ஐ.ஏ.காதிர் கான்-
திண்மக் கழிவுகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு, அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் விசேட ஆலோசணையின் கீழ், இப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்பிரகாரம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய திண்மக் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ உதவி நிலையத்துடன் பாதுகாப்பு அமைச்சும் ஒன்றிணைந்து, இவ்விசேட பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. இதற்காக, திண்மக் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ நிலையத்தில், விசேட படையணிப் பிரிவொன்றும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இப்படையணிப் பிரிவு, திண்மக் கழிவுகள் முகாமைத்துவம் தொடர்பில் 24 மணி நேரமும் அவதானம் செலுத்தும்.
தற்போதைக்கு, கொழும்பு மா நகர எல்லைப் பிரதேசத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு, இவ் விசேட படையணிப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. பொது மக்கள் குப்பைகளை, கண்ட கண்ட இடங்களில் கொட்டுதல், அதனைச் சேகரித்தல் மற்றும் ஒதுக்கி வைத்தல் தொடர்பில், இப் படையணிப் பிரிவு எந்நேரமும் அவதானத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்.
இதன் மற்றொரு அங்கமாக, சைக்கிள்கள் மூலம் சென்று, கழிவுப் பொருட்கள் சேரும் இடங்களையும், டெங்கு நுளம்புகள் பெருக வாய்ப்புள்ள இடங்களையும் பரிசோதிக்க 40 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் குழுக்களில், முப்படையைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிப்பர். இவர்களுக்கு முப்பது ஸ்மார்ட் தொலைபேசிகளும் வழங்கப்படும். அவைகள் ஊடாக, இவர்கள் குப்பை மற்றும் டெங்கு பிரச்சினைகளுக்குரிய இடங்களைப் படம் பிடிப்பர். அப்படங்கள் சட்ட நடவடிக்கைகளின்போது சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்படும்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த பிரேரணைகளுக்கு அமைவாக, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதையடுத்தே, இந் நடவடிக்கை இவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளது.