அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு (28) சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மேற்படி இருவரும் தவிசாளர், பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் 8உறுப்பினர்களும், தேசிய காங்கிரஸ் சார்பாக 6உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக 3உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஒருவருமாக மொத்தமாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 18 உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது தவிசாளராக ஒருவரை தெரிவு செய்யுமாறு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தெரிவித்தார். அதற்கினங்க, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான ஏ.எல்.அமானுல்லாவினதும், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஜஃபரினதும் பெயர் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதன்காரணமாக இருவரில் ஒருவரை தவிசாளராக தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதன்போது இருவருக்கும் தலா 9வாக்குகள் அளிக்கப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குலுக்குச்சீட்டின் மூலம் தவிசாளரை தெரிவு செய்ய வேண்டும் என உள்ளுராட்சி ஆணையாளர் தெரிவித்தார். இதற்கமைவாக, குலுக்கல் முறையினூடாக ஏ.எல்.அமானுல்லா தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து பிரதி தவிசாளர் ஒருவரை சபையில் தெரிவு செய்யுமாறு உள்ளுராட்சி ஆணையாளர் தெரிவித்தார். அதற்கினங்க, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான ரீ.ஆப்தினதும், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஜஃபரினதும் பெயர் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதன்காரணமாக இருவரில் ஒருவரை தவிசாளராக தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதன்போது இருவருக்கும் தலா 9வாக்குகள் அளிக்கப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குலுக்குச்சீட்டின் மூலம் உப தவிசாளரை தெரிவு செய்ய வேண்டும் என உள்ளுராட்சி ஆணையாளர் தெரிவித்தார். இதற்கமைவாக, குலுக்கல் முறையினூடாக எம்.எஸ்.எம்.ஜஃபர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.