குகதர்சன்-
ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல் எனும் தலைப்பில் பாடசாலையில் அதிபர்களாக, ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களும், பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலைக்கு திரும்பி அழைத்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழா சம்பந்தமாக ஊடகவியலாளர் சந்திப்பு கல்லூரியின் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அதிபர் மேலும் தெரிவிக்கையில்!
ஓட்டமாவடியில் 1917ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திற்கே எடுத்துக்காட்டும் விதத்தில் தனது நூற்றாண்டினைக் கொண்டாடவுள்ளனர.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டு திட்டங்கள் அடங்கிய வகையில் விழா அனுஷ்டிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18 அணிகளுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடாத்தப்படவுள்ளது.
பாடசாலையின் பௌதீக வளங்களை 10 கோடி ரூபாய்கள் செலவில் அபிவிருத்தி செய்தல். பாடசாலையினை பசுமைப்படுத்துதல். பாடசாலைக்கு முக்கிய தேவையாக இருக்கிற பஸ் வண்டியினைக் கொள்வனவு செய்தல். இறுதி நாள் நிகழ்வில் பாடசாலையின் நூற்றாண்டை நினைவூட்டும் வகையில் முத்திரை வெளியிடல். அதனோடு சேர்த்து பாடசாலை வரலாற்றினைச் சித்தரிக்கும் மலர் வெளியிடல். பழைய மாணவர் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டிகளை நடாத்தல். தேசிய ரீதியில் கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடாத்துதல்.
நான்கு நாட்கள் கண்காட்சியுடனான இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அழைத்தல் போன்ற முக்கிய எட்டு அம்ச நிகழ்வோடு, மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடசாலையின் நூற்றாண்டு தினமாக நடைபெறும்.
இதன் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 19ம் திகதி மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல் எனும் தலைப்பில் பாடசாலையில் அதிபர்களாக, ஆசிரியர்களாகக் கடமையாற்றியவர்களும், அவர்களிடம் கற்ற பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலைக்கு திரும்பி அழைத்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள், காலை நேர உடற்பயிற்சிகள் ஈடுபடுவதுடன், கடந்த கால நினைவுகளை மீட்கும் அரிய வரலாற்று நிகழ்வான நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு சமூகம் தருபவர்கள் இவ்விடயம் தொடர்பாக விண்ணப்பப்படிவம் பாடசாலையில் உள்ளதால் அதனை பெற்று பூர்த்தி செய்து மிக விரைவாக வழங்க வேண்டும்.
இவ்விழாவினை திறம்பட செய்வதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அரசாங்கத்திடம் இருந்து நிதிகளை பெற்று வழங்கியதுடன், பாடசாலையின் பழைய மாணவர்களும் நிதிகளை வழங்கியுள்ளனர். இந்நிகழ்வானது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சியாக இல்லாமல் பழைய மாணவர்கள், பெற்றோர்களின் நூறாவது மகுடமாக பழைய மாணவர்கள், பெற்றோர்களின் உதவி மூலம் நடைபெறும்.
பாடசாலையின் நூற்றாண்டு விழா ஏப்ரல் மாத இறுதியில் நான்கு நாட்கள் நிகழ்வான நடைபெறும். அதில் விருது வழங்கல், லியோனியின் பட்டிமன்றம், மாணவர்களின் நிகழ்வுகள், அறிவுக் களஞ்சியம், கண்காட்சி, முத்திரை வெளியிடல், மாயாஜாலம் உட்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.