எனவே டீசலை விநியோகிக்காது பதுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் போத்தல்கள் மற்றும் சிறிய பாத்திரங்களில் பெற்றோல் விநியோகிப்பதை தடுக்கவுள்ளோம் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தினூடாக கடந்த மாதம் 15 ஆம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் அக்கப்பலிலுள்ள பெற்றோலை இருமுறை பரிசோதனைக்குட்ப டுத்தியபோதும் அதன் தரம் உறுதிசெய்யப்படவில்லை. அதனால் அக்கப்பலை கடந்த 17 ஆம் திகதி நாம் நிராகரித்ததோடு திருப்பி அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தோம். எனினும் அக்கப்பல் இன்னும் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. ஏனெனில் எவ்வாறாவது அதிலுள்ள பெற்றோலை வழங்குவதற்கே அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
சாதராணமாக ஒரு கப்பலிலுள்ள எண்ணெய் நிராகரிக்கப்பட்டால் அதற்குப் பதிலாக மற்றுமொரு கப்பலை குறித்த நிறுவனம் மாற்றீடாக அனுப்ப வேண்டும். ஆகவே அந்நிறுவனம் கடந்த முதலாம் திகதியளலவில் வேறு கப்பல் ஒன்றைப் பெற்றுத் தருவதற்கு உடன்பட்டது. அயினும் அவ்வாறு உடன்பட்டு சில தினங்களின் பின்னர் குறித்த நிறுவனம் மாற்றீடாக மற்றுமொரு கப்பல் வழங்க முடியாதெனக் குறிப்பிட்டது.
மேலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நவம்பர் மாதம் மூன்றாம் திகதியளவில் மற்றுமொரு எண்ணெய்க்கப்பல் ஒன்றை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஏற்பாடகியிருந்தது. இருந்தபோதிலும் அக்கப்பலும் இன்னும் நாட்டை வந்தடையவில்லை. ஏற்பாடாகியிருந்த தினத்தை விட ஆறு நாட்கள் கடந்த பின்னர் எதிர்வரும் ஒன்பதாம் திகதியே அக்கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. எனவே கடந்த மூன்று நான்கு வருட காலத்தில் இவ்வாறு எந்தவொரு கப்பலும் காலம் தாழ்த்தி வந்ததில்லை. இம்முறையே இவ்வாறான கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த கப்பலை, நியமிக்கப்பட்டுள்ள தினத்திற்கு ஒரு தினம் முன்கூட்டி கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும் எல்.ஐ.ஓ.சி. நிறுவனம் தனது உடன்படிக்கைக்குப் புறம்பாகச் செயற்பட்டமை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஏற்பாடாகியிருந்த கப்பலின் தாமதம் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் எதிர்பார்துள்ளோம்.
அத்துடன் மின் தடை காரணமாக கடந்த 31 ஆம் திகதி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணி தடைப்பட்டது. அதனால் மூன்று தினங்கள் வரையில் அங்கு சுத்திகரிப்பு நடவடிக்கை இடம்பெறவில்லை. ஆகவே அக்காலப் பகுதியில் நாள் ஒன்றுக்கு 550 மெட்ரிக்தொன் வரையில் பெற்றோல் சுத்திகரிப்புக்குக்கு உட்படுத்த முடியவில்லை.
இவ்வாறான தடைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் எல்.ஓ.ஐ.சி. நிறுவனம், 16 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோல் கொண்ட கப்பல் ஒன்றை பெற்றுத்தருவதாக கடந்த நான்காம் திகதி தெரிவித்தது. அதனை நான்கு நாட்களுக்குள் பெற்றுத் தருவதாகவும் உடன்பட்டது. எனினும் குறித்த பெற்றோலை பெறுவதாயின் தம்மிடமுள்ள குறிப்பிட்ட தொகை டீசலையும் கொள்வனவு செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தது. எனினும் அந்த டீசலினதும் தரம் உறுதிசெய்யப்படவில்லை. ஆகவே அக்கப்பலையும் நிராகரிக்க வேண்டி ஏற்பட்டது.
மேலும் நாம் திருப்பி அனுப்பிய கப்பலிலுள்ள பெற்றோலை கொள்வனவுசெய்யுமாறு அரசியல் மற்றும் வர்த்தக சமுகத்தினால் எனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அது தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்டேன். எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது பாதிப்பில்லாத தீர்மானத்தை மேற்கொள்ளுமாறே அவ்விருவரும் வேண்டிக்கொண்டனர். மேலும் தரம் உறுதிசெய்யப்படாத குறித்த கப்பலிலுள்ள பெற்றோலை திருப்பி அனுப்பாது பாவனைக்கு வழங்கியிருப்பின் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இருந்தபோதிலும் பெற்றோல் பிரச்சினை பாரியளவில் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் தட்டுப்பாடு இருக்கவில்லை. எனினும் பெற்றோலியத்துறை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக குறுஞ்செய்தியொன்று பகிரப்பட்டது. அதனாலேயே மக்கள் வழமைக்கு மாறாக பெற்றோல் நிரப்புவதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முண்டியடிக்கத் தொடங்கினர்.
மேலும் போத்தல் மற்றும் ஏனைய சிறிய பாத்திரங்களில் பெற்றோல் நிரப்பிக்கொண்டு அதனை வெளியில் அதிக விலைக்கு விற்பனையும் செய்கின்றனர். அவ்வாறான வர்த்தகம் குறித்த தினங்களில் இ்டம்பெறுவதனாலேயே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வரிசைகளைக் காணமுடிகிறது. எனவே அவ்வாறு போத்தல்கள் மற்றும் சிறிய பாத்திரங்களில் பெற்றோல் விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு அறிவித்தல் வழங்கியுள்ளோம்.
எனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் பெற்றோல் கொண்டுவரும் எண்ணெய்க்கப்பல் எதிர்வரும் எட்டாம் திகதி இரவு நாட்டை வந்தடையவுள்ளது. ஆகவே எதிர்வரும் ஒன்பதாம் திகதியிலிருந்து வழமைபோன்று பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ளது. மேலும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரையிலான காலப்பகுதிக்குரிய பாவனைக்குப் போதுமான பத்தாயிரம் மெட்ரிக்தொன் பெற்றோல் கைவசம் உள்ளது. ஆகவே நாள் ஒன்றுக்குக்கு 2500 மெட்ரிக்தொன் பெற்றோல் விநியோகிக்க முடியும்.
அத்துடன் டீசலுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை. இன்னும் மூன்று வாரங்களுக்குத் தேைவயான டீசல் இருப்பில் உள்ளது. எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் விற்பனையினையும் நிறுத்தியுள்ளன. ஆகவே அது தொடர்பில் எதிர்காலத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை தொடர்ந்தும் பேணுவதா என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(வீ)
