கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 13ம் 14ம் திகதிகளில் காலை 8.00மணியளவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நடாத்தவுள்ளதாக வளாக முதல்வர் டொக்டர் வீ.கனகசிங்கம் தெரிவித்தார்.
"இன்று எம்மிடையே காணப்படும் வளங்களை நாளைய நலனிற்காக பயன்படுத்தல்" எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள சர்வதேச மாநாடு பற்றி ஊடகவியலாளர்களுக்கு தௌிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று (08) பிற்பகல் 2.00மணியளவில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 'இன்று எம்மிடையே காணப்படும் வளங்களை நாளைய நலனிற்காக பயன்படுத்தல்' எனும்தொனிப்பொருளில் அனைவரது மனதிலும் வளங்களின் முக்கியத்துவம் பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில் கிழக்குப்பல்கலைக்கழக திருமலை வளாகத்தின் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போஹொல்லாகம அவர்களும், சிறப்பு அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தம்பிமுத்து ஜெயசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதில் விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும், மருத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு விஞ்ஞானம், விவசாயம் மற்றும் சுற்றாடல் அறிவியல், சமகால முகாமைத்துவம், பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள், தொடர்பாடல் மற்றும் அழகியல், மொழி, மொழியியல் மற்றும் இலக்கியம், சமூக விஞ்ஞானம், சுற்றுலா மற்றும் கலாச்சார பாரம்பரியம், கல்வி மற்றும் உயர்கல்வி, ஆட்சி மற்றும் குடியுரிமை எனும் பிரதான தலைப்புக்களை முதன்மைப்படுத்தி ஆய்வுக் கலந்துரையாடல்கள் இடம்பெற இருப்பதோடு, சமகால பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வேலைவாய்ப்புக்கள் என்ற ஆய்வுப்பொருளில் அறிவியல் கலந்துரையாடலொன்றும் இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.