மு.இராமச்சந்திரன்-
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுககொடுப்பதற்கு மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பலத்த காற்றினால் சேதத்துக்கு உள்ளாகிய கூரைத்தகரங்களுக்காக பதிலாக புதிய கூரைத்தகரங்களையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதற்கான நிதியை அமைச்சர் திகாம்பரம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் தோட்ட முகாமையாளர் மற்றும் கிராம சேவகர்கள் மூலமாக பெறப்பட்டு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை , நோர்வூட் , சாமிமலை , மஸ்கெலியா , டிக்கோயா , டயகம போன்ற பகுதிகளில் இயற்கையனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக கூரைத்தகரங்கள் மற்றும் ஏனைய நிவாரணங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் வழங்கப்படவுள்ளன.
(காலநிலை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் நிவாரணம் வழங்கும் நோக்கில் அவர்களுக்கான கூரைத்தகடுகளும் ஏனைய அத்தியாவசிய பொருட்களும் இன்று (2.12.2017) காலை 10 மணிக்கு நோர்வூட் விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பொருட்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (4.12.2017) காலை 10 மணிக்கு பொகவந்தலாவையிலும் காலை 11 மணிக்கு
நோர்வூட்டிலும் நண்பகல் 12 மணிக்கு
சாமிமலையிலும் பி.ப. 1 மணிக்கு மஸ்கெலியாவிலும் பி.ப. 2.30 மணிக்கு டயகமயிலும் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.)
இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் , அமைச்சர் திகாம்பரத்தின் இணைப்புச் செயலாளர் ஜி.நகுலேஸ்வரன் , ட்ரட்ஸ் நிறுவனத்தின் அட்டன் மற்றும் நுவரெலியா பிராந்திய இயக்குநர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதே வேளை நோர்வூட் நகரப்பகுதியில் வெள்ளநீரினால் பாதிக்கப்பட்டு நோர்வூட் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப நிவாரணப்பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


