சதொச போதைப்பொருள் விவகாரத்தில் நீதி விசாரணை இடம்பெற்று குற்றவாளி தண்டிக்கப்படுவாரா ?

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது -

டந்த 19.௦7.2௦17 அன்று வர்த்தக அமைச்சின்கீழ் உள்ள “சதொச” நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து 218 கிலோகிராம் கொக்கெயின் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதனால் அதில் சிலர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார்கள்.

யுத்தம் ஒன்று நடைபெறுகின்றபோது அதில் களத்தில் நின்று போர் செய்கின்ற அப்பாவி ஏழைகளின் பிள்ளைகளே கொல்லப்படுவார்கள். யுத்தத்தை வழிநடாத்துகின்றவர்கள் கொல்லப்படுவதில்லை. அதுபோலதான் போதைப்பொருள் கடத்தல் விவகாரமும்.

போதைப்பொருள் வர்த்தகர், கடத்தல் விவகாரத்தில் நேரடியாக ஈடுபடமாட்டார். தனது நம்பிக்கைக்குரிய விசுவாசி மூலமாகவே கடத்தலுக்கான திட்டமிடல் உட்பட அனைத்தையும் கையாளுவார்.

இந்த போதைப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவந்து சேர்ப்பதுடன் சிலரது பணி முடிந்துவிடும். பின்பு துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போதை பொருட்களை உரிய இடத்துக்கு பாதுகாப்பான முறையில் பாரப்படுத்துவதற்கும், அதன் பின்பு அதனை விநியோகம் செய்வதற்கும் வேறு சிலர் செயல்படுவார்கள்.

இவ்வாறு உயிரை பணயம் வைத்து கடத்தல் வேலைகளில் களத்தில் நின்று செயல்படுபவர்கள் அனைவரும் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள். இவர்களுக்கும் போதை பொருள் உரிமையாளருக்கும் எந்தவித தொடர்புகளும் இருக்காது. ஏனென்றால் இவர்களை போதைப்பொருள் வர்த்தகர் நேரடியாக வழிநடாத்துவதில்லை.

இந்த போதை பொருள் வர்த்தகர்களுக்கு அதிகார மேல்மட்டத்தில் அதிக தொடர்புகள் இருக்கும். அதாவது பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்கள உயர் அதிகாரிகளுடன் நன்கு பரிச்சயமானவராக இருப்பார்.

சுருக்கமாக கூறுவதென்றால் அதிகாரமட்ட நெருங்கிய தொடர்புகள் இன்றியும், அதிக பண முதலீடுகளும், செல்வாக்குகளும் இன்றி இந்த போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

பல பாகங்களிலும் விற்பனை செய்யப்படுகின்ற சட்டவிரோத சிக்கரட்களை நாட்டுக்குள் கடத்தி வருகின்றவர்கள் யாரும் கைது செய்யப்பட்டதாக இல்லை. அவர்கள் அதிகார உயர்மட்டதினர்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.

ஆனால் சில்லரையாக பக்கட்டுக்களை வாங்கி விற்பனை செய்கின்ற அப்பாவி சில்லறை கடை வர்த்தகர்களே பொலிசாரிடம் அகப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதனை நாம் அன்றாடம் காணக்கூடியதாக உள்ளது.

அதுபோலதான் இந்த போதைப்பொருள் கடத்தலாகும். இதில் சம்பளத்துக்கு வேலை செய்கின்ற அப்பாவி ஏழைகளின் பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இந்த போதைப்பொருளின் உரிமையாளர் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

32௦ கோடி ரூபாய்களுக்கும் அதிகமான பெறுமதிகொண்ட போதைப் பொருளை கொள்வனவு செய்வதென்றால் ஆகக்குறைந்தது நூறு கோடி பணமாவது முதலீடு செய்திருக்க வேண்டும். இவ்வளவு பாரிய தொகை பணத்தினை சட்டவிரோதமான செயல்பாட்டுக்கு முதலீடு செய்வது என்பது சாதாரண விடயமல்ல. இதனை இத்தனை துணிச்சலுடன் அதிகாரம் இல்லாத சாதாரணமான ஒருவரினால் மேற்கொள்ளவும் முடியாது.

இந்த கடத்தலில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும். இவர்களுக்கு இடைத்தரகராக இருந்து செயல்பட்டவர் தற்போது தலைமறைவாகி இருப்பார். அல்லது அந்த வழக்கை கொண்டுசெல்லும் அதிகாரமுடையோருக்கு நெருக்கமானவரின் வீட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் வழங்கப்பட்டிருக்கும். அல்லது அதியுயர் அதிகார வர்க்கத்தின் உத்தரவுகள் சென்றிருக்கும்.

எனவே காலப்போக்கில் இந்த வழக்கு சாட்சியமின்றி தள்ளுபடியாகும். அல்லது யுத்த களத்தில் அப்பாவி ஏழைகளின் பிள்ளைகள் கொல்லப்படுவது போன்று, சம்பளத்துக்கு வேலைக்காக சென்ற அப்பாவிகள் தண்டிக்கப்படுவார்கள்.

ஆனால் உண்மையான குற்றவாளி ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார். எதிர்கால சமுதாயத்தினை சீர்குலைக்கும் மிகவும் கொடூரமான போதைவஸ்தினை நாட்டுக்குள் கடத்தி கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் போதைப் பொருள் வர்த்தகர் பசுந்தோல் போற்றிய புலியாக சமூகத்தில் வலம் வருவார். இதுதான் எமது நாட்டின் தலைவிதியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -