இந்த நாட்டு முஸ்லிம்களில் பலதரப்பட்ட பிரச்சினைகள் அப்படியே இருக்க முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவரகள் போல தங்களை காட்டிக்கொள்ளும் அஸாத் சாலி போன்ற ஜனாதிபதியுடன் வெளிநாடு பயணங்கள் தவிர்துக்கொள்ளப்பட வேண்டும்.
நாட்டுத்தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களை அழைத்து செல்வது வழக்கம் .அந்த வகையில் மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் ஆஸாத் சாலியையும் ஜனாதிபதி தன்னோடு அழைத்துச்சென்றுள்ளார்.
ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக கடும் விமர்சனங்களை கடந்த வாரம் முன்வைத்துவிட்டு இந்த வாரம் அதே ஜனாதிபதியுடன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸாத் சாலி தொடர்பில் சமூகம் நன்கு விளங்கி வைத்திருக்கின்றமை காரணமாக நாம் அவரது அரசியல் நாடகங்கள் தொடர்பில் இந்த இடத்தில் பேசிப்பயனில்லை.
இருந்த போதும் அவரது இந்த பயணம் முஸ்லிம்களுக்கு பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அலுத்கமை கலவரம் தொடர்பில் நீதியோ இழப்பீடோ இதுவரை கிடைக்காமை, வில்பத்து வர்த்தமானி, மாணிக்கமடு சிலைவைப்பு, முஸ்லிம் மீள் குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடைகள், நல்லாட்சி அரசில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு இழப்பீடோ நீதியோ நிலைநாட்டாமை, ஞானசார தேரர் விடயத்தில் அரசின் இரட்டைவேடம் என பலதரப்பட்ட விடயங்களின் சமூகம் கடும் ஏமாற்றங்களை சந்தித்துள்ளது.
இந்த மாதிரியான ஒரு இக்கட்டான கால கட்டத்தில் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாக முஸ்லிம் ஒருவர் வெளிநாட்டு செல்வது இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் சகல சௌபாக்கியங்களுடன் எந்த வித சிக்கல்களும் இல்லாமல் வாழ்கின்றனர் என்ற செய்திதையே செல்லி நிற்கும்.
அது தவிர அரசாங்க செலவில் ஜனாதிபதியின் ஒரு பிரதிநிதியாக ஒருவர் சென்றுவிட்டு அங்கு அரசாங்கத்துக்கு எதிராக பேச முடியாது. இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றே சொல்லிவிட்டு வரவேண்டும். அதன் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் வெளிநாடுகள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் முஸ்லிம்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் குறைவடையுமே தவிர எதுவும் நடக்கப்போவதில்லை.
இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என காட்ட அஸாத் சாலியை ஜனாதிபதி பங்களாதேஷுக்கு அழைத்துச் சென்றிருக்கவேண்டும் என்றே நாம் இந்த பயணத்தை கருதவேண்டியுள்ளது. இது போன்ற விடயங்களில் எமது அரசியல்வாதிகள் இன்னும் அக்கறையுடனும் தூர நோக்குடனும் செயற்பட வேண்டும்.
ஞானசார தேரரை ஜனாதிபதியே பாதுகாப்பதாக கூறிவிட்டு அவருடன் வெளிநாட்டு பயணம் தேவைதானா..?
