முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் ஜனாஸா தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அரசியல் துறையில் மக்களின் அபிமானத்தைப் பெற்று நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் சமூகத்துக்கு சேவையாற்றிய சிறந்த தலைவர் ஏ.ஆர்.எம்.மன்சூர். அவரது மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாது முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவரது ஜனாஸா செய்தி கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன்.
கிழக்கு மாகாணத்துக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ள மன்சூர் அவர்கள், குறிப்பாக தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் - ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது, கல்முனைத் தொகுதியில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இன, மத பேதங்களுக்கு அப்பால் சேவையாற்றியுமுள்ளார்.
யுத்தகாலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத்தலைவராக அவர் இருந்த காலத்தில், அங்கு சிறந்த முறையில் செயலாற்றி பாரிய பணிகளை ஆற்றியுள்ளதை அம்மாவட்ட அரசியல் பிரதிநிதி என்ற ரீதியில் நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.
அத்துடன், என்னுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணியதுடன், எனது அரசியல் பயணத்துக்கு சிறந்த வழிகாட்டியாகவும் அவர் இருந்துள்ளார். அன்னாரின் இழப்பால் வாடுகின்ற குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.