நல்லாட்சி முஸ்லிம்களுக்கு நன்றாகவே ஆப்பு வைக்கிறது. முஸலி மக்களின் மீழ்குடியேற்றத்தின் போது முஸ்லிம்கள் காடுகளை அழிக்கின்றார்கள் என்று கூறி இனவாதிகள் கூக்குரல் இட்டனர், அந்த கூக்குரலுக்கு எல்லாம் ரிசாட் பதுர்தீன் அவர்கள் இயன்றளவு பதில் கொடுப்பதற்காக போராடிவந்தார் என்பதை நாம் கடந்த காலங்களில் கண்டோம்.
பாராளுமன்றத்தில் கூட அமைச்சர் ரிசாட் அவர்கள் இது சம்பந்தமாக பேசியது மட்டுமல்ல, அது சம்பந்தமாக சவாலும் விட்டிருந்தார். அந்தனை விடயங்களும் செவிடன் காதில் ஊதின சங்கு சத்தம் போல் ஆகிவிட்டது என்பது உண்மையாகி விட்டது.
மஹிந்த அரசாங்கத்தில் இனவாதிகள் எட்டி நின்று போராடினார்கள், மைதிரி அரசாங்கத்தில் கிட்டத்தில் வந்து போராடுவது மட்டுமல்ல, ஜனாதிபதி மைத்திரிக்கு பக்கத்தில் இருந்து கொண்டு தலையணை மந்திரம் ஓதுவதைப் போல், மைத்திரிக்கு காதுக்குள் ஊதிக்கொண்டு மிக நெருக்கமாக செயல்படுகின்றார்கள் இந்த இன வாதிகள் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இனவாதிகள் ஆர்ப்பாட்டம் செய்து சாதிக்கமுற்பட்ட விடயங்கள் அத்தனையும், இன்று சத்தம் மின்றி கச்சிதமாக மைத்திரிமூலம் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது, முசலி பிரதேசத்தை காடுகளுக்குள் அமுக்கிக் கொண்ட விடயத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
மஹிந்த அரசாங்கத்தில் மீள்குடியேற்ற விடயத்தில் ரிசாட் அவர்களுக்கு பூரண சுதந்திரத்தை கொடுத்தது மட்டுமல்ல, அதற்குறிய அமைச்சையும் அவரிடம் கையளித்திருந்தார். இதனை தமிழ் அரசியல் வாதிகள் மட்டுமல்ல, முஸ்லிம் உறுப்பினர்களும் பொறாமை கொண்டு அவரை விமர்சித்த விடயங்களும் அன்று நடந்திருந்தன. அந்த பதவியை வைத்துக் கொண்டு ரிசாட் அமைச்சர் அவர்கள் அந்த பகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை செய்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதனை இன்று கூட அமைச்சர் ரிசாட் அவர்கள் மறக்கமுடியாமல் நினைவு கூறுவதையும் நாம் காண்கின்றோம்.
மைத்திரி அரசாங்கம் வந்தவுடன் எல்லா நிலைமைகளும் தலைகீழாக மாறிவிட்டன என்பதே உண்மையாகும். இப்போது மைத்திரி அரசாங்கம் தமிழ் தலைவர்களுடையவும், சிங்க இனவாதிகளுடையவும் கதைகளைத்தான் வேதவாக்காக எடுத்துக் கொண்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை காலுக்குள் போட்டு மிதிப்பதைத்தான் நாங்கள் கண்டு கொண்டு வருகின்றோம்.
அது மட்டுமல்ல மஹிந்த அரசாங்கத்தில் கருமலையூற்று பள்ளிவாசல் காணியையும், அதனோடுசேர்ந்த பள்ளிவாசலையும் புணர்நிர்மானம் செய்துதறுகின்றோம் என்று உடன் பாடு காணப்பட்ட விடயத்தை, இன்று மைத்திரி அரசாங்கம் ராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்க உத்தரவிட்டுள்ள விடயம் என்பது முஸ்லிம்களின் முகத்தில் கரியை பூசிய விடயமாகவே கருதவேண்டியுள்ளது.
மஹிந்த அரசாங்கத்தில் தம்புள்ள பள்ளிவாசலை வேறு இடத்தில் அமைத்து பள்ளிவாசலையும் கட்டித்தறுகின்றோம் என்ற போது, ஒரு இஞ்சி நிலத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று கூக்குரலிட்ட முஸ்லிம் அரசியல் வாதிகள் இன்று பெட்டிப் பாம்பாக அடங்கிக் கொண்டு, அந்தப்பக்கமும் எட்டிப்பார்க்காமல் எட்டி நிற்பதையும் காண்கின்றோம்.
இப்போது, தம்புள்ளை பள்ளி நிர்வாகம் அநாதைகள் போல், எவர் அன்று இனவாதம் பேசி அதற்கு எதிர்ப்பு தெறிவித்தாரோ, அந்த சம்பிக்க ரணவக்கவிடம் பிச்சை கேட்பதை போல், அவரிடம் வேறு இடம் கேட்டு அலைவதை கண்ணால் கண்டு ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அது மட்டுமல்ல கிழக்கிலே புத்தர் சிலை வைப்பதிலிருந்து,... கிழக்கிலே புத்த சின்னங்கள் அழிக்கப்படுவதாக கூறி ஞானசாரவை அதன் தலைவராக நியமித்தது வரை,... மைத்திரி அரசாங்கம் முஸ்லிங்கள் விடயத்தில் இனவாதிகளின் கைக்கூலியாக செயல்படுகின்றார் என்பதே உண்மையாகும்.
இந்த நிலையில் அரசியல் யாப்புத்திருத்தம் என்ற போர்வையில் இன்னும் என்ன என்ன திட்டங்களை மைத்திரி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்போகின்றதோ என்ற அச்சம் எழுப்பப்படுவதில் நியாயம் இல்லாமலும் இல்லை. இந்த நிலையில், நமது அரசியல் தலைவர்களும், அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், (பேச்சுப்போட்டியில் பரிசு பெறும் நோக்கத்தோடு பேசும், பாடசாலை மாணவனைப் போல்) பாராளுமன்றத்தில் பேசிவிட்டு பரிசு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்திருப்பவர்கள் போல் இருக்கின்றார்கள்.
மாறாக நாம் பாராளுமன்றத்தில் பேசுகின்றோமே அதற்கு யாராவது பதில் அளிக்கின்றார்களா..? அல்லது பிரதமரோ, அல்லது அதனோடு சம்பந்தபட்ட அமைச்சரோ அதற்கு பதில் தறுகின்றார்களா..? என்று கூட கேட்டுப் பெறுவதற்கு வக்கில்லாத சொரணையில்லாத உறுப்பினர்களாக நமது காவலர்கள் இருப்பதை பார்த்து கவலைப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
மஹிந்தவை வீழ்த்தி விட்டோம், அது ஒன்றே போதும் என்று சில வங்ரோத்து பிடித்த முஸ்லிம்கள் இன்றும் பழய புராணத்தையே பாடிக்கொண்டிருப்பதை பார்த்து மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. மஹிந்தவும் அவரது சகோதரர்களும் அன்று முஸ்லிம்களுக்கு நடந்த தவறுக்கு, இன்று பல இடங்களிலும் வருத்தம் தெறிவித்து வருவதையும், அதே நேரம் இந்த இனவாதிகள் எங்களை வீழ்த்த பயன்படுத்தப்பட்ட மேற்குலகின் ஏஜண்டுகள், இவர்களை நாங்கள் கவணிக்காது விட்டது நாங்கள் செய்த தவறுதான் என்று பகிரங்கமாக கூறியும் வருகின்றார்கள்.
அது மட்டுமல்ல மக்கள் சக்தியும் அவர்களிடம்தான் குவிந்தும் கிடக்கின்றது, அத்தோடு இன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை தட்டிக்கேட்கும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அவர்கள்தான் இருந்தும் வருகின்றார்கள். நமக்கு மைத்திரி அரசாங்கம் செய்யும் அநியாயங்களை மஹிந்தவோடு நாம் இணைந்து தட்டிக்கேட்க துவங்கினால் மட்டுமே நாம் சில தீர்வுகளை பெறலாம். மஹிந்தவோடு முஸ்லிம்கள் சேரமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் இந்த மைத்திரி அரசாங்கம் எமக்கு இவ்வளவு அநியாயங்களையும் தைரியமாக செய்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.
ஆகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் எந்த தீர்வையும் நாம் பெற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தங்களது பட்டம் பதவிகளை காப்பாத்திக் கொள்வதற்காக பிர்அவுனிடமும் தஞ்சம் அடைவதற்கு தயங்க மாட்டார்கள். இவர்களை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். முஸ்லிம் மக்கள் இதற்கு தீர்க்கமான முடிவை எடுக்கத் தவறினார்கள் என்று சொன்னால் பல இழப்புக்களை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வரும் என்பதுதான் உண்மையும் ஜதார்த்தமும் ஆகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.