சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை வெல்வதற்காகவே தான் எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் குறித்த தேர்தலில் தான் வெற்றிபெறும் சந்தர்ப்பத்தில் தனக்குக் கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தப் போகும் 19 ஆம் வட்டார ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு செலவிடுவேன் என்ற உறுதிமொழியை உள்ளசுத்தியுடன் வழங்குவதாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் சுயட்சையாக போட்டியிடும் தொழிலதிபர் முஹர்ரம் பஸ்மிர் தெரிவித்தார்.
19 ஆம் வட்டாரத்தில் சுயட்சைக்குழு சார்பில் போட்டியிடும் முஹர்ரம் பஸ்மிறை வெற்றியடைய வைப்பதற்கான வியூகங்களை வகுக்கும் வகையில் குறித்த வட்டார மக்களை தெளிவுபடுத்துவதுடன் தேர்தலுக்கான குழு ஒன்றையும் அமைக்கும் மக்கள் சந்திப்பு 2017-12-30 ஆம் திகதி முஹர்ரம் பஸ்மிரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவும் கௌரவ அதிதியாக அக்பர் பள்ளிவாசலின் தலைவர் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.
ஏழைகளின் கஷ்ட்டங்களை அனுபவித்தவன் என்ற அடிப்படையிலும் சிறந்த கல்வியின் ஊடாகவே பிராந்தியத்தின் அபிவிருத்தியை எட்ட முடியும் என்ற தெளிவான சிந்தனையில் இருக்கும் தான் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருவதாகவும் இதற்க்கு மேலதிகமாக உறுப்பினராகும் பட்சத்தில் அதனூடாகக் கிடைக்கும் அனைத்து ஊதியங்களையும் ஏழை மாணவர்களின் கல்வி மேன்பாட்டுக்காக செலவிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்கள் தாங்களை தாங்களே ஆளவேண்டும் என்ற இலக்கை அடைவதற்காய் பல்வேறு அகிம்சைவழிப் போராட்டங்களை நடாத்தி வந்துள்ளதாகவும் அவர்களது உள்ளக்குமுறல்களுக்கு இம்மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசியல்வாதிகள் ஏமாற்றத்தையே பரிசாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான ஏமாற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இம்மக்களின் உண்மையான உணர்வுகளை தேசியத்துக்கு எடுத்துக் காட்டுவதற்காவே தாங்கள் சுயட்சையாக களமிறங்கியுள்ளதாகவும் தனிப்பட்ட சுகபோகங்களை அடைவதற்காக அல்ல என்றும் சாய்ந்தமருது மக்கள் வழங்கப்போகும் ஒவ்வொரு வாக்கும் இந்த ஊருக்கு உள்ளுராட்சிசபை தேவை என்பதை பிரகடனப்படுத்தும் என்றும் எதிரான வாக்குகள் எங்களுக்கு சபை தேவையில்லை என்று கூறுவதற்கு சமனான வாக்கு என்றும் தெரிவித்தார்.
ஏனைய அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் நடவடிக்கைகளை சாய்ந்தமருதில் தவிர்த்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் களத்தில் வேட்பாளர்களை இறக்கியிருப்பது சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளை மழுங்கடிக்கும் செயல் என்றும் தெரிவித்தார்.
மிக நீண்ட காலமாக சாய்ந்தமருது மக்களின் வாக்குகளால் தங்களை ஸ்தீரப் படுத்திக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த மக்கள் காட்டிய விசுவாசத்துக்காக இம்முறை தேர்தலில் இருந்து ஒதுங்கி இம்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஆதரவுடன் மிகுந்த இறுக்கமான கட்டுக்கோப்புடன் களமிறங்கியுள்ள சுயட்சைக் குழு வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் கேடுபிடிகளைப் பயன்படுத்தி அவர்களது வேகத்தைக்குறைக்க சதிவலைகளும் பின்னப்பட்டு வருவதாகவும் அதற்குள் தாங்கள் எவரும் மாட்ட மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
தங்கள் ஜனநாயக தேர்தல் ஒன்றையே சந்திக்க விரும்புவதாக தெரிவித்த பஸ்மிர், முடியுமானவரை அதிகமான வாக்குகளை வழங்குவதற்கு வதற்கு சாய்ந்தமருது வாக்காளர்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.