முன்னாள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை கல்முனையிலுள்ள வீதியொன்றுக்கு சூட்ட கல்முனை மாநகர சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு அண்மையில் மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் மரணித்து ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு, அவரது சேவைகளை கௌரவித்து, அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள காசிம் வீதிக்கு கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் வீதி என பெயர் சூட்ட வேண்டும் எனக்கோரும் பிரேரணையொன்றை மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் இந்த சபை அமர்வில் கொண்டு வந்திருந்தார்.
இப்பிரேரணை மீது உறுப்பினர்கள் கருத்துரை நிகழ்த்தினர். இதன்போது "கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மாமா முறையான காசிம் போடியாரை கௌரவப்படுத்தி வைக்கப்பட்ட பெயரே காசிம் வீதியாகும். ஒரு பெரியாரின் வைப்பதற்காக இன்னொரு பெரியாரின் பெயரை நீக்குவது நாகரீகமல்ல என்பதால் மன்சூர் அவர்களின் பெயரை வேறொரு வீதிக்கு சூட்டுவதே பொருத்தமாகும்" என்று உறுப்பினர் எம்.எஸ்.எம்,.சத்தார் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து " காசிம் வீதியைத் தவிர்த்து கல்முனைக்குடியிலுள்ள பொருத்தமான வீதியொன்றுக்கு அவரது பெயரை சூட்டுவதற்கு இந்த சபை தீர்மானிப்பதாகவும் அவ்வீதியை தெரிவு செய்வதற்கும் மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் என அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமிப்பதாகவும் மாநகர முதல்வர் அறிவித்தார். இந்த யோசனைக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கினர்.
இதன்போது முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் தொகுப்புரையொன்றை நிகழ்த்தினார்.
அதேவேளை மாநகர சபையின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தரான எம்.ஐ.எம்.பிர்னாஸ், இந்த சபை அமர்வின் ஆரம்பத்தில் முதல்வரினால் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் இதுவரை காலமும் சபைச் செயலாளராக கடமையாற்றிய நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிபுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த மாதாந்த சபை அமர்வில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பது தொடர்பில் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பரினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் அமைந்துள்ள அமானா வங்கியை அப்புறப்படுத்த வேண்டும் எனக்கோரி உறுப்பினர் பொன் செல்வநாயகத்தினால் கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரணை மீதும் உறுப்பினர்கள் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர்.
அத்துடன் கல்முனை பொதுச் சந்தை புனரமைப்பு, மாநகர சபைக்கு புதிய கட்டிடக் தொகுதி நிர்மாணித்தல், தனியார் பஸ் நிலையம் அமைத்தல், பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவுத்தொகுதி அமைத்தல், மருதமுனை மஷூர் மௌலானா விளையாட்டரங்கு அபிவிருத்தி, திண்மக்கழிவகற்றல் பிரச்சினை, தெரு விளக்கு கொள்வனவு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து உறுப்பினர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்ட கருத்துக்களுக்கும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் முதல்வர் ஏ.எம்.றகீப் பதிலளித்தார்.