ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாயில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வேனொன்று உணவு விடுக்குள் புகுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உணவு விடுதியும் வேனும் பலத்த சேதமடைந்திருக்கின்ற போதும் அதிருஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த வேன் வீதியருகிலிருந்த உணவு விடுதிக்குள் சடுதியாகப் புகுந்தபோது உணவு விடுதி; ஊழியர்கள் அந்நேரம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். ஆயினும், விபத்து இடம்பெறுவதை சட்டென உணர்ந்து கொண்ட உணவு விடுதி ஊழியர்கள் அங்கிருந்து ஓடித் தப்பித்துக் கொண்டுள்ளனர். இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





