ஜெனீவாவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதங்களை செய்து தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் செயற்பாட்டு ரீதியாக இயங்கவில்லை. அவ்வாறான நிலையில் இந்த சபையிலே சில உத்தரவாதங்களை பிரதமர் வழங்கியுள்ளார்.
தமது சொந்தஉறவுகள் காணாமல்போகச் செய்யப்பட்டதை கண்டறிவதற்கான உத்தரவாதங்களே அவ்வாறு வழங்கப்பட்டிருகின்றன.
2009இல் யுத்தம் நிறைவடைந்துள்ளது. தற்போது எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவ்வாறான நிலையில் நிலைமாறு கால நீதி தொடர்பான பொறிமுறையை அமுலாக்குவதற்கு இந்த அலுவலகத்தினை ஸ்தாபித்தலானது முதற்படியாக அமையும் என கூறப்பட்டது.
2015 ஒக்டோபர் மாதம் ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக நிலைமாறு கால நீதியின் உள்ளடக்கங்களான உண்மை மற்றும் மீளிணக்காக செயற்படல், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல், காணாமல் போனவர்கள் சம்பந்தமான விடயத்திற்கு தீர்வளித்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
சிறுபான்மை குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்ற வகையில் நான் குற்றத்திலிருந்து தப்புவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
ஆனால் இந்த காரியாலயத்தினை தாமதப்படுத்தும் நிலைமைகள் இங்கு தொடர்வதை பார்க்கின்றபோது கட்சி சார்பான விருப்புக்களும், அரசியலும் தான் அத்தாமதத்திற்குப் பிரதான காரணங்களாக இருக்கின்றன.
தற்போதைய ஆட்சியில் உள்ள அரசாங்கம் தனியானதொரு கட்சி அரசாங்கம் அல்ல. பல்வேறு கட்சிகளின் கூட்டாக காணப்படுகின்றது. அதேநேரம் அரசாங்கத்தின் ஒரு கட்சியிலிருந்து பகுதியாக பிரிந்து சென்று கூட்டு எதிர்க்கட்சியாகவும் இருக்கின்றனர். அவர்கள் இந்த விடயத்தில் சில கணிசமான வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறையும் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில் உலக வல்லரசுக்கு புதிய ஜனாதிபதியொருவர் வந்திருக்கின்றார். அவர் மனித உரிமைகள் விடயத்தில் கடுமையான நிகழ்ச்சி நிரல்படுத்தி அவதானிப்பவர் இல்லை. ஆகவே மனித உரிமைகள் விடயத்தை சற்று தாமதப்படுத்தலாம். அல்லது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என நாம் எண்ணமுடியாது.
குற்றவியல் சட்டங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டமை குற்றவியல் குற்றங்களுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
அவ்வாறிருக்கையில், காணிப்பிரச்சினையும் நிலைமாறு கால நீதிக்குள் தான் வருகின்றது. வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் இராணுவ, கடற்படை, விமானப்படை முகாம்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான பகுதிகளில் உள்ளன. அங்கு சில நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் மினுங்குகின்றன.
வலிகாமம் வடக்கிலே சில காணிகள் விடப்பட்டிருக்கலாம். ஆனால் தோப்பூர் கிராமத்திலே என்ன நடக்கின்றது.
அங்கு பத்துவீட்டுத்திட்டம் இருக்கின்றது. அங்குள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு நான் கோரினேன். நேரடியாக சென்று அந்த இராணுவ முகாமை நீக்குமாறு கோரினேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இருப்பினும் அதில் தாமதங்களே காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை இந்த உயரிய சபையில் மீண்டும் குறிப்பிடுகின்றேன் என்றார்.