முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் நாளை அம்பாறையில் இறுதி தீர்மானம்?

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் இறுதிக்கட்ட சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்கின்றார்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அம்பாறையில் வைத்து முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுகளில் ஈடுபடுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அதற்குரிய ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி தரப்பு மேற்கொண்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

கடந்த வாரம் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் இருவரும் அக்கரைப்பற்றில் வைத்து சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பு சுமார் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் இடம்பெற்றிருந்தது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றதோ அவ்வாறு முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் முஸ்லிம் கூட்டமைப்பு தாக்கம் செலுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே தான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி ஊடகங்களுக்குத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் கூட்டமைப்பை ஆரம்பிப்பதற்கான பேச்சுகளும், சந்திப்புகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இக்கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனைக்கான தேசியப் பட்டியல் எம்.பி. பதவி விடயம், கல்முனை நகர அபிவிருத்தி விடயம், இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமை, புதிய அரசமைப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களுக்கான தீர்வுகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்காமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கம் இடம்பெறவுள்ளது.

TW
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -