மிக நீண்ட காலமாக வழியில் செல்லும் பெண்களின் மாலைகளைப் பறித்துச் செல்லும் நபர் ஒருவர், மற்றுமொரு பெண்ணின் கழுத்திலிருந்த 45 ஆயிரம் ரூபா பெறுமதியான மாலை ஒன்றைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றபோது, அந்நபர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவமொன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது.
நேற்று முன் தினம் பட்டப்பகல் 2.50 மணியளவில், கம்பஹா ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றதாக, கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் அன்றைய தினம் பாதையில் நடந்து செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், சம்பவம் நடைபெறும்போது, அருகில் இருந்த ரோந்துப் பொலிஸார் உடனடியாக செயலில் இறங்கி, குறித்த சந்தேக நபரை இடைவிடாமல் துரத்தியதால், அவரை கம்பஹா மேம்பாலத்திற்கு அருகில் வைத்துப் பிடிக்க முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த சந்தேக நபர், ஏற்கனவே மினுவாங்கொடை, பேலியகொடை, கிரிபத்கொடை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இப் பொலிஸாரின் கண்களில் மண்ணைத்தூவித் தப்பித்துச் சென்றவர் என்பதும், தற்போதைய விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் கம்பஹா பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை, கம்பஹா மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.