ஐ.ஏ.காதிர் கான்-
வெசாக் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, மே 10 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு, மினுவாங்கொடை நகர மையம் வெசாக் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், இம்முறை இப்பிரதேசத்தில் வெசாக் வாரம் கொண்டாடப்படுவது விசேட அம்சமாகும்.
மினுவாங்கொடை நகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகம், வைத்திய சாலை, பொலிஸ் நிலையம் உள்ளிட்ட அரச தனியார் வங்கிகள், வியாபார நிலையங்கள் என்பன இணைந்து இதற்கு அனுசரணை வழங்குகிறது. இதேவேளை, மினுவாங்கொடை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியன, பெளத்த விகாரைகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
வெசாக் பந்தல்கள், கூடுகள், வெளிச்ச அலங்காரங்கள் என்பன, கட்டுநாயக்க விமான நிலையம், நீர்கொழும்பு, குருநாகல், நிட்டம்புவ, கம்பஹா, கொழும்பு ஆகிய வீதிகளில், இம்முறை மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெசாக் பந்தல்களைப் பார்வையிட வரும் பக்தர்களுக்கு, தான சாலைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், திவுலப்பிட்டிய இ.போ.ச. டிப்போவினால் இரவு நேர விசேட போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.