"லங்கா புத்திர" என பெரும்பான்மை சமூகத்தால் கௌரவிக்கப்பட்ட தலைவர் ரவூப் ஹக்கீம்!


எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி.-
லங்கையில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அதிகமாக பேசப்படும் சொல்லாக நல்லிணக்கம் என்ற சொல் காணப்படுகிறது.

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை காரணமாக நீண்ட கால யுத்தமொன்றை சந்தித்திருந்த இந்த நாடு மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாதென்பதனால் தற்போதைய அரசாங்கம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வெறுமனே பேரளவில் நல்லிணக்கம் பேசப்படுவதாக இருக்கக்கூடாது. பெரும்பான்மைச் சமூகத்தினரும் அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அத்தோடு, இன்று இனங்களுக்கு என தனித்தனி கட்சிகளுண்டு. அவைகளும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கும் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் தொடக்கம் இன்றைய தலைவர் வரை தன் இனத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்களே தவீர, இனவாதமாகச் செயற்படவில்லை. மாறாக, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேற்கொண்டார்கள்.

இன்று பேரினவாதக்குழுக்கள் முஸ்லிம் சமூகத்தை வந்தேறு குடிகள் என்று சொல்லி நாட்டை விட்டும் வெளியேற வேண்டுமென கோசமெழுப்புகின்ற வேலையில் பேரின சிங்கள மக்களின் அதிகமானவர்களிடம் முஸ்லிம்கள் தொடர்பில் நல்லெண்ணங்களை ஏற்படுத்துவதில் கடந்த காலம் முதல் இன்று வரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் செயற்பட்டு வந்திருக்கிறார்.

கடந்த அரசாங்கத்தில் 2010ம் ஆண்டு காலப்பகுதியில் நீதி அமைச்சராக இருந்த போது ரவூப் ஹக்கீம் அவர்களின் இனவாதமற்ற நல்லிணக்கச் செயற்பாடுகளைக் கௌரவிக்குமுகமாக இந்த நாட்டின் முக்கிய பௌத்தபீடமென்றினால் ஒரு விழா எடுக்கப்பட்டு அதில் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு "லங்கா புத்திர" (இலங்கை மகன்) என்ற விருதும் வழங்கப்பட்டதை இந்த கால கட்டத்தில் நினைவுபடுத்துகிறேன்.

அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ரவூப் ஹக்கீம் அவர்கள் மேற்கொள்ளவில்லை, அவர் வளர்ந்த சூழல் மூவின மக்களுடனும் சேர்ந்து பழகியதன் விளைவால் அவரிடத்தில் இன நல்லிணக்கம் இயல்பாகவே ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகவே நாம் பார்க்கிறோம்.
தனக்கு அதிகாரங்கள் கிடைக்கும் போது, அதைக்கொண்டு தன் இனத்திற்காக மட்டும் சேவை செய்யாது, தேசியம் என்ற அடிப்படையில் சகல இனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுக்கொண்டிருக்கிறார் என்பதை அண்மைக்காலமாக அவரின் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்க்கும் போது கண்டு கொள்ளலாம்.

அது மாத்திரமில்லை, தன் இனத்தைச் சேர்ந்தவர்களால் பேரின சகோதரர்கள் தொழில் ரீதியாக பாதிப்புகளைச் சந்தித்த போது, பாதிக்கப்பட்ட பேரின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக குரல் கொடுத்ததையும் நினைவுபடுத்துகிறோம்.
அதே போலே, முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்காத தமிழினத்தின் நியாயமான கோரிக்கைகளை வரவேற்பதையும், அவர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லுறவை ஏற்படுத்தி வைத்திருப்பதும் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவே பார்க்கப்படுகிறது.
இன்று சிலர் தங்களின் அரசியல் இருப்பைத் தக்க வைப்பதற்காகவும், தங்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களை திசை திருப்பவும் தமிழர் தரப்புடனும் அதே போலே பேரினவாதிகளுடனும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலைமை முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமில்லை, இவ்வாறு இரு பேரினங்களையும் விட்டு முஸ்லிம் சமூகத்தை தனிமைப் படுத்துவதானது பெரும் ஆபத்தை உண்டு பண்ணும்.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்ட ரவூப் ஹக்கீம் அவர்கள் தான் பொறுப்புள்ள ஒரு சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஏனைய இனங்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டு தான் சார்ந்த சமூகத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திச் செயற்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

எனவே, இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு ஏனைய சமூக, அரசியல் தலைவர்களும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுடன் கூடியதான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வர வேண்டுமென்பதே சமூக எதிர்பார்ப்பாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -