ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டலில் சர்வதேச சந்தையில் மீன் ஏற்றுமதியை அதிகரிக்கும் திட்டத்தில் இலங்கை மீனவர்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் இலத்திரனியல் மீன் பிடி தரவு குறிப்பேடு (IPad) ஆழ்கடல் படகுகளுக்கு வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் கடல் தொழில் அமைச்சினால் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச மீன்பிடி உரிமையாளர்களுக்கு இலத்திரனியல் மீன் பிடி தரவு குறிப்பேடு (IPad) வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை மீன்பிடி துறைமுக வளாகத்தில் இடம்பெற்றது.
அல்அமான் படகு உரிமையாளர் அமைப்பின் தலைவர் எச்.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்தொழில் நீரியவள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மீன் பிடி திணைக்கள பணிப்பாளர் றுக்சான் குறூஸ், வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் எஸ்.சிவரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலத்திரனியல் மீன் பிடி தரவு குறிப்பேட்டினை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் எந்த இடத்தில் மீன் பிடிப்பது என்றும், என்ன வகை மீன் என்றும் மீன் பிடி திணைக்களத்திற்கு இக்கருவி மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட மீன் பிடி திணைக்கள பணிப்பாளர் றுக்சான் குறூஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்தினப் படகுகள் மூன்று ஐம்பது இருந்த போதிலும் முதல் கட்டமாக இருநூற்றி அறுபது படகுகளுக்கு இலத்திரனியல் மீன் பிடி தரவு குறிப்பேடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடற்தொழில் நீரியவள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தினை பார்வையிட்டதுடன், தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.




