திருமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசம் என்பது முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் ஓர் இடம். யுத்த காலத்திலும் அதன் பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கிண்ணியா முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டே வந்தனர், வருகின்றனர். ஒரு புறத்தில் அன்று இராணுவம் -விடுதலைப் புலிகள் மோதல். மறுபுறத்தில் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். ஆனால், இன்று யுத்தம் முடிவடைந்தாலும் வாழ்வாதாரப் போராட்டம் தொடர்கிறது.
தங்களது வாக்கு வங்கிகளை நிரப்பும் அரசியல்வாதிகளால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பிய கிண்ணியா மக்கள் இன்று தங்கள் நாளாந்த வாழ்வாதாரத்தையே இழந்து வருகின்றனர் பாவம்.
கிண்ணியா மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய தேடலான மீன்பிடித் தொழிலை அவர்கள் சுதந்திரமாகவும் சட்ட ரீதியாகவும் செய்ய முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒருவன் தனது வாழ்வாதாரத்தை சட்ட ரீதியாக தேடிக் கொள்ளும் உரிமை உள்ளவனாக இருந்தாலும் கிண்ணியாவைப் பொறுத்தவரை அங்கு வாழும் முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினர் அதனைச் சலுகையாகப் பெற வேண்டிய துரதிர்ஷ்டசாலிகளாக உள்ளனர். ஆனால், அந்தச் சலுகையைக் கூட அவர்களால் அனுபவிக்க முடியாத நிலைமை.
கடலில் மீன்பிடிப்பதற்கான ஏழு கிலோ மீற்றர் தடையே இன்று கிண்ணியா மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதார மூச்சுக் குழாயை சுருக்குவலை கொண்டு இறுக்கியுள்ளது. இதனால் தங்களது மீன்பிடித் தொழிலில் அவர்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
அங்குள்ள சிங்கள அதிகாரிகள் சிலரின் அடக்குமுறை, மற்றும் திட்டமிட்ட தடைகளால் அவர்களது மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளிடம் வாக்குகளை இழந்து ஏமாந்தவர்கள் இன்று தங்கள் வாழ்க்கைகையையும் இழக்க வேண்டிய துயரம் அங்கு தொடர்கிறது.
இந்த நிலையில், கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள ஏழு கிலோ மீற்றர் தடையைநான்கு மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்குவதற்குமீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்ஸா அவர்கள்உத்தியோகபூர்வமாக அனுமதியை வழங்கியும் அதனை நடைமுறைப்படுத்துவதில் திருமலையில் உள்ள சிங்கள அதிகாரிகள் சிலர் இனவாத வன்மனம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்கள், நீரியல்வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாஅவர்களைச் சந்தித்து கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி, குறித்த மீன்பிடி எல்லையைத் தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கான அனுமதியை அண்மையில் பெற்று அந்தக் கடிதத்தை கடற்படைத் தளபதியிடம் ஒப்படைத்தபோது, ‘மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் தங்களிடம் முறையிடாவிட்டால் நாங்கள் இனிமேல் மீன்பிடிப் படகுகளை கைப்பற்றமாட்டோம் என கடற்படைத் தளபதி கூறியுள்ளார். இதன்மூலம், இந்தப் பிரச்சினைக்கு பிரதான காரணமானர்கள் திருமலையில் உள்ள மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள்தான் என்பது தெட்டத் தெளிவாகிறது.
இதனையடுத்து இம்ரான் மஹ்ரூப் அவர்கள், திருகோணமலை மீன்பிடி திணைக்கள பிரதி பணிப்பாளரைச் சந்தித்து அமைச்சர் வழங்கிய அனுமதிக் கடிதத்தை ஒப்படைத்துள்ளார். ஆனால், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அந்த அதிகாரியோ, கிண்ணியா முஸ்லிம் மீனவர் சமூகத்தின் நலனில் அக்கறை கொள்ளாதவர் போல் செயற்பட்டுள்ளார். மத்திய அரசின் அமைச்சர் அதுவும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் உத்தியோகபூர்வக் கடிதத்திலேயே பிழை பிடித்து திருத்திக் கொண்டுவருமாறுஇம்ரான் மஹ்ரூபிடம் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பின்னர் மீண்டும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் அமைச்சு வாசல்படி ஏறிய இம்ரான் மஹ்ரூப், குறித்த அதிகாரி கூறிய திருத்தங்கள் அனைத்தையும் மேற்கொண்டு மீண்டும் அந்தக் கடிதத்தைப் பிரதிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்திருந்தார்.
ஆனால், இன்றுவரை மீன்பிடித் தடைநீக்க உத்தரவை அமுல்படுத்தாமல் தொடர்ந்தும் மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் திருகோணமலை மீன்பிடித் திணைக்கள பிரதி பணிப்பாளரின் இனவாத முகம் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் இம்ரான் மஹ்ரூப் எம்.பி ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக்காரர் என்பதற்காக இந்த விடயத்தில் தலையிடாமல் நாம் ஒதுங்கி விடுவோம் என்று ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் தூரமாகி விடக் கூடாது. இங்கு கூட்டு சமூகப் பொறுப்பே முக்கியம். கட்சி, அரசியல் அல்ல. எனவே அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டு கிண்ணியா முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகாண நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் கிண்ணியாவில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையுடன் தொடர்புடையது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் போன்ற பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், ஆதரவாளர்களும் மீன்பிடித்தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுதான் உள்ளார்.
மேலும் கட்சி, அரசியல் வேறுபாடுகளுடன் இந்த விடயத்தை நோக்காது, பாதிக்கப்படுவது எமது முஸ்லிம் மக்களே என்ற சமூக உணர்வுடன் செயற்பட்டு இந்தப் பிரச்சினையை அனைவரும் கையாண்டு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கிராமிய பொருளாதார மீன்பிடித்துறைபிரதியமைச்சர் கௌரவ எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களுக்கு இந்த விடயத்தில் பாரிய பங்குண்டு மீன்பிடித்துறைக்கும் அவர் பிரதியமைச்சராக இருப்பதால் அவரால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது கல்லைக் கடிப்பது போன்றதல்ல. கற்கண்டை ருசிப்பது போன்றதே. எனவே இந்த விடயத்தில் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும்
கிண்ணியா மீனவர்கள் இன்று இந்த விடயத்தில் தரையில் போட்ட மீன்களாகத் துடிக்கின்றனர். எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கையை கடற்கரையில் காய்ந்து கிடக்கும் கருவாட்டின் நிலைமைக்குத் தள்ளிவிடாமல் அவர்களைப் பாதுகாப்பது எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கட்டாயக் கடமை.