பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ அதிகாரியுடைய சமாதிக் கல்லறையொன்றை 30வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந் நிலையில்இவ்வாறு அவசர அவசரமாக புனரமைக்கப்பட்ட குறித்த சமாதியில் இன்று யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளமையை தமிழ்த் தேசியப்பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.நிஷாந்தன் இன்று பிற்பகல் விடுத்துள்ள கண்டனச் செய்தியில்,
30 வருடங்களுக்கு முன்னர் அமைதிப்படை என்ற பெயரில் யாழ்ப்பாணம் வந்த இந்தியஇ ராணுவம் எமக்கு உதவி செய்வதாக கூறி பின்னர் அவர்கள் எம் மக்களையே படுகொலை செய்தனர்.
கிட்டத்தட்ட 25000 த்திற்கும் மேற்பட்ட எம் பொது மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்ததை எம் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
அதுமட்டுமின்றி இன்றுவரை 30 வருடங்கள் கடந்தும் அக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசோ, இலங்கை அரசோ மேற்கொள்ளவில்லை.
மிக முக்கியமாக அந்த படுகொலைகள் தொடர்பான எந்த விதமான விசாரணைகளும் மனித உரிமை பேரவையிலோ ஐ.நா சபையிலோ இடம்பெறவில்லை என்பதே வலுவான உண்மையாக இருக்கின்றது.
இதன் பின்னர் கடந்த- 2009 ம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இந்திய இராணுவம் நேரடியாக இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது மட்டுமின்றி களத்திலும் நின்று எமது அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதில் முக்கிய பங்கு வகித்தநிலையில் எவ்வாறு?
யாருடைய துணிவில் இங்கு இரகசியமாக வந்து அஞ்சலி செய்யமுடிந்தது?, இதன் பின்ணணி தான் என்ன?
மேலும், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக மே- 17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து இன்று வரை அடைத்து வைத்திருக்கும் நிலையில் எவ்வாறு இந்திய இராணுவத்தினர் மிக இரகசியமாக வந்து தங்களது உயிரிழந்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செய்தனர்?
இன்று நடந்த இந்த நிகழ்வையும், இதற்கு மறைமுகமாக உதவி செய்த யாழ் இந்தியத் தூதரகத்தையும் அக்காலப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில்தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


