வடகிழக்கில்அச்சுறுத்தி வந்த பயங்கரவாத செயல்களை வீரமிக்க தலைவனாக போராடி வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்சவை முஸ்லிங்கள் உயர்ந்த இடத்தில் கௌரவமாக வைத்திருந்தபோதும் முஸ்லிங்களுக்கு எதிராக இனவாதிகள் தலைவிரித்தாடிய போது கண்டும்காணாமல் இருந்ததால் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் மஹிந்த அரசுக்கு எதிராக மாறியதை இந்த நல்லாட்சியின் பங்காளிகளும் மஹிந்த அரசில் முக்கிய பதவியிலிருந்து மௌனம் காத்த இந்நாட்டின் ஜனாதிபதியும் நன்றாக அறிவர்.
தேர்தல் காலங்களில் இந்த நல்லாட்சிகொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்காமல் பிரச்சினைகளை அதிகரித்துக்கொண்டே செல்வது மிகவும் வேதனையான ஒன்றாகும்.
முக்கிய விழா ஒன்றில் மாட்டிறைச்சிக்கதையை சம்பந்தமே இல்லாமல் பேசிய ஜனாதிபதி நாட்டுமக்கள் தன்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு தானே கேள்வி எழுப்பிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து வில்பத்து பிரச்சினைக்கு எந்த ஆலோசனைக்களுமின்றி தனது பதவியின் உச்சத்தை பயன்படுத்தில் வெளிநாட்டில்வைத்து ஒப்பமிட்டதன் மூலம் தனது பெயருக்கு இருந்த மதிப்பை குறைத்துக்கொண்டார்.என்பது எதார்த்தமான உண்மையே.
மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்த பொதுபல சேனா அமைப்புக்கு இந்த நல்லாட்சியில் ராஜகௌரவமளிப்பதும் நாட்டின் முக்கிய அமைச்சரான நீதியமைச்சரே அழைத்துக்கொண்டு பவனிவருவதும்
இந்த ஆட்சிமீது மக்கள்வைத்த நம்பிக்கைக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது கிழக்கில் முஸ்லிம் சகோதரரின் காணியில் பொதுபலசெனா அமைப்பினரின் இனவாதம் மேலோங்கி இறக்காமத்தில் புத்தபெருமானின் சிலையை முஸ்லிங்களுக்கு சொந்தமான காணியில் வைக்க முக்கிய அமைச்சரே தலைமை வகித்திருப்பதும் இந்த நல்லாட்சிக்கு மக்கள் மத்தியில் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி முஸ்லிங்களின் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க தமிழர்களின் பிரச்சினை மறுபுறமிருக்க நல்லாட்சி ஊசலாடுகிறது.
இன்றைய மேதின கூட்டங்களில் ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தையும் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தையும் நல்லாட்சி அரசை ஆதரிக்கும் முஸ்லிம்கட்சிகளின் ஆதரவாளர்களையும்,தமிழ் அமைச்சர்களின் ஆதரவாளர்களையும் கூட்டுகின்ற போது கூட்டு எதிர்கட்சியினரின் சனக்கூட்டத்தை விட அதிகமில்லை என்பதே உண்மை.
முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டத்தில் பெருந்திரளான தமிழ்,முஸ்லிம் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதும் ஜனாதிபதி,பிரதமர் தலைமையிலான கூட்டங்களிலையே அதிகளவிலாலான தமிழ்,முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் சகலரும் அறிந்த உண்மையே.
இன்றைய மேதின கூட்டங்களை நோக்குகின்ற போது இப்போதும் பெரும்பான்மை இன மக்கள் மகிந்தவை தலைவராக கொண்டுள்ளார்கள் என்பது புலனாகிறது. இந்த நல்லாட்சியை தொடர்ந்தும் சுமூகமாக கொண்டுசெல்லவேண்டுமாக இருந்தால் இந்த அரசுக்கு தமிழ் ,முஸ்லிம் மக்களின் தயவு அவசியம் என்பதை இன்றைய தினம் காலிமுகத்திடலில் மஹிந்த சொல்லாமல் சொல்லியுள்ளார்.
இன்றைய தினம் அலைகடலாய் திரண்ட மஹிந்த ஆதரவாளர்கள் இந்த நல்லாட்சிக்கு எதிரானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டிய நிலையில் உள்ள நீங்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இனியாவது முன்வர வேண்டும் என்பது உங்களை தேரந்தேடுத்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
எது எப்படியாக இருந்தாலும் மஹிந்த தனது கரத்தின் பலத்தை இன்று நிரூபித்துள்ளார். சிறுபான்மை மக்களின் தயவால் ஆட்சி நடத்தும் நல்லாட்சியின் போக்கில் இனியாவது மாற்றம் வரவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை.
தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றுமொரு புரட்சிசெய்து ஆட்சி மாற்றம் கொண்டுவருவதும்,நல்லாட்சியை தக்கவைப்பதும் ஜனாதிபதி,பிரதமர் கைகளிலையே இனித்தங்கியுள்ளது.
இன்றை மேதின நிகழ்வில் உயிர்நீத்த அந்த சகோதரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நூருல் ஹுதா உமர்.