மிரட்டல் பாணியில் சாதிக்க முற்படுபவர்கள் மூக்குடைந்து போவார்கள்.

எம்.என்.எம். யஸீர் அறபாத்-ஓட்டமாவடி-

ல்லாட்சி அரசாங்கத்தில் முதலாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற சந்தேகங்கள் மேலேழுந்த நிலையில், அவற்றுக்கொல்லாம் முற்றுப் புள்ளிவைக்குமுகமாக அண்மையில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களால் வெளியிடப்பட்டது.வர்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அதற்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பு இன்று (27) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதை அவதானிக்கலாம். அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அத்தோடு, வேட்பாளராக வரவேண்டுமென அபிலாஷை கொண்டவர்களும் தங்களுக்கான ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு கட்சித் தலைமையகங்கள், காரியாலங்களை நோக்கி வாய்ப்புக்கேட்டு படையெடுப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.



இந்தச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல சவால்களுக்கு மத்தியில் இத்தேர்தலை எதிர்நோக்குகிறது.


முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து பதவிக்காக தனிக்கட்சி அமைத்தவர்களின் நடவடிக்கைகள், பதவிகளால் வழமை போன்று கட்சி தங்களை அலங்கரிக்கவில்லையென்பதால், கட்சித்தலைமைக்கெதிராக மாறியவர்களின் நடவடிக்கைகள், அதே போல் சாய்ந்தமருது மக்களின் புதிய உள்ளூராட்சி மன்றக்கோரிக்கை தொடர்பான பிரச்சனைகள் என்று வெளியில் பல சவால்கள் இருக்கின்ற போதிலும், கடந்த காலங்களில் இவ்வாறான பல சவால்களுக்கு மத்தியிலும் பல தேர்தல்களை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்டு போராளிகளின் உரத்தால் வெற்றி பெற்ற வரலாறுகளுமுண்டு.


இந்தக்கட்சிக்கு வெளியிலிருக்கும் சவால்களைப்போல் கட்சிக்குள்ளும் சவால்கள் காணப்படுகிறது. இவ்வாறானதொரு தேர்தல் வரும் போது, தங்களின் நலன்களைச்சாதிக்க முற்படுபவர்கள் தலைமையை பணயக்கைதியாக வைத்து, அதைச்சாதிப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பார்கள். இவ்வாறான இக்கட்டான நிலைமைகளில் அன்றும் இன்றும் போராளிகள் தலைமைக்கு பக்கபலமாகவே செயற்படுவார்கள் என்பதில் மாற்றமில்லை.


உள்ளூராட்சி மன்றத்தேர்தல் கடந்த காலங்களில் விகிதாசார முறையில் நடைபெற்றது. அதன் காரணமாக ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் வாய்ப்புகளை கடந்த காலங்களில் பெற்றார்கள். அதே போல், உள்ளூராட்சி மன்றத்திற்குற்பட்ட பிரதேசங்களுக்குள் பரவலாக வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டார்கள். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் உள்ளூராட்சித்தேர்தல் திருத்தத்தின் மூலம் 60 வீதம் வட்டாரமுறையிலும், 40 வீதம் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள்.


இந்த முறையில் அந்தந்த வட்டாரங்களில் செல்வாக்கானவர்களை வேட்பாளராக நிறுத்தும் போது தான் அந்த வட்டாரத்தை வெல்ல முடியுமென்பதோடு, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் முழுமையாகக் கைப்பற்ற முடியும்.


அதேபோல், அவ்வாறானவர்களை அடையாளங்கண்டு சகல வட்டாரங்களிலும் நிறுத்தும் போது அதிகூடிய வாக்குகளையும் பெற முடியும். இதனூடாக விகிதசார முறையில் அதிக ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும்.


எனவே தான், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றும் வண்ணம் வியூகங்களை அமைத்துச் செயற்படும். அவ்வாறான வியூகங்களின் போது, வட்டார ரீதியாக செல்வாக்குமிக்கவர்களை கட்சிக்குள் தலைமை உள்வாங்கலாம். அதற்குத் தடையாக கட்சியில் வேட்பாளர் அந்தஸ்தை எதிர்பார்த்திருப்பவர்கள் இருக்கக்கூடாது. தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு கட்சி வெற்றி பெற உழைக்க வேண்டும். இது தான் கட்சிப்பற்றுள்ளவர்களின் பண்பாகும்.


அதே போல், உள்ளூராட்சி மன்ற வட்டாரப்பிரிப்பின் போது கடந்த காலங்களில் தனித்திருந்த கிராம சேவகர் பிரிவுகள் சில ஒன்றோடொன்று இணைத்து ஒரு வட்டாரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இரண்டு பிரதேசத்தைச் சேர்ந்த வேட்பாளர் அபிலாஷையிலிருப்பவர்கள் தங்களுக்கே கட்சி வாய்ப்பைத்தர வேண்டுமென வலியுறுத்துகிறார்கள்.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைமை பல விடயங்களைக் கவனத்திற்கொண்டு ஒரு பிரதேச வேட்பாளரை முன்னிலைப்படும்தும் போது, மற்றைய வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் வேறு கட்சியில் இணைவேன் அல்லது சுயேட்சையில் போட்டியிடுவோம் என்ற பாணியில் தலைமைக்கு மிரட்டல் விடுவது. இவ்வாறான மிரட்டலூடாக தங்களுக்கு ஆசனம் கிடைக்குமென தன்னைக் கட்சியின் விசுவாசியென கடந்த காலங்களில் தங்களை அடையாளப்படுத்தியவர்கள் நினைக்கிறார்கள். அது அவர்களின் பகற்கனவாகும். அவ்வாறானவர்களை தலைமை கண்டு கொள்ளது.


அவர்களின் சுயரூபம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டால் போராளிகளும் கண்டு கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு ஆசனம் கொடுத்தால் வெற்றி பெற்று தங்களின் நலனுக்காக கட்சி மாறிச் செல்லவும் வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படும்.


இது சமூக சேவையன்றி, வருமானம் ஈட்டும் தொழிலல்ல என்பதை இவ்வாறானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்களின் வேட்பாளர் விருப்பத்தை கட்சித்தலைமைக்கு உரிய முறையில் வெளிப்படுத்துவதும், இறுதியில் தலைமையினால் கட்சி நன்மை கருதி மேள்கொள்ளும் தீர்மானங்களையேற்று கட்சி வெற்றிக்காகப் பாடுபடுவது கட்சி விசுவாசிக்கான அடையாளமாகும்.


அதை விடுத்து, தங்களுக்கே ஆசனம் தர வேண்டுமென தலைமைக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டுபவர்கள் தாராளமாக வெளியேறிச் செல்லலாம். தேர்தலில் இவ்வாறானவர்களுக்கு போராளிகள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.


அதேபோல். இந்த தேர்தலை வெற்றி கொள்வதற்காகவும். உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் நோக்கில் கட்சித்தலைமை சிலரை உள்வாங்கும் போது, கட்சியிலிருப்பவர்கள் அவர்கள் உள்வாங்கப்படுவதால் தங்களின் அரசியல் வாழ்வு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி விடுமென்ற அச்சத்தில் அதற்குத்தடையேற்படுத்தாது, கட்சியின் நன்மை கருதியும் சமூகத்தின் நன்மை கருதியும் அவ்வாறானவர்களை இணைத்து இத்தேர்தலில் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டும்.


கடந்த காலங்களில் கட்சியினூடாக அரசியல் அதிகாரங்களைப் பெற்றவர்கள் தற்போது தங்களுக்கான அதிகாரங்கள் இல்லையென்பதால், இத்தேர்தலை பணயம் வைத்து தங்களுக்கான அதிகாரங்களைக்கோரி காலக்கெடு விதிப்பதும், அதற்குள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தனது பலத்தை சுயேட்சையாக அல்லது பெரும்பான்மைக் கட்சியுடன் இணைந்து நிரூபிப்பேன் எனக்கூறுவது பச்ச சுயநலவாதமாகும்.


இவ்வாறான மிரட்டல்களை விடுப்பவர்களுக்கு ஒரு போதும் தலைமை தலைசாய்க்காது என்பதுடன், இவ்வாறு கடந்த காலங்களில் இந்த கட்சிக்குள்ளிருந்து வெளியேறிச் சென்றவர்களின் நிலைமை நல்ல உதாரணமாகும். எனவே, இவ்வாறு சந்தர்ப்பவாத அரசியலைச் செய்யாது, கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டு விசுவாத்தை வெளிக்காட்டி உங்களின் நன்மதிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


அதை விடுத்து கட்சிக்குள்ளிருந்து கொண்டு எதிரிகளுடன் கைகோர்த்து குழிபறிக்க முற்படுவதும், எதிர்க்கட்சி போன்று செயற்படுவதும் அழகில்லை.


எனவே, இத்தேர்தல் கட்சிப்போராளி, விசுவாசி என தங்களை அடையாளங்காட்டிச் செயற்பட்டவர்களின் சிலரின் போலி முகங்களை அடையாளங்காட்டுவதாகவும் அமையலாம். எனவே, கட்சியினுள்ளிருப்பவர்கள் பொறுப்புணர்வுடன் கட்சியின் தலைமையின் தீர்மானங்களையேற்று கூட்டாகச் செயற்பட வேண்டும். அப்போது கட்சிக்கு வெளியிலிருக்கும் சவால்களை வெற்றி கொண்டு, பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை எமது கட்சி கைப்பற்றுவதற்கு வாய்ப்பாக அமையுமென்பதில் ஐயமில்லை.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். "பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டுப்பெற்றால், அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப்படுவீர்கள். நீங்கள் கேட்கமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால், அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்." (புகாரி, முஸ்லிம்).
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -