இப்னு ஜப்பார்-
மரச்சின்னம் முஸ்லிம் காங்கிரஸின் அடையாளமாக இருப்பதனால் என்னவோ, அதில் கிளைகளாக இருந்த பலர் அதைக் கத்தரித்து, பதியமிட்டு புதிய சிறுசிறு கன்றுகளாக அங்குமிங்கும் வளர்ந்து கிடக்கின்றனர். கட்சியின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் தலைவராக இருக்கும் நேரத்தில், கட்சியுடன் முரண்பட்ட பலரை சட்டைக் கொலரில் பிடித்த வெளியில் போட்டிருக்கிறார். ஆனால், ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியில் பலர், கோபித்துக்கொண்டுதான் வெளியே போயிருக்கிறார். முன்னார் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தூக்கியெறியப்படவில்லை. இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பது வேறுகதை. ஹஸன் அலியும் தூக்கியெறியப்படவில்லை. அவர் கட்சியுடன் கோபித்துக்கொண்டிருக்கிறார்.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, உள்வீட்டுச் சண்டை பிடிப்பவர்கள் அதற்கு தாராளமாக இருக்கின்றனர் என்பது வௌ்ளிடைமலை. அந்தளவு அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதன்மூலம், ரவூப் ஹக்கீம் மென்மைத்தன்மை உடையவராக இன்றும் அடையாளப்படுத்தப்படுகிறார். இதுகுறித்து, நிந்தவூரில் நடைபெற்ற இருவேறு கூட்டங்களில் ரவூப் ஹக்கீம் கூறும்போது, "சாது மிரண்டால்", "நான் பிரம்பு எடுத்தால் கட்சியில் யாரும் இருக்கமாட்டார்கள்" என்ற வார்த்தைப் பிரயோகங்களை கையாண்டார். எதற்கும் ஒரு எல்லையுண்டு என்பதையே அந்த வார்த்தைகள் மூலம் அவர் சொல்ல விளைந்திருக்கிறார்.
தலைமை என்பவர் செவிடனாகவும், குருடனாகவும் இருக்கவேண்டும் என்று அஷ்ரப் கூறிய நிபந்தனையை ஹக்கீம் சில இடங்களில் மீறியிருக்கிறார். கட்சியை குழப்பும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சிலர்மீது கடிந்துகொள்ளும் வழக்கம் அவருக்கு இருக்கிறது. இதனால், உயர்பீடத்தில் இருப்பவர்களே எதிரிகளாக சித்தரிக்கப்படுகின்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த எதிர்ப்புகளுக்குப் பின்னால் அவரவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதையும் மறுப்பதிற்கில்லை.
ஒரு வண்டியை இரண்டு மாடுகள் சேர்ந்திழுப்பது போன்றே ரவூப் ஹக்கீமும், ஹஸன் அலியும் கட்சியை வழிநடாத்திக்கொண்டிருந்தனர். இதன்போது, காலப்போக்கில் இருவரின் கருத்துகளும் அடிக்கடி முரண்படத் தொடங்கின. ஒரு மாடு தண்ணிக்கு இழுத்தால் மற்றது தவிட்டுக்கு இழுக்கின்ற கதையாகத்தான் தலைவர் பதவியும், செயலாளர் பதவியும் காணப்பட்டன. ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கும்போதுகூட, ஒருவர் சொல்லும் விடயம் இன்னொருவருக்கு தெரியாத பிறழ்வுநிலையே காணப்பட்டது.
தலைவரினதும், செயலாளரினதும் பயணிப்புகளும் வெவ்வேறு திசைகளில் இருப்பது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல. இதனாலேயே ஒரே பாதையில் பயணிக்கின்ற ஒரு செயலாளரின் தேவை உணரப்பட்டது. இதனாலேயே, கண்டி பேராளர் மாநாட்டில் வைத்து மன்சூர் ஏ. காதிர் உயர்பீட செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும், ஹஸன் அலி அதிகாரங்கள் குறைக்கப்பட்ட செயலாளராக இருந்துவந்தார்.
தற்போது செயலாளரை நியக்கும் அதிகாரம் தற்போது தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த செயலாளரை தலையாட்டி பொம்மையாக இருந்தால் அவரை நீக்கும் அதிகாரம் கட்சியின் உயர்பீடத்துக்கு இருக்கிறது. இந்த நடைமுறைதான் ஐக்கிய தேசியக் கட்சியிலும் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதற்கு ஹக்கீம் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாரமுள்ள செயலாளர் பதவியும், தேசியப்பட்டியலும் வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால், செயலாளர் பதவியை கொடுக்க விரும்பாத ரவூப் ஹக்கீம், தேசியப்பட்டியலை வழங்குவதற்கு தயாராகவே இருந்தார், இருக்கிறார். இதுகுறித்து ஹஸன் அலியுடன் கட்சி சார்பாக பலர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். தேசியப்பட்டியலை மட்டும் ஏற்க விரும்பிய ஹஸன் அலி, பின்னர் அதனை மறுத்திருந்தார். இதன்மூலம் அவரின் பின்னால் ஏதோவொரு சக்தி இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகின்றது.
ஹஸன் அலியின் செயலாளர் பதவி வறிதாக்கப்பட்ட பின்னர், அவரது மகன் உள்ளடங்கிய குழுவினர் "கிழக்கின் எழுச்சி" என்ற கோசத்தை முன்னெடுத்து வந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கிழக்கு மாகாணத்தில் இருக்கவேண்டும் என்ற கோசத்துடன் கிளம்பிய கிழக்கின் எழுச்சி, ஹஸன் அலி கட்சியுடன் மீண்டும் இணைந்து செயற்படத்தொடங்கியபோது, அடக்கி வாசிக்கத் தொடங்கியது.
புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ் புத்தளத்தில் திறந்துவைத்த கட்சிக் காரியாலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹஸன் அலி, புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடலில் பழைய மனஸ்தாபங்களை மறந்து, கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தின்போது, கட்சியின் செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்படவேண்டும், அவருக்கு தேசியப்பட்டியல் நியமனமும் வழங்கப்படவேண்டும் அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை ஹஸன் அலி முன்வைத்தார். இதை தனக்குத்தான் வழங்கவேண்டும் என்பதை அவர் சூசுகமாக தெரிவித்திருந்தார்.
ஆனால், தேசியப்பட்டியலை வழங்குவதற்கு மாத்திரமே ஹக்கீம் இணக்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செயலாளர் பதவிக்கு பதிலாக தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தும் ஹஸன் அலி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஹஸன் அலி வருவார் என்ற நம்பிக்கையில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்காமல் ரவூப் ஹக்கீம் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார். கூடவே தவிசாளர் பதவியும் வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஷீரால் இயக்கப்படுபவர்கள் என்று கூறப்படும் மு.கா. முக்கியஸ்தர்கள் பலரின் அனுசரணையுடன் ஹஸன் அலி, தலைவரால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து உயைாற்றினார். கடைசியாக ரவூப் ஹக்கீம்தான் தலைவர் என்றும் அவரை திருத்துவதற்காகவே அன்றி, மாற்றுவதற்காக இந்தக் கூட்டம் நடாத்தப்படவில்லை என்று ஹஸன் அலி கூறியதும் ஏற்பாட்டாளர்கள், கட்சி இரண்டாக பிளவுபடும் என்று மேடை முன்னால் குழுமியிருந்த மு.கா. அதிருப்தியாளர்கள், மாற்றுக்கட்சிக்காரர்கள் என அனைவருமே மூக்குடைபட்டுப் போனார்கள்.
நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் அன்சில் ஏற்பாடு செய்திருந்தார். பாலமுனை தேசிய மாநாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கட்சியின் மேடை மற்றும் கொடிகளை இந்தக் கூட்டத்துக்கு அன்சில் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் கொடுக்கக்கூடாது என்று தலைவரிடம் கூறியவர்களே, இன்று அவருக்காக குரல்கொடுக்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதானது நகைப்புக்குரிய விடயம்.
மறுநாள் ஹஸன் அலி சகோதரர் ஜப்பார் அலி அதே நிந்தவூரில் ஹக்கீமை அழைத்து ஒரு கூட்டத்தை நடாத்தியிருந்தார். "ஹஸன் அலி மனவேதனையுடன் இருக்கிறார். அவர் கூட்டம் நடத்துவதை அமோதிக்கிறேன். ஆனால், சிலர் அவரை பகடையாக வைத்து சித்து விளையாட்டுக் காட்டுவதை அனுமதிக்க முடியாது என்று ரவூப் ஹக்கீம் இந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார்.
ஹஸன் அலி மற்றும் ரவூப் ஹக்கீம் இருவரின் கூற்றையும் வைத்துப் பார்க்கும்போது, இருவரும் மோதிக்கொள்ளவில்லை என்பது தெளிவாக விங்குகின்றது. ஆனால், இதன் பின்னணியில் சில மு.கா. அதிருப்தியாளர்கள் இருப்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. ஹஸன் அலியின் கூட்டத்தை மு.கா. அதிருப்தியாளர்கள் கொண்டாடினார்களோ இல்லையோ, மாற்றுக்கட்சிக் காரர்கள் தலையில் வைத்துக் கொண்டாடினார்.
ரவூப் ஹக்கீமை பொறுத்தவரை, அவர் ஹஸன் அலியை இன்னும் உயர்வாகவே மதிக்கிறார் என்பது அவரது செயற்பாடுகளிலிருந்து விளங்குகின்றது. நடப்பாண்டுக்கான உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்த அவர், அதை முழுமையாக அறிவிக்காமல் இன்னும் சிலருக்கு இடங்களை வைத்துக்கொண்டிருக்கிறார். அதில் ஹஸன் அலியின் பெயரும் இருப்பதாக ஒரு தகவல். ஹஸன் அலி வெறுமனே உயர்பீட உறுப்பினராக வருவதை விரும்பாமல், தவிசாளர் பதவியை கொடுத்து அவரை அலங்கரித்து வைப்பதற்காக காத்திருக்கிறார். பஷீருக்கு மூடப்பட்டிருக்கும் கதவு ஹஸன் அலிக்காக திறந்திருக்கிறது.
கட்சியினால் இடைநிறுத்தப்பட்டுள்ள பஷீர் சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைப்பதற்கு அழைப்பு விடுத்துவருகிறார். திரைமறைவில் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடனும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பஷீர் சேகுதாவூத் ஹஸன் அலியின் நிந்தவூர் மேடையில் ஏறுவார் என்று பலர் காத்திருந்தாலும் அது நடைபெறவில்லை. அப்படி நடந்திருந்தால், இருவரும் தேசியப்பட்டியல் கிடைக்காத காரணத்தினால்தான் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் என்பதை அவர்களாக வாக்குமூலம் கொடுப்பதாக அது அமைந்துவிடும்.
ஆனாலும், பஷீர் சேகுதாவூதின் தூதுவர்கள் நிந்தவூர் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். பஷீரும் ஹஸன் அலியும் பொதுவெளியில் ஒன்றுசேர்ந்தால் அவர்களது போராட்டத்தை அவர்களாகவே மலினப்படுத்துவதாக அமைந்துவிடும். அதை இவர்கள் இப்போதைக்கு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கவும் முடியாது. ஹஸன் அலி தனக்குரியது கிடைத்தால் ஒதுங்கிவிடும் நிலையில் இருக்கிறார். ஆனால், பஷீர் பலிவாங்கும் படத்தில் இருக்கிறார். இந்நிலையில் இருவரும் கூட்டிணைவது என்பதும் இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
கூட்டு எதிர்க்கட்சி மூலம் பஷீர் சாதிக்க நினைக்கும் விடயங்கள் யாருக்கும் தெரியாமலில்லை. தனக்கென ஒரு வாக்கு வங்கியை வைத்திருக்காத பஷீர், மு.கா. மூலம் தனக்கு கிடைக்காத ஒரு அரசியல் அந்தஸ்தையே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவதில்லை என்று அறிவித்தவர் எப்படி மீண்டும் அரசியலுக்குள் வருவார் என்று நீங்கள் கேட்கலாம். மு.கா. மூலம் தனக்கு தேசியப்பட்டியல் கிடைக்காது என்று நன்கறிந்த பின்னர்தான், பஷீர் அந்த அறிவிப்பைச் செய்திருந்தார்.
2011ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற மு.கா. பேராளர் மாநாட்டில் வைத்து பஷீர், தான் இனிமேல் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். இப்படி அறிவிப்புச் செய்தவர்தான், பின்கதவால் சென்று முழு அமைச்சுப் பதவியை பபெற்று அனுபவித்துவிட்டு, தற்போது தேசியப்பட்டியல் கேட்டும் கிடைக்காத காரணத்தினால்தான் மீண்டும் இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகவே விளங்குகிறது. ஆகவே, அவர் மீண்டும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடமாட்டார் என்று சொல்லமுடியாது.
கட்சியை தூய்மைப்படுத்தப்போகிறோம் என்று வெளிக்கிளம்பியிருக்கும் அணி, கட்சியை அழித்துவிட்டு தலைமையை கைப்பற்றும் நோக்கில்தான் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. தலைவராக ரவூப் ஹக்கீமை உச்சபீடக் கூட்டத்தின்போது பிரேரித்த ஹஸன் அலி, நிந்தவூர் கூட்டத்தில்வைத்து அதனை ஆமோதித்தும் இருக்கிறார். மு.கா. அதிருப்தியாளர்களில் மிக முக்கியமான ஹஸன் அலியே, அடுத்த தலைமைக்கு யாரும் தகுதியில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளார். இந்நிலையில் யாரை தலைவராக கொண்டுவருவதற்கு இவர்கள் வேலைசெய்கிறார்கள் என்பது குறித்து அவர்களுக்குள்ளேயே ஒரு தெளிவு இல்லை.
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கிழக்கு மாகாணத்தில் அக்கட்சி தோற்கடிக்கப்படுமாயின் அது ஒரு உரிமைக்குரலின் அழிப்பாகவே பார்க்கப்படும். அஷ்ரப் எவ்வளவோ கஷ்டப்பட்டு, உயிரைத் தியாகம் செய்து வளர்த்த ஒரு கட்சியை தனிமனித நலன்களுக்காக அழிப்பதற்கு புறப்பட்டிருக்கும் கூட்டம் கட்சியின் தியாகம் பற்றி சிந்திக்கவேண்டும். ஹக்கீமைத் தவிர வேறொருவர் முஸ்லிம் காங்கிரஸை பொறுப்பெடுத்திருந்தால், கட்சியை இந்தளவுக்கு வழிநடாத்தி வந்திருப்பார் என்று நான் நம்பவில்லை.
முஸ்லிம் காங்கிரஸை கிழக்கு மாகாணத்தில் தோற்கடிக்க வைக்கவேண்டும் என்பதுததான் பஷீரின் இலக்கு என்பது அவரது செயற்பாடுகளில் தெளிவாகத் தெரிகிறது. அதற்கான காரியங்களையே அவர் திரைமறைவில் செய்துகொண்டிருக்கிறார். அவர் வெளியிடப்போவதாக கூறும் ஆதாரங்களையும் அடக்கிவாசிப்பதாக பேசப்படுகிறது. மு.கா. அதிருப்தியாளர்களும் கட்சியை தோற்கடிக்கும் நிலைப்பாட்டினைத்தான் கொண்டிருக்கிறார்கள். கட்சியை தோற்கடித்து தலைமைத்துவத்தை அகற்றவேண்டும் என்பதுதான் இவர்களது இலக்கு.
கிழக்கில் மு.கா. தோற்கடிக்கப்படுமானால், அமெரிக்காவில் ட்ரம்ப் எப்படி அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாரோ அது போன்றதொரு நிலைமைதான் கிழக்கிலும் ஏற்படும். முஸ்லிம்களின் பிரச்சினைகளை யார் கையாள்வது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவே நீடிக்கும். தங்களுக்குள் ஒரு தெளிவு இல்லாதவர்களால்எப்படி ஒரு சமூகத்துக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
கட்சிக்கு புதிய ஒருவரை தலைவராக நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டால் அவர் ஏதோ ஒரு வகையில் மாற்றுக் கட்சியுடன் அல்லது அரசாங்கத்துடன் திரைமறைவில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஒருவராகத்தான் இருப்பார். கட்சிக்காக பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத ஒருவரை தலைவராக கொண்டுவாருங்கள் என்று சொன்னால், அவர்கள் போராட்டத்தை விட்டுவிட்டு ஓட்டம்பிடித்துவிடுவார்கள்.
கட்சியைக் குழப்பவேண்டும், அதிகாரத்தை கைப்பற்றவேண்டும், மாநாடு நடைபெறுவதை நிறுத்தவேண்டும் என்று அடிக்கடி இரகசிய கூட்டங்களை நடத்தியவர்கள்தான் இந்தப் போராட்டங்களின் பின்னால் இருக்கிறார்கள் என்பது கட்சியின் போராளிகளுக்கு தெரியாமலும் இல்லை. தனிமனித நலன்களுக்காக கட்சியை அழிப்பதற்கு புறப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்துக்கு போராளிகள் எந்தளவுக்கு இடம்கொடுப்பார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். ஏனென்றால், மாற்றுக் கட்சிக்காரர்கள் பணம் கொடுத்தும் செய்யமுடியாத வேலைகளை, தொண்டர் அடிப்படையில் தானாக வந்து செய்கின்ற போராளிகள் இருப்பதுதான் முஸ்லிம் காங்கிரஸின் சிறப்பியல்பு.
(நன்றி: நவமணி 09.03.2017)