முதிர்ச்சி பெற்ற அரசியல் சிந்தனை கொண்ட அரசியல்வாதியாக ஆளுமையுடனும் இதயசுத்தியுடனும் செயற்பட்ட வர்த்தக வாணிப கப்பற்துறை முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி ஏ.ஆர். மன்சூரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக என பிரதி அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் அச்செய்தியில் மேலும் குறிப்பிடுகையில். எனது தந்தை கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டதோடு அதற்கான வழிவகைகளை அன்னார் ஏற்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் வெற்றி பெற்று அரசியலில் கால் பதித்த அன்னாரின் அரசியல் வாழ்க்கையில் இப்பிரதேசத்தின் வீதிகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அதன் பலனாய் கல்முனை நகரில் பல அரச அலுவலகங்கள் அமையப் பெறுவதற்கும் அரச கட்டடங்கள் உருவாகுவதற்கும் கால்கோலாக திகழ்ந்து கல்முனை நகரம் அபிவிருத்தியடைவதற்கு வித்திட்டார்.
மக்களோடு அன்பாகவும் பண்பாகவும் நெருங்கிப் பழகி மக்கள் மனதை வென்ற ஒரு அரசியல்வாதியாவார். இவரது அரசியல் காலப்பகுதியில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி வழங்கினார். அன்னார் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் மறைந்த தலைவர் அஷ்ரஃபினால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக தன்னாலான பங்களிப்புக்களைச் செய்தார்.
இன, மத வேறுபாடின்றி மக்கள் சேவையாற்றிய அன்னாரின் மரணத்தில் துயருரும் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை கொடுப்பதற்கும் அன்னாரின் நற்கருமங்களை ஏற்று பாவங்களை மன்னித்து கப்ரை விசாலமாக்கி சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக்கி கொடுப்பதற்கும் எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்.