எம்.ரீ. ஹைதர் அலி-
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள, மட்/மம/காத்தான்குடி பதுரியா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தொகுதி மற்றும் அனர்த்த நேர சமையலறை கட்டிடம் என்பன 2017.11.16ஆந்திகதி திறந்து வைக்கப்பட்டது.
இத்திறப்பு விழா நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்கள் கலந்துகொண்டதோடு, விஷேட அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மற்றும் இலங்கை மற்றும் மாலை தீவிற்கான ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் உள்நாட்டு இராணுவ பிரிவிற்கான துணை இயக்குனர் ரிச்சட் ஸ்டன்லீ, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிஸாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையில் உள்ள இடவசதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நசீர் அஹமட் அவர்களுடன் இணைந்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஐக்கிய அமெரிக்க அமைதிக்கான கட்டளை மையத்தின் நிதி அனுசரணையின் கீழ் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் பொறியியல் பிரிவின் செயற்படுத்தலில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடமானது பன்னிரண்டு வகுப்பறையுடன் கூடியதாக நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் மேலும் அதிகமான மாணவர்களை உள்வாங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


