ஓட்டமாவடி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 21.07.2017 இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த சுலைமாலெப்பை ஜனூஸ் (வயது 25) என்பவரே படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
இவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும்போது வீதி ஒழுங்குக்கு மாற்றமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மற்றொரு இளைஞனை விபத்திலிருந்து காப்பதற்காக இவர் ஒதுங்கியுள்ளார்.
அவ்வேளையில் இவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி பஸ் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்து படுகாயமடைந்தார்.
எனினும், தவறாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞன் எதுவித காயங்களுமின்றித் தப்பிச் சென்றுள்ளான்.
இச்சம்பவம்பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


