நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் - மனோ கணேசன்

நாடு முழுக்க உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும். இந்த தேர்தல் நடைபெறும் முன்னர் நுவரெலியா மாவட்டத்தில் இன்று இருக்கின்ற ஐந்து பிரதேச சபைகளின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது உறுதியான நிலைப்பாட்டை எமது அரசு தலைமைக்கு தெரிவித்து விட்டோம். அதன்படி இது நடைபெறும் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் கூட்டணி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இந்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள குடிபெயர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாகாணங்களில் இருந்து புதிய பல பிரதேச சபைகளை அமைத்திட கோரிக்கைகள் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் உடனடியாக செய்திட நடைமுறை சிக்கல்கள் தடையாக உள்ளன. எனினும் நாட்டின் சில இடங்களில் பத்தாயிரம் பேருக்கு ஒரு பிரதேசபை மற்றும் செயலகம் அமைந்திருக்கும்போது, நுவரெலியா மாவட்டத்தில், பிரதேச சபைகள் இலட்சக்கணக்காண ஜனத்தொகையை கொண்டவையாக ஆண்டாண்டு காலமாக அமைந்திருக்கின்றன. ஆகவே இம்மாவட்டம் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும் என்ற எமது சுட்டிகாட்டலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார். 

உண்மையில் நுவரேலியா மாவட்டத்தில் பன்னிரெண்டுக்கு மேற்பட்ட பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துல்ல நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும். அதேவேளை பொகவந்தலாவை, மஸ்கெலிய,அக்கரபத்தனை, பூண்டுலோயா ஆகியவை நகரசபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும். இவையே எங்களது நிலைப்பாடுகள். எனினும், முதற்கட்டமாக பத்து பிரதேச சபைகளை பெற்றுக்கொண்டு,இரண்டாம் கட்டமாக பிரதேச சபைகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தவும், புதிய மாநகரசபைகளையும், நகரசபைகளையும் பெற்றுக்கொள்ளவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. இந்த புதிய உள்ளூராட்சி சபைகளுடன் சேர்த்து, சமாந்திரமாக புதிய பிரதேச செயலகங்களும் உருவாக்கப்படும். 

இந்த புதிய பிரதேச செயலகங்களின் உருவாக்கமும், அதற்கிணங்க உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்பும், மாநகர, நகரசபை தரமுயர்த்தல்களும் மலையகத்தை நோக்கிய அரசியல் மற்றும் நிர்வாக அதிகார பகிர்வுகளுக்கு நிச்சயமாக வழிகாட்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. மலைநாட்டின் புதிய இளந்தலைமுறையை சார்ந்த இளைஞர்கள் பெருவாரியாக இந்த புதிய சபைகளில் அங்கத்துவம் பெற்று, அதன்மூலம் அதிகரித்த நமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய அபிவிருத்தியை நோக்கி மலையக மக்களை அழைத்து செல்ல முடியும் என நாம் நம்புகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -