எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயமானது 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து பாடசாலைக்கு முன்பாக இன்று (7) இரண்டாவது நாளாகவும் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குறித்த அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தங்களது பாடசாலை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரினால் புறக்கனிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பெற்றோர் இன்றைய தினம் தங்களது பிள்ளைகளை பாடாசாலைக்குச் செல்ல விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது நியாயமான கோரிக்கை தொடர்பில் இது வரையில் எதுவித உறுதிமொழிகளும் கல்வித்திணைக்களம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்படாத நிலையில் சில அரசியல் தலைவர்கள் மட்டும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இப்போராட்டம் அரசியல் சார்ந்தது என வலயக்கல்விப் பணிப்பாளர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவிப்பதாக கூறிய அவர்கள் இதில் எவ்வித அரசியலும் இல்லை எனவும் தங்களது சமூகம் மற்றும் மாணவர்களின் கல்வி சார்ந்த விடயம் எனவும் குறிப்பிட்டனர்.
மேற்குறித்த விடயம் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் பொறுப்பற்ற விதத்தில் தேர்தல் பற்றி பேசுவது குறித்த விடயத்தினை திசை திசைதிருப்புவதற்கு எடுத்த முயற்சியாகும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மேலும் தெரிவித்தனர்.
பல வளப்பற்றாக்குறையுடன் செயற்படும் இப்பாடசாலை முதலில் இத்திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய ஒன்றே மாறாக இதனை புறக்கனித்து விட்டு இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஏனைய பாடசாலைகளில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படும் போதிலும், இப்பாடசாலையில் மாத்திரம் எந்தவித அபிவிருத்தி வேலைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச வாதம் காட்டாதே, நீதி வேண்டும், அநீதி இளைக்காதே, அரசியல் வாதிகளே இரட்டை வேடம் போடாதே, நல்லாட்சி அரசில் ஏழை மாணவர்களின் கல்விக்கு அநீதியா, வலயக்கல்விப் பணிப்பாளரே எமது பாடசாலைக்கு தீங்கிழைக்காதே, போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் பழைய மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நல்லதொரு தீர்வினை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.