நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பேராளர் அவை எதிர்வரும் 2018 ஜூன் 30 ஆம் திகதி சனிக்கிழமை காத்தான்குடியில் ஒன்றுகூடுகிறது.
இதன்போது புதிய தலைமைத்துவ சபை தெரிவு செய்யப்படவுள்ளதுடன், புதிய பதவி நிலை உத்தியோகத்தர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இப்பேராளர் அவையின்போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஸ்தாபக அங்கத்தவர்களால் புதிய தலைமைத்துவ சபை தெரிவு செய்யப்படவுள்ளது.
நான்கு ஆண்டுகளை பதவிக்காலமாகக் கொண்ட தற்போதைய தலைமைத்துவ சபையானது, 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டது.
எதிர்வரும் 2018 ஜூன் 30 ஆம் திகதி நடை பெறவுள்ள பேராளர் அவையானது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது பேராளர் அவை என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏதிர்வரும் நான்கு வருடங்களுக்கான புதிய தலைமைத்துவ சபையும் புதிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்படவுள்ள இந்தப் பேராளர் அவை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பாதையில் ஒரு மைல் கல்லாகவும் திருப்பு முனையாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஸ்தாபக அங்கத்தவர்கள், அண்மையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட மட்ட செயற்குழு உறுப்பினர்கள் என நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் 350க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த பேராளர் அவை ஒன்றுகூடலைத் தொடர்ந்து, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் களம் இறங்குவதற்கான ஆயத்தங்களுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய உத்வேகத்துடன் செயற்படவும் தயாராகி வருகிறது.
நிலையான மாற்றத்தை நோக்கிய மக்களுக்கு விசுவாசமான அரசியல் சக்தியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு, அனைவரும் இணைந்து செயற்பட முன்வருமாறு இத்தருணத்தில் வேண்டிக்கொள்கிறோம்.
பொதுச் செயலாளர்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி