சாக்கடையை சந்தணம் என்று நம்பியது தவறு-பதிலளிக்கப்படும் பதிலாக்கம்- 2

டந்த பதிவில் கூறியதுபோல் உங்களின் விளம்பரப் பசி முஸ்லிம்கள் மீது எவ்வாறான எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்துகின்றது; என்பதற்குள் செல்லமுன் உங்கள் கூலி எழுத்தாளர்கள் மூலமாக எனக்களித்த பதில்கள் தொடர்பாக சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பதிவில் ' முசலிப் பிரச்சினை தொடர்பாக இரண்டரை வருடங்கள் ஏன் ஜனாதிபதியுடன் பேசவில்லை' என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன். அதற்கு உங்களுடைய பதிலில் ' பகிரங்க விவாத நிகழ்ச்சிகளில் முழு நாடே அறியும் வண்ணம் பேசியிருக்கின்றீர்கள்; அது ஜனாதிபதியையும் பிரதமரையும் போய் அடைந்திருக்கும் ' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை எவ்வாறு பாராட்டுவதென்று தெரியவில்லை. ஆயிரம் வருடத்திற்கொருமுறை உங்களைப் போன்றதொரு புத்திசாலி இந்த உலகத்தில் பிறப்பானா? என்று தெரியவில்லை.

அப்படியானால் எதற்காக தேர்தல் கேட்கிறீர்கள் ; பாராளுமன்றம் செல்கிறீர்கள்? சகல பிரச்சினைகளையும் பகிரங்க விவாத நிகழ்ச்சிகளில் பேசி தீர்த்துக்கொள்ளலாமே? பதில் கூறுவீர்களா? அப்படிப்பேசி ஏன் பிரச்சினையைத் தீர்கவில்லை? கடைசியாக எல்லாம் கைமீறிப் போனதன்பின் சிவில் அமைப்புகளில் தொங்கிக் கொண்டு ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்று முடியாமல் செயலாளரைச் சந்தித்தது, ஏன்? தங்க மூளை உங்களுக்கு.
எது எப்படியோ, முசலி மக்களுக்காக ஜனாதிபதியிடம் இரண்டரை வருடங்கள் பேசாததை ஏற்றுக் கொள்கின்றீர்கள். முசலி மக்களும் இந்த சமூகமும் புரிந்து கொண்டால் சரி.

உங்களுடைய இன்னொரு கைக்கூலி ஊடாக எழுதிய பதிவில் ' அமைச்சராக இருந்து பாராளமன்றத்தில் பேசினால்தான் எடுபடும்' என்று எழுதியிருந்தீர்கள். அப்படியானால் சாய்ந்தமருதில் வைத்து ' முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்தால் அமைச்சுப் பதவியைத் தூக்கி வீசுவேன்' என்று ஏன் கூறினீர்கள்? அமைச்சுப் பதவி இல்லாவிட்டால் உங்கள் பேச்சு எடுபடாதே? அது மக்களை ஏமாற்றுவதற்காக கூறினீர்களா? நாமும் அதைத்தானே கூறுகின்றோம். அதனால்தானே எழுதுகின்றோம். புத்தளத்தில் வைத்து ராஜினாமா செய்வேன்; என்றீர்கள். அதன்படி எப்பொழுது ராஜினாமா செய்தீர்கள். இரண்டாம் முறையாக ராஜினாமா செய்வேன், என்று சொல்வதற்கு. ஏன் இவ்வளவு பித்தலாட்டம். இது ஏமாளிச் சமூகம் என்று நினைத்துக் கொண்டீர்களா?

அடுத்ததாக, உங்களை விமர்சிப்பவர்களை அசிங்கமான மொழியில், மூளைக்குப்பதிலாக வேறு ஏதோ ஒன்றால் யோசித்து எழுதுகின்றவர்கள் உங்கள் கைக்கூலிகள் இல்லை, உங்கள் ஆதரவாளர்கள் என்கிறீர்கள். அப்படியானால் உங்கள் ஆதரவாளர் பட்டியலில் இருப்பவர்களெல்லாம் மூன்றாம்தர மனிதர்கள்தானா? நல்லவர்கள், நாகரீகமாக எழுதக்கூடியவர்கள் உங்கள் ஆதரவாளர் பட்டியலிலே கிடையாதா? பார்த்தீர்களா! அன்று பாராளுமன்றமன்றத்தில் இளைஞர்களைக் காட்டிக்கொடுத்தீர்கள், இன்று உங்கள் ஆதாரவாளர்களையே காட்டிக் கொடுக்கின்றீர்கள். ஏன், உங்களுக்கு ஒருவனைப்பற்றி அசிங்கமாக எழுதி அடுத்தவன் பெயரில் போடுகின்ற பழக்கமே கிடையாதா? நான்தானே நேரடி உதாரணம். ஹுனைஸ் பாரூக்கை அசிங்கமாக விமர்சித்து என் பெயரில்தானே வெளியிட்டீர்கள். என்ன நடிப்பு. சிவாஜி தோற்றுவிடுவான்.

போலி முகநூலில் எழுதுவதை கணக்கெடுக்கத் தேவையில்லை; என்றும் எழுதியிருக்கிறீர்கள். நீங்களே பொய்யாக எழுதி உங்கள் போலி முகநூலில் போட்டு அதைக் கணக்கில் எடுப்பதாக காட்டி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தியதை மறந்து விட்டீர்களா? போதாக்குறைக்கு உங்கள் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர்கள் வீடியோவும் போட்டோவும் எடுக்கத்தான் லாயக்கானவர்கள் என்றும் அதனால் கூலிக்கு சில எழுதுகூலிகளை வைத்திருப்பதையும் ஒத்துக் கொள்கிறீர்கள்.

உங்களுக்கு ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் வித்தியாசம் தெரியுமா? ஒரு கருத்தை மாத்திரம் அனுமதிப்பது சர்வாதிகாரம். ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிப்பது ஜனநாயகம். நீங்கள் ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்க நினைக்கின்றீர்களா? அரசியலில் கருத்தியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சிப்பது வழக்கம் . ஆனால் உங்களிடம் பதில் கூறுவதற்கு உண்மையில்லை. செய்வதெல்லாம் களவு, பித்தலாட்டம், போடுவது வேசம், யாராவது உண்மையைக் கூறிவிட்டால் இந்த நாட்டில் எந்த அரசியல்வாதியும் செல்லாத கீழ்த்தரத்திற்கு சென்று தனிப்பட்ட முறையில் அவரைக் கீழ்த்தரமாக திட்டுவது, வசைபாடுவது. இது உங்கள் பிறப்பில் உள்ள குறைபாடா? வளர்ப்பில் உள்ள குறைபாடா, அல்லது இடையில் வந்த குறைபாடா? இந்த அசிங்கத்தை தொடர்வீர்களானால் உங்களது பாணியிலேயே நானும் பதிலளிக்க வேண்டிவரும்; என்பதை கூறிவைக்க விரும்புகிறேன்.

உங்களது தனிப்பட்ட நடத்தை, ஒழுக்கம் என்பவற்றிலிருந்து தொடங்கி பலவிடயங்களை நான் வெளியில் கொண்டுவர வேண்டி ஏற்படும். இறாலாக இருக்காதீர்கள். உங்களுடன் இருக்கும்போது எல்லாவற்றையும் ஆமோதித்துவிட்டு இப்பொழுது ஏன் எதிர்க்கின்றீர்கள்? என்று உங்களது சில கூலிகள் கேட்கின்றார்கள். மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். அவ்வாறு நான் ஆமோதித்தேனா? உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டி எத்தனை தடவைகள் உங்களுடன் சண்டை பிடித்திருக்கின்றேன்? எத்தனை தடவைகள் இரண்டு வாரம், மூன்று வாரம் உங்களுடன் பேசாமல் இருந்திருக்கின்றேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோ தபால் மூல வாக்களிப்புக்கு முன் நாங்கள் வந்தோம், என்றெல்லாம் கூப்பாடு போட்டீர்களே, நீங்களாக வந்தீர்களா? நீங்கள் வரவைக்கப்பட்டீர்களா? ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக எத்தனை தடவை சண்டை பிடித்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ், வை எல் எஸ் ஹமீட், இந்த அரசியலில் இன்றுவரை சோரம் போகவுமில்லை, யாருக்கும் தலை சொறியவுமில்லை. அவ்வாறு செய்திருந்தால் அவர் சிலவேளை உங்களைவிட சிறந்த இடத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அன்று முதல் இன்று வரை அநியாயங்கள் நடைபெறுகின்றபோது அவற்றைத் தட்டிக் கேட்கவும் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை.

2001ம் ஆண்டு ஐ தே கட்சி அரசாங்கம் ' கட்சி தாவல் சட்டமூலத்தைக்' கொண்டுவர முயற்சித்தபோது அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை கட்சியின் உயர்பீடத்தில் ரவுப் ஹக்கீம் எடுக்க முனைந்தபோது நாற்பது நிமிடம் முதலாவதாக அதனை எதிர்த்து அதில் உள்ள பாதகங்களை விபரித்துப் பேசியது வை எல் எஸ் ஹமீட்தான். அதனைத்தொடர்ந்து அந்த நியாயங்களை அடியொற்றி இன்னும் இரண்டொருபேர் பேசியதும் அந்த முடிவையே மாற்றினார் ரவூப் ஹக்கீம், அல்ஹம்துலில்லாஹ். அவ்வாறு ஒவ்வொரு பிழையையும் தைரியமாக உயர்பீடத்திலும் வெளியிலும் சுட்டிக்காட்டிப் போராடி அதற்கான விலையையும் கொடுத்தவன்தான் வை எல் எஸ் ஹமீட். ஆனாலும் அவர்கள் உங்களைப் போன்று கீழ்த்தரமாக, அயோக்கியத்தனமாக நடந்து கொள்ளவில்லை, அரசியல் ரீதியாக 12 வருடங்கள் அவர்களை நான் விமர்சித்தபோதும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தகுதி வேண்டும். உங்கள் தகுதியை உணராமல், சாக்கடையை சந்தணம் என்று நம்பி உயர்ந்த கதிரையில் அமரவைக்கப் பங்களிப்புச் செய்ததற்குரிய பரிசினைப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.

இன்று நீங்கள் எனக்கு சதி செய்யக் காரணம் என்ன? உங்களுக்கு துரோகம் செய்தேனென்று சொல்லமுடியுமா? அல்லது யாரையும் காட்டிக் கொடுத்தேன் என்று சொல்ல முடியுமா? நியாயத்திற்காக போராடும் வை எல் எஸ் ஹமீட்டின் குணத்திற்கு அவர் செலுத்துகின்ற விலை அது. எத்தனை நாளைக்கு தனது லீலைகளை வை எல் எஸ் இற்கு தெரியாமல் மறைத்து மறைத்து செய்வது. அதுவும் அவர் பாராளுமன்ற உறுப்பினரானால் இன்னும் கஷ்டமாகிவிடுமே, என்பதனால் அவரைத் தேர்தலிலும் போட்டியிட விடக்கூடாது, தேசியப்பட்டியலிலும் சதி செய்து பாராளுமன்றம் வருவதைத் தடுக்க வேண்டும். என்று நீங்கள் செய்த சதி.

இவற்றை நான் நிறுவுவதாக இருந்தால் பதுளைத் தேர்தலில் நீங்கள் ஆடிய நாடகம், கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் நீங்கள் செய்யப்போன சமூகத்துரோகத்திற்கெதிராக நான் போராடியது; என்று பல விடயங்களைப் போட்டுடைக்க வேண்டும். அவை மட்டுமா? எனக்குத் தெரியாமல் நீங்கள் செய்த எத்தனையோ லீலைகள் பற்றி இன்று நான் அறிந்திருப்பது ( தேயிலைத் தொழிற்சாலை உட்பட) என்று பல விடயங்களை நான் வெளிக் கொணரவேண்டி வரும்.
இவை அனைத்தையும் என் உள்ளத்தில் பூட்டிவைத்துக் கொண்டு முடிந்தவரை அமைதிகாக்கின்றேன். ஆனால் தொடர்ந்தும் நீங்கள் சமூகத்திற்கு செய்கின்ற அநியாயமும் அதனால் சமூகத்திற்கேற்படுகின்ற பாதிப்புக்கள், இவற்றிற்கு மத்தியில் சமுதாயத்திற்காக போராடுவதுபோல் நீங்கள் போடும் வேசம், இவற்றை நான் சுட்டிக் காட்டக் கூடாதா?

நான் கூறுவதில் உண்மை இல்லாமல் இருந்தால் தகுந்த நியாயங்களுடன் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள். அல்லது வாருங்கள் ஒரு பகிரங்க விவாதத்திற்கு. நீங்கள் சமூகத்திற்கு பாதிப்பான ஆபத்தான பேர்வழி, என்பதை இன்ஷா அல்லாஹ் நான் நிறுவுகின்றேன். அதை விடுத்து பெண்பிள்ளை போல் மூலைக்குள் மறைந்துகொண்டு, பெற்றோர்களால் ஒழுங்காக வளர்க்கப்படாத, ஹறாத்தில் உழைத்த காசைக் கொடுத்தால் எதையும் எழுதுகின்ற, முன்னுக்கும் பின்னுக்குமுள்ள முரண்பாடுகளையே புரிந்துகொள்ள முடியாத சிலரை வைத்து அபாண்டங்களை எழுதி வை எல் எஸ் ஹமீட்டின் குரலை அடக்கலாம்; என நினைக்காதீர்கள் . அது பகல் கனவு.

அன்று முதல் இன்று வரை அநியாயத்திற்கெதிராக ஒலித்துவரும் இந்தக் குரல் அதற்காக இத்தனை விலைகளைச் செலுத்தியதன் பின்பும் உங்களது ஊடக அநாச்சாரங்களுக்கு பயந்து அது மௌனித்து விடாது. அல்ஹம்துலில்லாஹ், இன்ஷா அல்லாஹ். எனது இந்த சமூகத்திற்கான போராட்டத்திற்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி தருவதற்கு படைத்தவன் போதுமானவன். ஆனால் உங்களுக்கு தேவைப்படின் உங்கள் பாணியில் பதிலளிக்கத் தயார்.

இஸ்லாத்தில் யுத்தம் வரவேற்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் அநியாயக் காரர்கள் யுத்தத்திற்கு வரும்போது பதில் யுத்தத்திற்கு அனுமதி உண்டு. இது பேனாமுனை யுத்தம். ஜனநாயக யுத்தம். சத்தியத்தை நிலை நிறுத்துவதற்கான யுத்தம். சமூகத்தை அரக்கர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கான யுத்தம். வை எல் எஸ் ஹமீட்டின் பேனாவின் முழுவீச்சை இதுவரை நீங்கள் பார்த்ததில்லை. பார்க்க ஆசைப்படாதீர்கள், பரிதவித்துப் போய் விடுவீர்கள்.

வை எல் எஸ் ஹமீட்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -