அந்த பஸ்...
++++++++++
Mohamed Nizous
அந்த பஸ்
ஆங்காங்கு வருகிறது.
அந்தி மங்கி
ஆள் தெரியா இருட்டில்
'அவர்களைச்' சுமந்து
அந்த பஸ்வரும்.
காபனையும்
காடைத் தனத்தையும் கக்க
இயந்திரமும்
இனவாதமும் இரைய
சில்லும்
சிறு பான்மையும் நசிய
அந்த பஸ்
ஆங்காங்கு வருகிறது.
நிறுத்தி வைத்த வண்டிகளில்
வெறித்தனம் பேயாடும்.
சாதிகளை இழித்து
வீதிகளில் கத்தப்படும்.
ஜன்னல், கதவு, கண்ணாடி
தன்னால் முடிந்த வரை
தவிடு பொடியாக்கப்படும்.
அகப்பட்ட மனிதங்களில்
அடாவடி அரங்கேறும்.
திருடி விட்டு கடைகளுக்கு
தீ வைக்கப்படும்.
அள்ளாஹ்வின் இல்லத்தையும்
அடித்து நொறுக்கி விட்டு
விடியு முன்
விடை பெறும் வந்த கூட்டம்.
காலியில்
காலியானது.
அம்பாரையில்
அம்பேல் ஆனது.
அடுத்த பஸ்
எந்த ஊருக்கோ.
கண்டன அறிக்கைகள்
கமராவுடன் விசிட்கள்
கருகிய கடைக்குக்
கடுமையான பாதுகாப்பு.
காவல் துறையின்
கண் துடைப்புக்கள்
காட்சி முடிந்து விடும்.
வந்த கும்பல்
எந்தக் கைதுமின்றி
அந்த காடைத் தனத்தை
அசகாய சூரத்தனமாய்
அவர்களுக்குள் பேசு மகிழும்.
இன்னுமொரு பஸ்
இரவில் வரும் வரை
எந்தச் சலனமுமின்றி
இருக்கும் ஆட்சி பீடம்...!