சிறையில்வாடும் அரசியல் கைதிகளுக்கு உடனடி பிணை வழங்கவும் - ஜ.நா விசேட பிரதிநிதி

அஸ்ரப்.ஏ.சமத்-
யங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் இனிமேலும் வருடங்கள் மற்றும் தசாப்தங்களாக காத்திருக்க முடியாதென சுட்டிக்காட்டிய அவர் இவர்களது வழக்குகளை அரசாங்கம் சில வாரங்கள் மற்றும் மாதங்களுக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

"பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் மிகவும் பாரதூரமான சித்திரவதைகள் முன்னெடுக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் புள்ளிவிவரங்களும் என்னிடம் உள்ளளன. சட்டமா அதிபர் கூறும் காரணங்களை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது" என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தினை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பென் எமர்சன் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்தார்.  இவர் தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பிலுள்ள ஜ.நா வளாகத்தில் நேற்று மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளுக்கான செயற்பாடுகள் கடந்த வருடத்தின் இறுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டு மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு செல்வது திருப்திகரமாக இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தனது ஆறு வருட கால அனுபவத்தில் இலங்கையில் போன்று எந்தவொரு தெற்காசிய நாட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சித்திரவதைகள் முன்னெடுக்கப்பட்டமையை கண்டதில்லையென்றும் அவர் விசனம் தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையில் தான் நேரில் பார்த்த அனுபவங்களை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்ைகயாக சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியாக கூறினார். இதேவேளை எதிர்வரும் இரு வராங்களில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினர் ஜெனீவா வந்து இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில்  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 

இலங்கை உறுதியளித்தப்படி எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றவில்லையென கடுமையாக சாடிய அவர் அந்த சந்திப்பு தொடர்பில் எதனையும் தெரிவிக்க விரும்பவில்லையென பதிலளிக்க மறுப்புத் தெரிவித்தார். "இலங்கையில், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்ைககள் 2016 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் சித்திரவதை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இக்காலப்பகுதியிலேயே 71 பொலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள். சித்திரவதை தொடர்பில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் 2017 இலேயே முன்னெடுக்கப்பட்டதாக பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பொறுப்பான கொழும்பிலுள்ள சிரேக்ஷ்ட நீதிபதி என்னிடம் தெரிவித்தார். 11 பேர் காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சிரேக்ஷ்ட கடற்படை அதிகாரி அண்மையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்." என்றும் அவர் தெரிவித்தார். 

"பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளில் 81 பேரின் வழக்குகள் இன்னமும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன. மேலும் எவ்வித வழக்குகளுமின்றி 70 பேர் 05 வருடங்களாகவும் 12 பேர் 10 வருடங்களாகவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது இலங்கையின் கீர்த்தி நாமத்திற்கு பாரிய அவதூறு ஆகும். இவர்களை பிணையில் விடுவிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் இவர்களுக்கான வழக்குகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு மேலும் வருடங்கள் மற்றும் தசாப்தங்களாக பொறுத்திருக்க முடியாது.இதுவரைக்காலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீதிக்கு முற்றிலும் புறம்பானது." என்றும் அவர் கூறினார்.

சட்டமா அதிபரை நான் சந்தித்தபோது அவர் கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பில் எமக்கு விளக்கமளித்தார், எனினும் பலர் 12 வருடங்களுக்குப் பின்னரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பது திருப்தியடையக்கூடிய விடயம் இல்லையென்றும் ஐ.நா பிரதிநிதி சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டம், கொள்கைகள், நடைமுறைகள், மனித உரிமைகள் ,நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் நியைான சமாதானம் ஆகிய விடயங்களை கண்காணிக்கும் நோக்கில் இவர் இலங்கை வந்திருந்தார்.

தன்னை இலங்கைக்கு வரவழைத்தமைக்காகவும் தன்னுடன் பேச்சு நடத்திய அனைத்து அரசாங்க தரப்பினருக்கும் இவர் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்தார். இவர் கடந்த நான்கு நாட்களுக்குள் பிரதமர், நீதி அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ,முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், சட்டமா அதிபர் மற்றும் வடக்கு நீதவான்களை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -