அழகிய ஆன்மீக அடித்தளங்கள் ஆழமாக இடப்படாத மனித வாழ்வில் உயரிய மானுட விழுமியங்கள் அழிந்து போகின்றன.

ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

மக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் இடையில் இருக்கின்ற உறவுகளில் இபாதத்துகளில், வணக்க வழிபாடுகளில், திக்ரு அவ்ராதுகளில் அசிரத்தையாக, ஈடுபடும் பொழுது கவனயீனம், சோம்பல்,கடமைக்காக செய்வது, பேருக்காக, புகழுக்காக அல்லது பொடுபோக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு பிரதானமான காரணம் அல்லது அறியாமை இருக்கின்றது.

உண்மையில் மேலே சொல்லப்பட்ட வழிபாடுகளில் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எந்த எதிர்பார்ப்பும் தேவையும் கிடையாது அவற்றின் பிரதிபலன்கள் எமது அன்றாட தனிப்பட்ட, குடும்ப, சமூக, தேசிய வாழ்வில் எமக்கு ஹிதாயாத்தையும், ரஹ்மத்தையும், பறக்கத்தையும் நிறைவாக பெற்றுத் தருகின்ற ஆன்மீக அடித்தளங்கள் என்பதனை எம் ஆழ் மனதில் கொண்டு வரத் தவறி விடுகின்றோம்.

அதே போன்றே எமக்கும் அல்லாஹ்வின் அடியார்களுக்கும் இடையில் உள்ள உறவுகளில் எமது உயரிய ஒழுக்க விழுமியங்கள், பண்பாடுகள், பரோபகாரம், தாராளத் தன்மைகள், தான் தர்மங்கள் என்பவற்றில் கூட நாம் பொடுபோக்காக, கவனயீனமாக இருப்பதற்கும் பல காரணங்கள இருந்தாலும் பிரதானமான காரணம் ஒன்று இருக்கின்றது.

அவற்றை நாம் பிறருக்காக செய்கின்றோம், எமக்கு ஏது நன்மை இருக்கின்றது, நாம் ஏன் முந்திக் கொள்ள வேண்டும் என்று சுய நலமாகவும், அகங்காரமாகவும் நாம்நடந்து கொள்கின்றோம்,அல்லது பேருக்காக,புகழுக்காக செய்கின்றோம்.

உண்மையில் எம்மிடமிருந்து புறப்படும் ஒவ்வொரு சொல்லும் செயலும் எமது அன்றாட தனிப்பட்ட, குடும்ப,சமூக, தேசிய வாழ்வில் எமக்கு ஹிதாயாத்தையும், ரஹ்மத்தையும், பறக்கத்தையும் நிறைவாக பெற்றுத் தருகின்ற ஆன்மீக, பண்பாட்டு அடித்தளங்கள் என்பதனை எம் ஆழ் மனதில் கொண்டு வரத் தவறி விடுகின்றோம்.

எமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் இடையில் இருக்கின்ற உறவுகளாக இருந்தாலும் சரி, எமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அடியார்களுக்கும் படைப்புகளிற்கும் இடையில் உள்ள உறவுகளாக இருந்தாலும் சரி அவை எமது மறுமை வாழ்வில் மாத்திரமன்றி இவவுலக வாழ்விலும் நேரிடையானதும் எதிர் மறையானதுமான தாக்கங்களை விளைவுகளை கொண்டுவருகின்ற பிரபஞ்ச நியதிகளின் (கழா கதரின்) இயங்கு தளத்தில் உள்ளவை என்பதனை நாம் மறந்து விடுகின்றோம்.

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். ( ஸுரத்துல் மாஊன் 107 )

இதய சுத்தியுடன் கூடிய அழகிய ஆன்மீக அடித்தளங்கள் ஆழமாக இடப்படாத மனித வாழ்வில் உயரிய மானுட விழுமியங்கள் அழிந்து போகின்றன.

பிரபஞ்ச நியதிகளுடன் இயைந்து செல்கின்ற பகுத்தறிவும், மனச்சாட்சியும், உள்ளுணர்வுகளும் அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளே, அங்கிருந்தே மதங்கள் தாண்டிய மனிதாபிமானம் ஊற்றெடுக்கின்றது, உயரிய மானுட விழுமியங்கள் பேணிப் பாதுகாக்கப் படுவதற்கான ஆன்மீக அடிததளங்களையும் உச்ச வரம்புகளையுமே அருளப்பட்ட சன்மார்க்கங்கள் போதிக்கின்றன.

"இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்."

"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிகக அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்."

(ஸுரத்துல் அன்கபூத் 29: 6,7)


ஆன்மாக்களை வெல்லுகின்ற அறப்பணியிற்கு இஸ்லாம் ஆயுதங்களால் மேற்கொள்ளப்படும் அறப்போரினை விட அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்துள்ளது.

அழமான ஆன்மீக நம்பிக்கைகளின் அடித்தளத்தில் உறுதியாக கட்டி எழுப்பபட்ட தனமனித ஆளுமைகள் அணுகுண்டுகளை விடவும், கனரக ஆயுதங்களை விடவும், யுத்த விமானங்களை விடவும்,போர்க்கப்பல்களை விடவும் பலமானவை என்பதனாலேயே இந்த உம்மத்து அது சுமந்து நிற்கும் மனித குலத்திற்கான மகத்தான தூது இலக்கு வைக்கப்படுகின்றது.

இஸ்லாமிய பெறுமானங்கள் அறிவு பூர்வமான, விஞ்ஞான பூர்வமான இயற்கையோடு இயைந்து செல்கின்ற தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியமான மென்பொருட்களாக மாத்திரம் இருக்க துரதிஷ்ட வசமாக முஸ்லிம் உலகு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கோரமான அகோரமான வியாக்கியானங்களை உலகின் முன் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு விசுவாசியும் தனது சுற்றுச் சூழலில் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களினாலும்,உயரிய மானுட விழுமியங்களினாலும் நேர்மறையான கதிர்வீச்சை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடை முறை வியாக்கியானமாக மாறுவதே இஸ்லாமிய தஃவாவின் முதலாவது படியாகும்.

உயரிய இஸ்லாமிய குணாதிசயங்களை, பண்பாடுகளை, ஒழுக்க விழுமியங்களை, தயாள குணங்களை, தாராளத் தன்மைகளை, பெரும்தன்மைகளை அழகான இஸ்லாமிய தனிநபர், குடும்ப,சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வு நெறிகளை செயல்வடிவில் பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு விசுவாசியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உண்மை பிரதிநிதிகள் கலீபாக்கள் ஆவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் இடையில் உள்ள உறவு புனிதமானது, அது மனிதனுக்கு இவவுலக பிறவிப்பயனை அடைவதற்கு வழிகோலுவதன் மூலம், நிரந்தரமான மறுஉலக ஈடேற்றத்தை பெற்றுத் தருகின்றது.

எமது, எமது அன்பிற்குரியவர்களது ஆரோக்கியமான சுகவாழ்வு, ஆசைகள், தேவைகள் அடையப்பெற்ற வளமான வாழ்வு, பிரச்சினைகள், கவலைகள், தொல்லைகள், கடன்கஷ்டங்களில்,நோய் நொடிகளில் இருந்து விடுதலை எல்லாவற்றையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தனித்தனியாக துஆக்கள் பிரார்த்தனைகள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு நாம்செய்கின்ற எமது பர்ழான, நபிலான வணக்க வழிபாடுகள், குரான் பாராயணங்கள், திக்ருகள், அவ்ராதுகள் போன்றவற்றால் அல்லாஹாவை அஞ்சிக் கெஞ்சி அவனது அருகாமையை நாங்கள் ஆசித்துக் கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ்வின் அருகாமை நாடி, அவனது தூதரின் ஷபாஆத்தை நாடி வசதியுடையோர் புனித மக்கமா நகர், மதீனா மாநகர் செல்கின்றோம், வழமைக்கு மாறாக எல்லா தொழுகைகளையும் நேரத்துக்கு இமாம் ஜமாத்துடன் ஹரம்ஷரீப்களில் நிறை வேற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றோம்.

அல்லாஹ்விற்கும் அடியானுக்குமிடையில் உள்ள உறவு அத்தகைய வழிகளில் பலப்படுத்தப்படும் பொழுது எமது ஆன்மீக அந்தஸ்துகள பக்குவங்கள் அதிகரிக்கின்றன, அல்லாஹ்வின் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருகாமை, அணுக்கிரகம் என்பவற்றை நாம்அடைந்து கொள்கின்றோம்.

உண்மையில் அவ்வாறு நாம் அடைந்து கொள்கின்ற ஆன்மீக பண்பாட்டு பயிற்சிகள் அந்தஸ்துகள் எமக்கும் அடியார்களுக்குமிடையில் உள்ள உறவுகளில் பிரதி பலிக்கின்ற பொழுது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அன்பு, அருள், அருகாமை, அணுக்கிரகம் என்பவை இன்னும் பன்மடங்காக எமக்கு கிடைக்கின்றன.

ஒரு அடியான் மற்றுமொரு அடியானின் உதவி ஒத்தாசையில் இருக்கு மட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவனுக்கு துணையாக இருக்கின்றான், மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள் மனிதர்களுக்கு அதிகம் பயனுள்ளவர்கள், ஒருவரின் இவ்வுலக நெருக்கடியில் உதவுவர்களின் மறு உலக நெருக்கடிகளில் இருந்து விடிவு கிடைக்கின்றது என்றெல்லாம் இனிய இஸ்லாம் எமக்கு கற்றுத்தந்துள்ளது.

ஏழை எளியவர்களுக்கு, தேவையுடையோருக்கு, விதவைகள் அனாதைகளுக்கு, பசிபட்டினியில் வாடுவோருக்கு, கடன்கஷ்டங்களில் இருப்போருக்கு, அங்கவீனர்களுக்கு, கல்வி தொழில் தேடுவோருக்கு என கைகொடுத்து உதவி ஒத்தாசை நழ்குவோர் ஆயுளில், செல்வத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் பறக்கத்து செய்வதாக வாக்குறுதியளித்துள்ளான்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் எமது தனிப்பட்ட உறவுகளை பலப்படுத்திக் கொள்வது போலவே எமது, குடும்ப, சமூக,தேசிய வாழ்வில் நாம் அல்லாஹ்வின் அடியார்களுடனான உறவுகளையும் பலப்படுத்திக் கொள்தல் மூலம், அவர்களின் அன்பை இதயசுத்தியுடனான துஆக்களை வென்று கொள்வதோடு எல்லாம் வல்ல ஏகனாகிய அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், அருகாமையையும் நாம் அடைந்து கொள்ள முயற்சிப்போமாக.

இறையச்சமும் உளத்தூய்மையும் அடைவுகளை நோக்கி எம்மை உந்துகின்ற உள்ளுணர்வுகளாகும், இறையச்சம் (தக்வா) உளத்தூய்மை (இக்லாஸ்) இந்த இரண்டு பண்புகளும் ஒவ்வொரு தனிமனித ஆன்மாவினையும் புனிதப்படுத்துகின்ற பண்புகளாகும் என்பதனைஅறிந்து வைத்திருக்கின்றோம்.

"தக்வா" நன்மைகளை செய்வதற்கும், தீமைகளை தவிர்ந்து கொள்வதற்கும், "இக்லாஸ்" உளத்தூய்மை அவற்றை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்தியை ஈருலகிலும் பெற்றுக் கொள்வதற்கும் வழி கோலுகின்றன.

தனிப்பட்ட வாழ்வில்,குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் அல்லது பொது வாழ்வில் அவை பிரதிபலிக்கின்ற பொழுது மறு உலக வாழ்வில் நாம்அடையப் பெறுகின்ற ஈடேற்றங்கள் போன்றே இவவுலக வாழ்வில் பல்வேறு சிறந்த அடைவுகளை நாம் கண்டு கொள்கின்றோம்.

இதை வேறு ஒரு கோணத்தில் தெளிவுபடுத்துவதாயின் இந்த உயரிய ஆன்மீக பக்குவம் இல்லாத பொழுது இறையச்சமும் நாம் கடமைக்காகவும், பேர், புகழுக்காகவும்,சிலவேளை வேறு வழியின்றியும்,அழுத்தங்களின் பேரிலும், தர்ம சங்கடங்களுக்காகவும், சமூக அந்தஸ்துக்களுக்காகவும் அல்லது எல்லோரும் செய்கின்றார்களே நாங்களும் செய்யாவிட்டால் குறை வருமே என்றெல்லாம் இதயசுத்தியில்லாது பகட்டுகளுக்காக நாம் காரியங்களை ஆற்றத் தலைப்பட்டு விடுகின்றோம்.

மேற்சொன்ன புறக்காரணிகளின் அழுத்தங்கள் இல்லாத பொழுது; நாம் தனிமையில் அல்லது சமூகத்தை தேசத்தை விட்டும் தூரமாகி இருக்கின்ற பொழுது நாம் செய்ய வேண்டிய நற்பணிகளை அறப்பணிகளை செய்யாது தப்பித்துக் கொள்கின்ற மன நிலை மிகைத்து விடுவதால் எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்க தலைப் பட்டு விடுவோம்.

இவ்வாறான இதய சுத்தியில்லாத செயற்பாடுகள் சீரும் சிறப்புமாக, கண்ணும் கருத்துமாக,அவதானமும் கரிசனையும், அடைவுகள் குறித்த அக்கறையும் இல்லாத, சிலவேளை அடையாளங்களை முதன்மைப் படுத்திய முழுமையடையாத கருமங்களாக மாறிவிடுகின்றன. அதனால் ஈருலகிலும் கிடைக்கக் கூடிய அளப்பரிய நன்மைகளை நாம் இழந்து விடுகின்றோம்.

எல்லோரும் நித்திரையில் இருக்கும் பொழுது நாம் தனித்து எழுந்து அல்லாஹ்வை தஹஜ்ஜுதில் வழி படுகின்ற பொழுது முழுமயான இறை உணர்வும் உளத் தூய்மையும் அவற்றின் உச்ச கட்டத்தில் இருக்கின்றன.

எமது தொழுகை, எமது நோன்பு எமது சக்காத்து, சதக்கா எமது ஏனைய நபிலான வணங்க்கங்கள் எமக்குப் பெற்றுத் தருகின்ற உயரிய ஆன்மீக பயிற்சிகள், இறையச்சம், உளத்தூய்மை மனதை ஒருமுகப் படுத்துகின்ற பயிற்சி எமது சோதனைக் களமான துன்யாவின் விவகாரங்களில் பிரதிபலிக்கின்ற பொழுதே மறுமையிலும் எமக்கு ஈடேற்றம்கிடகிக்கின்றது.

அடையாளங்களுக்கு அப்பால் அடைவுகளை முன்னிலைப் படுத்துகின்ற தனி நபர்களாக,குடும்பங்களாக, குழுக்களாக சமூகங்களாக நாங்கள் மாறுகின்ற பொழுது தாஜ்ஜல்களும் போலிகளும் தோற்றுப் போகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -