தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலிகிதர் தர சேவையில் உள்ள கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து புதியதோர் சுதந்திர உத்தியோகஸ்த்தர்கள் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் முதலாவது நிறைவேற்றுக்குழு கூட்டம் அண்மையில் பல்கலைக்கழக குழு அறையில் இடம்பெற்றபோது அதன் தலைவர் ஏ எம் அன்வர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.
அவர் மேலும் தமதுரையில் தெரிவிக்கையில்;
காலத்தின் அவசியத் தேவை கருதி தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எமது தொழில்சங்கமானது எமது அங்கத்தவர்கள் அனைவரினதும் தொழில் ரீதியான சகல உரிமைகளுக்கும் பாதுகாப்பளிக்கும் வண்ணம் ஒரு முன்னுதாரணமாக செயல்படும். நாம் கடந்த 4 வருட காலமாக இயங்கி வந்த போதிலும் அதன் உத்தியோகபூர்வ பதிவு தற்போதுதான் நிறைவடைந்துள்ளது. அதற்ட்காக உழைத்த ஆரம்ப உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
எதிர்வரும் 30ஆம் திகதிவரை அங்கத்தவர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு தனிப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் புதிய விண்ணப்பங்கள் வழங்க வேண்டும்.
அத்துடன் எவருக்கும் தனிப்பட்ட சலுகைக்காக அலைவதை விடவும் எமது அடிப்படை விடயங்கள் நோக்கி நாம் பயணிக்க வேண்டி இருக்கிறது. மட்டுமல்லாது எந்த ஒரு தனிப்பட்ட நபரினதும் தொழில் தொடர்பான அநீதி இழைக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அவ்வாறான அநீதிகளை தட்டிக்கேட்கும் அமைப்பாக இது இருக்கும்.
அது மாத்திரமல்லாது எமது பல்கலைக்கழகத்தில் பல்லின சமூங்கத்தவர்கள் பல மொழிகளுடன் வாழுகின்ற இடமாகும் அதற்கேற்ற வகையில் மொழி ரீதியாக பல்வேறுபட்ட பயிற்சி நெறிகளுடன் எம் ஒவ்வொருவரையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. மொழியால் பண்பாட்டினால் அன்றாட நடைமுறையினால் மாற்று மத சகோதர்களுடனான புரிந்துணர்வுடன் எமது தொழில் வாழ்க்கை முறைக்கு எமது அனைத்து உறுப்பினர்களையும் முன்னோக்கி பயணிக்க எதிர்காலத்தினை நாம் திட்டமிட்ட அடிப்படியில் எமது சங்கத்தினை மிகவும் சுதந்திரமாக கொண்டுசெல்ல உத்தேசித்துள்ளோம்.
அத்துடன் எமது நியாயமான கோரிக்கைகளை எமது பல்கலைக்கழக அதிகாரிகளுடன் சுமூகமாக பேசி நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதுதெடர்பில் விரைவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவேண்டும்.
எமது செயல்பாடுகள் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் அரசுக்கும் எந்தவித இடையூறு இல்லாமலும் இருப்பதை விரும்புகிறோம். எமது அங்கத்தினர்களும் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு ஆட்படாமல் இருப்பதற்கு பழகிக்கொள்ளவேண்டும். அதேவேளை எந்த ஒரு உறுப்பினருக்கும் அநீதி இழைக்கப்படுவதற்க்கும் இடமளிக்க முடியாது.
ஊழியர்களுக்கான தொழில் பயிற்சிகள் ஆக்கத்திறன் செயல்பாடுகள் விருத்தி, பண்பாட்டுப் பயிற்சி என்பன விரிவான முரையில் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்தவகையில் வெளிநாட்டுகளில் உள்ள நன்கு வளர்ச்சியடைந்த பல்கலைக்கழக நடைமுறைகளை நேரடியாக சென்று பார்வையிடுவதன் மூலம் புதுமையான சிந்தனைகளை எமது பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்கித்தருமாறும் எமது அதிகாரிகளை கோர உள்ளோம் என்றும் தலைவர் தனதுரையில் தெரிவித்தார்.
