களின் குடியுரிமை அதிகாரிகளினால் தொடர்ச்சியாக மறுக்கப்படுகிறது


– பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீம்-

எச்.எம்.எம்.பர்ஸான்-
கிரான் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட புணானை மேற்கு 210 ஈ கிராம சேவகர் பிரிவிலுள்ள புணானை அணைக்கட்டு – முள்ளிவட்டவான் எனும் பிரதேசத்தில் முஸ்லிம்கள் 1956 ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்ததற்கான பல்வேறுபட்ட ஆதாரங்கள் இன்றுவரை உள்ளது.

கடந்தகால யுத்தத்தின் காரணமாக அப் பிரதேச மக்கள் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் பதினைந்து உயிர்கள் இழக்கப்பட்டதன் பின்னர் அப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் தற்போது அவர்கள் அங்கு வாழுவதற்கு அவர்களுக்கான குடியுரிமை அதிகாரிகளினால் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீம் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் நான்காவது அமர்வு தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் 26 ம் திகதி கூடியது அதில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீம் மேற்சொன்னவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,

குறித்த பிரதேசத்தில் யுத்தத்துக்கு முன்னர் நூற்றிப்பதினொரு குடும்பங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் வாக்காளர் இடாப்பில் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. எனவே நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் அப் பிரதேசத்து மக்கள் குடியேறச் சென்றபோது பல்வேறு அசெளகரிகங்கள் அவர்களுக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. அங்கு வாழ்ந்து வந்த நூற்றிப்பதினொரு குடும்பங்களில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் உட்பட்ட குடும்பங்கள் மாத்திரமே குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அம்மக்கள் அங்கு குடியேறுவதற்கு தடையாக கிரான் பிரதேச செயலாளர் மற்றும் அப்பிரதேசத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், வன இலாகா அதிகாரிகள் போன்றோர் இப் பிரதேசத்தில் குடியேறக் கூடாதென்றும் இது வன இலாகாவுக்குரிய பகுதி என்றும் அம்மக்கள் குடியேறுவதற்கு தடையாகவுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அது வன இலாகாவுக்கு சொந்தமான இடம் இல்லை என்றும் நீதிமன்றத்தினால் தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே மிக அண்மைக்காலமாக இப்பிரதேச மக்களின் குடியுரிமை மறுக்கப்படுவதற்கான பிரதான காரணம் அப் பிரதேச மக்கள் வாகனேரி குளத்தை அண்டிய பகுதிகளில்தான் மீன்பிடி தொழிலை அவர்களுடைய வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதற்காக வேண்டி 1985 ம் ஆண்டு அவர்களுக்கான நண்ணீர் மீன்பிடி வாகனேரி விரிவாக்கல் சங்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது அதன் தலைவராக மீரா லெவ்வை என்பர் இருந்ததற்கான ஆதாரங்களும் இன்றுவரை உள்ளது.

எனவே யுத்தத்துக்கு முன்னர் தமிழ் முஸ்லிம் உறவுகள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் முஸ்லிம்களாகிய நாங்கள் அப் பிரதேசத்தில் தற்போது வாழுகின்ற தமிழ் சமூகத்தோடு ஒற்றுமையாகத்தான் வாழ விரும்புகின்றோம் ஆனால் இங்குள்ள அதிகாரிகள்தான் இக் குடியேற்றத்தை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்கின்றார்கள் அதற்கு சில அரசியல்வாதிகளும் உடந்தையாக இருப்பதாக அம்மக்கள் குற்றச்சாட்டுக்களை எம்மிடம் தெரிவிக்கின்றனர்.

எனவே அம்மக்களின் குடியுரிமை பாதுகாக்கப்படுவதோடு அவர்கள் தொடர்ந்தும் அப்பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஓட்டமாவடி பிரதேச சபை முன்னின்று இவர்களுக்கான நிரந்தரத் தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீம் சபையோர் முன்னிலையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -