நடுத்தெருவில் 90வயது மூதாட்டியை தவிக்கவிட்ட பிள்ளைகள் மூவருக்கும் தலா 50ஆயிரம் ருபா சரீரப்பிணை!

மூதாட்டிக்கு மாதம் 15ஆயிரம்ருபா செலுத்த நீதிவான் தீர்ப்பு!தமிழ் இளைஞர் சேனைக்கு மக்கள் பாராட்டு!
காரைதீவு நிருபர் சகா-
ல்முனையில் நடுத்தெருவில் மூதாட்டியை கைவிட்ட பிள்ளைகள் மூவருக்கும் தலா 50ஆயிரம் ருபா சரீரப்பிணையில் செல்ல நீதிவான் றிஸ்வான் அனுமதித்தார். மூதாட்டியின் பராமரிப்பிற்காக மாதமொன்றுக்கு 3பிள்ளைகளும் தலா 5ஆயிரம் ருபா வீதம் மொத்தம் 15ஆயிரம் ருபாவைச் செலுத்தவேண்டும் என்றும் அவர் தீர்ப்பளித்தார்.

கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கை  (9)வியாழக்கிழமை விசாரித்த போது நீதிவான் ஜ.என்.றிஸ்வான் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இன்று மன்றுக்கு பிள்ளைகள் மூவரும் வந்திருந்தனர். குறித்த மூதாட்டியும் கல்முனை ஆஸ்பத்திரியிலிருந்து மன்றுக்கு வந்திருந்தார்.கல்முனை இளைஞர் சேனை அமைப்பினர் அவரை காரில் கொண்டுவந்திருந்தனர்.

அடுத்த தவணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதி என நீதிவான் கூறினார்.

மூதாட்டியை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதி வரை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார். அதற்கிடையில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக சமுகசேவை உத்தியோகத்தரையும் 4ஆம் திகதி மன்றிற்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டார். குறித்த மூதாட்டியை பொருத்தமான வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பதற்கு அந்த அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளுமுகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூதாட்டி சார்பில் சட்டத்தரணி முத்துலிங்கம் ஆர்த்திகா சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். றிபாஸ் மன்றில் ஆஜராகியிருந்தார்.

அத்தருணம் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றது.
குறித்த மூதாட்டி கல்முனை இளைஞர்சேனை இளைஞர்களிடம் கூறியதாவது:
முதலில் எனது பிள்ளைகளை வெளியில் எடுத்துவிடுங்கள். அவர்கள் கூட்டுக்குள் இருக்கும்போது எனக்கு சோறும் வேண்டாம் தண்ணியும் வேண்டாம். அவர்களை வெளியில் விடுங்கள். அவர்களது காசுவேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது பிழைப்பேன். அவர்களை கஸ்ட்டப்படுத்தவேண்டாம் என்றார்.
இதுதான் "தாய் மனசு "என்பதை உள்ளிருந்தவர்கள் அறியவில்லை. அல்லது அவர்கள் உணரவில்லை.இந்தப்பிள்ளைகள்போல் உலகில் இன்னும் பலர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.அவர்களுக்கெல்லாம் இந்தத்தீர்ப்பு நல்லபாடமாகும்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:

குறித்த மூதாட்டி மல்வத்தையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சீனிப்பிள்ளை(வயது 90) என்பவராவார்.கல்முனை வைத்தியசாலை முன்பாக கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை பிள்ளைகளால் கொண்டுவந்து கல்முனை ஆதாரவைத்தியசாலை முன்பாக இறக்கிவிடப்பட்டு அநாதரவாகக்கிடந்த மூதாட்டியை கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை அமைப்பினர் கண்டு உடனடியாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சேர்த்தனர்.
இளைஞர்சேனையால் மீட்கப்பட்ட குறித்த மூதாட்டியை பின்னர் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர்சேனை அமைப்பு வழக்கொன்றை தாக்கல் செய்தது. வழக்காளி சார்பாக சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் மற்றும் சட்டத்தரணி முத்துலிங்கம் ஆர்த்திகா ஆகியோரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி றிஸ்வான் குறித்த மூதாட்டியை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சை பெறுமாறும் பணித்ததுடன் அந்த மூதாட்டியின் பிள்ளைகள் மூவரையும் அடுத்த தவணைக்கு அதாவது  (9)ஆஜராகும் வண்ணம் அழைப்பாணையையும் பிறப்பித்திருந்தார்.

மூதாட்டியின் பிள்ளைகளான பாண்டி கிருஸ்ணன் பாண்டி குபேந்திரன் பாண்டி தவமணி ஆகியோர் மல்வத்தையிலுள்ளனர். அவர்களை இன்று 9ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இவர்களுக்கெதிராக தாபரிப்புவழக்கு போடப்பட்டிருந்தது. அவர்கள் மூவரும் இன்று ஆஜராகியிருந்தனர். நாலாவது பிள்ளை காரைதீவிலுள்ளார். அவருக்கும் அழைப்பாணை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
வயோதிப காலத்தில் பெற்றோரை அநாதையாய் நடுவீதியில் கழற்றி விடுபவர்களுக்கு அதிர்ச்சி தீர்ப்பு எனவும் பல பெற்றோர்கள் கஸ்டப்பட்டு பெற்று உரிய வயது வரை வளர்த்து திருமணம் முடித்து கொடுத்த பின் பெற்றோரை வயோதிபம் எய்தினால் அல்லது ஏதும் நோயால் அவதியுற்றால் அவர்களுக்கு உதவி உணவு பணம் கொடுக்க வேண்டிவரும் என்பதற்காக தம்மை ஆளாக்கிய பெற்ற தாயை கழற்றி விட்ட சம்பவம் மல்வத்தையில் இடம்பெற்றுள்ளது. அப்படிப்பட்ட நன்றிமறந்த பிள்ளைகளுக்கு நல்ல பாடமாக என்பதை இந்ததீர்ப்பு உணர்த்திவிட்டது என்று பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதேவேளை இதற்கு முன்னின்று நடவடிக்கையெடுத்த கல்முனை தமிழ் இளைஞர்சேனை அமைப்பினருக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத்தெரிவிக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -